எழுவர் விடுதலையில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவு!


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் விரைவில் விடுதலை ஆகும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜனவரி 29) அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் முதல்வரும் அமைச்சர் ஜெயக்குமாரும் ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தனர்.

ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முடிவை ஆளுநருக்கு நினைவூட்டிய முதல்வர், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் அதுகுறித்து முடிவெடுக்கப்பட்டதை எடுத்துக் கூறினார். இது தொடர்பாக விரிவான கருத்துரையையும் ஆளுநரிடம் முதல்வர் எழுத்து பூர்வமாக வழங்கினார்.

பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைத்து, தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9- ஆம் தேதி தீர்மானித்து அந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் அதன் மீது ஆளுநர் எந்த முடிவும் மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுவிட்டார்.

இதற்கிடையில் தனது விடுதலை குறித்து தொடர் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டு வரும் பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி நாகேஸ்வர ராவ், தலைமையிலான அமர்வின் முன் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு பரிந்துரைத்த தீர்மானம் குறித்து 3 அல்லது 4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் “ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் பத்து நாட்கள் ஆகும் நிலையில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் இதுகுறித்து தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகளும் அழுத்தங்களும் வர ஆரம்பித்தன. ஆளுநர் முடிவெடுக்காத நிலையில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5சதவிகிதம் இடை ஒதுக்கீட்டுக்கு எப்படி மாநில அரசு அரசாணை பிறப்பித்ததோ அதே போல இந்த விஷயத்திலும் பிறப்பிக்க வேண்டும் என்றும் யோசனைகள் முன் வைக்கப்பட்டன.

இந்த சூழலில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேற்று இரவு 8 மணியளவில் சந்தித்தார். அப்போது முதல்வருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், முதல்வரின் செயலாளர் சாய்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆளுநரை சந்தித்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “ஆளுநரை முதல்வர் நேரில் சந்தித்து ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று விளக்கிச் சொன்னார். அதுகுறித்த மனுவையும் ஆளுநரிடம் கொடுத்தார்.முதல்வர் விளக்கியதைக் கேட்டுக் கொண்டு, மனுவை படித்துப் பார்த்துவிட்டு ஆளுநரும் நல்ல முடிவெடுப்பதாக ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார்” என்று கூறினார்.

 

No comments