யாரைத்தான் நம்புவது? பனங்காட்டான்


இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் இரண்டரை நாட்கள் இலங்கை விஜயம் எதற்கானது? ஐக்கிய இலங்கைக்குள் தமிழரின் அபிலாசைகளுக்கு தீர்வு காண இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக அறிவித்த இவர் இறுதியாக கூட்டமைப்பினரை சந்தித்தபோது, 'மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதை நீங்களும் (கூட்டமைப்பினர்) வலியுறுத்துங்கள். இல்லையேல் மாகாண சபை இல்லாமல் போய்விடும் ஆபத்துண்டு" என்று கூறியதன் அர்த்தமென்ன? இராஜதந்திரியான ஜெய்சங்கர் இலங்கைக்கு கோவிட்-19 தடுப்பூசி வியாபாரியாக மாறியது விசித்திரமானது. 

இலங்கையின் நிகழ்கால விவகாரத்தில் கொரோனா தொற்றுப் பரவல், ஜெனிவாவை கூட்டாக தமிழ்த் தேசிய கட்சிகள் கையாளுதல் என்பவற்றுடன் மூன்றாவது விடயமொன்றும் இப்போது முக்கியமாகியுள்ளது. 

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் இரண்டரை நாட்கள் இலங்கை விஜயமே முக்கியமானதாகியுள்ளது. 

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காக, இதற்கான பரிசோதனைகளின் தொகையை இலங்கை அரசு திட்டமிட்டு மட்டுப்படுத்தியுள்ளதென்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது சீனாவிடமிருந்து கற்றுக்கொண்டது போலுள்ளது. இலங்கையில் கொரோனா கட்டுக்குள் இருப்பதென்பதை காட்டும் கள்ள உபாயம் இது. 

அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக் கூறலை மையப்படுத்தி ஒரே குரலில் இயங்க மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளும் இணங்கியிருப்பதாக செய்திகள் பரபரப்பாக பறக்கின்றன. 

மூன்று கட்சிகளின் சார்பிலும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பை மையமாகக் கொண்ட தமிழர் அல்லாதவர்களையும் உள்ளடக்கிய பொது அமைப்பொன்றின் நேரடி நெறியாள்கையில் இவர்கள் இயங்குவது பொருத்தமா என்ற கேள்வி ஒருபுறத்தே எழும்பியுள்ளது. 

மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளும் இணைந்து இயங்க இணக்கம் கண்டுள்ளனர் என்பதைத் தவிர அதற்குமேல் இப்போது ஒன்றும் கூறமுடியாது. யாழ். மாநகர மேயர், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவுகளில் நேரடியாக முட்டி மோதி அடிபட்டுக் கொண்டவர்கள், குறுகிய இடைவெளியில் கூடி இணங்கியுள்ளனர் என்றால் அது புருவத்தை உயர்த்தவே செய்யும். 

எனினும், ஜெனிவாவுக்கு அடுத்ததாக இலங்கையை எங்கு கொண்டு செல்லலாம் என்பதிலும், இடம்பெற்றது இனப்படுகொலை என்பதிலும் இவர்கள் ஒரே குரலில் இயங்க வேண்டுமென விரும்பும் மக்கள், இவர்களின் இணக்க நிலையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். 

இங்கு ஒரு கேள்வியும் உண்டு. இப்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஜெனிவா பிரேரணை புலம்பெயர் அமைப்புகளால் தயாரிக்கப்பட்டது என்றும், தம்மால் தயாரிக்கப்பட்டதல்ல என்றும் கூட்டமைப்பின் சுமந்திரன் கூறி வருகிறார். அந்தப் புலம்பெயர் அமைப்புகளின் பெயர்களை எப்போது இவர் பகிரங்கப்படுத்துவார்?

கடந்த சில நாட்களாக இலங்கை - இந்திய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பெற்ற இலங்கைச் செய்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம். 

இந்த விஜயத்தை ஜெய்சங்கரின் திடீர்ப் பயணமென்றும், இந்திய அரசின் திடீர் ஏற்பாடு என்றும் அநேக ஊடகங்கள் எழுதியிருக்கின்றன. ஆனால் அது உண்மையல்ல. 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் (தினேஸ் குணவர்த்தன) அழைப்பின் பேரிலேயே தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டதாகவும், கடந்த வருடம் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது இந்த அழைப்பை அவர் விடுத்ததாகவும், கோவிட்-19 காரணமாக தமது விஜயம் தாமதமானதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தது கவனிக்கப்பட வேண்டியது. அவரது வார்த்தைகளில் இது பின்வருமாறு அமைந்திருந்தது:

'ஐ யஅ பசயவநகரட வழ அல உழரவெநசியசவ கழச hளை inஎவையவழைn. ர்ந நஒவநனெநன வாளை inஎவையவழைn வழ அந றாநn hந றயள in ஐனெயை யடஅழளவ நஒயஉவடல ய லநயச யபழ. டீரவ னரந வழ வாந னளைவசரிவழைn  உயரளநன டில வாந ஊழஎனை-19 pயனெநஅiஉஇ வை றயள ழெவ pழளளiடிடந கழச அந வழ எளைவை நயசடநைச"இ என்பது ஜெய்சங்கரின் கூற்று.

