பரிந்துரைகள் மறுக்கப்பட்டால் மாற்று யோசனைகள்! அமொிக்கா எச்சரிக்கை!


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில், ஏனைய உறுப்பு நாடுகளுடன் இணைந்து மிச்சேல் பச்லெட்டினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. 

இதன்போது இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை நேற்று ஐக்கிய நாடுகள் சபையினால் பகிரங்கப்படுத்தப்பட்டது.

இந்நிலையில்,  ஐ.நாவின் அறிக்கையை மேற்கோள்காட்டி, வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் குழுவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகக் கூறியிருக்கும் அந்தக் குழு,

குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறும் பட்சத்தில், ஐக்கிய அமெரிக்காவும் ஏனைய உறுப்பு நாடுகளும் இணைந்து ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் ஏனைய மாற்றுவழிகளை நடைமுறைப்படுத்த முற்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

No comments