சட்டவிரோதமான தூபி அகற்றப்படவேண்டியது ஒன்று! துணைவேந்தர்


யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தது எனவும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்படவேண்டியதொன்று எனவும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா தெரிவித்தார்.

அத்துடன் அந்த தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய தூபிகளையும் அகற்றியிருப்பார்கள் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்றிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவாலயம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்து அழிக்கப்பட்டது.

இதனையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ் பல்கலைக்கழகம் என்பது  அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்றுநிரூபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை.

எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்ட தன் அடிப்படையிலேயே அதனை அகற்றியிருந்தேன்.

அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்ட குறித்த தூபியினை அகற்ற தவறி இருந்தால் ஏனைய தூபிகளையும் அகற்றியிருப்பர். இவ்வாறு சட்டபூர்வமில்லாது அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றுமாறும், அவற்றை அகற்றிவிட்டு எழுத்து மூலம் அறியத்தருமாறும் இந்த தகவல் தங்களுக்கு புலனாய்வு மூலம் கிடைத்ததாக கூறப்பட்டது.

உரிய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவித்திருந்த நிலையிலேயே அகற்றப்பட்டுள்ளது.

அதனால் இந்த விடயத்தை பராமரிப்பு தரப்பினருக்கு அனுப்பியிருந்தேன். இதனை வைத்துக்கொண்டிருக்க முடியாது. அகற்றப்படவேண்டிய விடயம். சிறிதான எதனை கட்ட வேண்டுமென்றாலும் உரிய அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் என்று உள்ளது எனத் தெரிவித்தார்.

No comments