கடந்த செப்டம்பரில் இந்திய பிரதமர் மோடியும், இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இணைய வழி ஊடாக முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டனர். அதன் பின்னர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் குறுகிய கொழும்பு விஜயமொன்றை மேற்கொண்டு முக்கிய சந்திப்புகளை நடத்தினார். 

அமெரிக்க ராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கைக்கும் கொழும்புக்கும் அடுத்தடுத்து பயணம் செய்து முக்கிய பேச்சுகளை நடத்தினார். இந்தப் பின்னணியில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது இலங்கையின் முன்னைய அழைப்பையேற்று அங்கு செல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? யார் யாரை இவர் சந்திக்க வேண்டுமென இலங்கைத் தரப்பு முற்கூட்டியே பட்டியல் கொடுத்ததா? இவ்விடயத்தில் சீனாவின் பங்களிப்பு என்ன? 

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, ராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பிரமுகர்கள், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஆகியோரை தமது ஐம்பது மணித்தியால விஜயத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியாக சந்தித்துள்ளார். 

தமிழர் தரப்பில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை இவர் தவிர்த்துக் கொண்டதற்கு இந்திய அரசின் கொள்கையா அல்லது இலங்கையின் வழிகாட்டலா காரணம் என்பது என்றாவது தெரியவரலாம். 

ஒவ்வொருவருடனும் என்னென்ன விடயங்கள் உரையாடப்பட்டது என்பது அதிகாரபூர்வமாக முழுமையாக வெளியிடப்படவில்லை. முக்கியமாக எதற்காக இலங்கைக்கு அழைக்கப்பட்டார் என்பதுகூட ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரால் தெரிவிக்கப்படவில்லை. 

ஊடகர்கள் சந்திப்பின்போது அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சகிதம் சில விடயங்களை ஜெய்சங்கர் குறிப்பிட்டிருந்தார். அவைகளை குறிப்பிடுவதற்கு முன்னர் அவரின் பின்னணியை சற்று அறிந்து கொள்வது அவசியம். 

இந்த மாதம் ஒன்பதாம் திகதி வெள்ளிக்கிழமை தமது அறுபத்தாறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் இவர், புதுடில்லியின் சுப்ரமணியம் - சுலோசனா என்ற தமிழ் தம்பதியருக்குப் பிறந்தவர். டில்லியிலேயே கல்வி கற்று கலாநிதிப் பட்டமும் பெற்றவர். 1977ல் (22 வயதில்) இந்திய வெளிவிவகார சேவையில் இணைந்த இவர் சோவியத் யூனியன், அமெரிக்கா, ஜப்பான், சீனா, செக் குடியரசு ஆகிய நாடுகளில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றியவர். 

1988 முதல் 1990 வரை இந்திய ராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த வேளையில்  இலங்கையில் இந்தியாவின் முதலாவது செயலாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் ஜெய்சங்கர் பணியாற்றியவர் என்பது முக்கியமானது. அதற்கு முன்னர் இந்திய ராஜதந்திரி பார்த்தசாரதியின் கீழ் அமெரிக்க விவகாரங்களுக்கான துணைச்செயலாளராகவும் பணியாற்றியவர். 

ரஸ்ய, ஜப்பானிய, ஹங்கேரிய மொழிகளுடன் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் புலமை பெற்ற இவர், ஜப்பானியப் பெண்ணான யோகோ என்பவரைத் திருமணம் புரிந்தவர். 2015ல் இந்திய வெளியுறவுச் செயலாளராக நியமனமான ஜெய்சங்கர் குஜராத் மாநிலம் ஊடாக பாரதிய ஜனதா தளக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராகத் தெரிவானவர். வெளிவிவகார செயலாளராகவிருந்து வெளியுறவு அமைச்சரான முதலாவது இந்தியர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. 

இத்தனை அம்சங்களை தனது தகுதியாகக் கொண்ட ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தை அங்குள்ள ஊடகங்கள் மொழிவாரியாக இரண்டு வகையாக வெளிப்படுத்தியுள்ளன. 

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வை ஐக்கிய இலங்கைக்குள் பெற்றுக் கொடுப்பதற்கான இந்தியாவின் கடப்பாட்டை இவர் இலங்கையிடம் வலியுறுத்தியதாக தமிழ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இப்போதைய தலையாய பிரச்சனையாகவுள்ள கோவிட்-19 இற்கான இந்தியாவின் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க ஜெய்சங்கர் உறுதியளித்திருப்பதாக சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தமது பேச்சுவார்த்கைள் தொடர்பான அறிக்கையில் இலங்கைக்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா முன்னுரிமை காட்டப்படுமென தெரிவித்துள்ள ஜெய்சங்கர், ஷஅயலவர் முதலாவது| என்ற கொள்கைக்கிணங்க இலங்கைக்கு முதலிடம் உண்டு என்று தெரிவித்துள்ளார். அத்துடன் உட்கட்டுமானம், சக்திவளம், கடற்பகுதிப் பாதுகாப்பு, மருந்து வகைகள் உற்பத்தி, சுற்றுலா ஆகியவை பற்றி பேசப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அதன்பின்னரே, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பதின்மூன்றாவது திருத்தம் பற்றி பின்வருமாறு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்:

'இலங்கையின் நீண்டகால நல்லிணக்க செயற்பாடுகளையும் இனங்களுக்கிடையிலான அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் கொள்கையையும் இந்தியா ஊக்குவிப்பதுடன் அவற்றை அடைந்து கொள்வதற்கான ஒத்துழைப்புகளை வழங்கும். அதுமட்டுமன்றி ஐக்கியமான ஒருமித்த நாட்டுக்குள் தமிழ் மக்களின் அபிலாசைகளை நீதி, சமாதானம், சமத்துவம், கௌரவம் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். அரச அமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் உள்ளடங்கலாக அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கத்தை வழங்குவதற்கான அரசின் கடப்பாடுகளும் இதற்குள் உள்ளடங்குகின்றன" என்கிறது இவரது அறிக்கை. 

இலங்கையிடம் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென இவர் ஆலோசனை வழங்கியதாகவோ வற்புறுத்தியதாகவோ எங்கும் காணப்படவில்லை. ஆனால், கூட்டமைப்பின் சுமந்திரன் நாடாளுமன்றதில் உரையாற்றும்போது அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். 

நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி மகிந்தவுடன் உரையாடியபோது பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டதாக செய்திகள் வந்தபோதும் கூட்டமைப்பு இவ்வாறுதான் குளிர்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஆனால் மகிந்த ராஜபக்சவிடம் ஊடகங்கள் இதுபற்றிக் கேட்டபோது, தமக்கு எதுவுமே ஞாபகமில்லையென்று கூறி தட்டிவிட்டார். 

அமைச்சர் ஜெய்சங்கரின் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல் செய்வது பற்றிய செய்திக்கு தமிழ்நாட்டின் ஆளுனர் பன்வரிலால் பாராட்டுத் தெரிவித்திருப்பது சற்று விசித்திரமானது. தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவிலிருந்து எந்தவொரு அரசியல் கட்சியும் இதுபற்றி வாயே திறக்காத நிலையில், பாரதிய ஜனதாவின் பினாமியாக விளங்கும் பன்வரிலால், அதே பாரதிய ஜனதாவின் அமைச்சரான ஜெய்சங்கருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். (மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்குகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கமா?)

இவை எல்லாவற்றிலும் முக்கியமானது தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபோது அவர்களுக்கு ஜெய்சங்கர் வழங்கிய ஆலோசனை. 'இந்தியாவினதும் இலங்கையினதும் இணக்கத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரச அமைப்பின் பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக செயற்படுத்தப்பட வேண்டும். இதை இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதை நீங்களும் (கூட்டமைப்பினர்) வலியுறுத்துங்கள். இல்லையேல் மாகாண சபை இல்லாமல் போய்விடும் ஆபத்துண்டு" என்பதுவே ஜெய்சங்கரின் ஆலோசனை. 

'இலங்கை அரசிடம் இந்தியாவால் எதனையும் வலியுறுத்த முடியாது. எடுத்துக்கூற மட்டுமே முடியும். இலங்கையில் நம்பிக்கையில்லை. இவ்வளவுதான் எங்களால் செய்ய முடியும். மிகுதி உங்கள் பங்குதான்" என்பதையே ஜெய்சங்கர் இவ்வாறு கூறியுள்ளாரா? மெதுவாக பந்தை கூட்டமைப்பின் பக்கமே அடித்துள்ளார். 

எப்படி இருக்கிறது இந்தியாவின் பந்து விளையாட்டு?

No comments