யார் கொலோ சதுரர்! இதில் யாருக்கு லாபம்? பனங்காட்டான்


'தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!" என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. 'நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம் உன்னைத் தந்தாய், இந்தக் கொடுக்கல் வாங்கலில் யாருக்கு லாபம்" என்பது இதன் பொருள். நடந்து முடிந்த யாழ்நகர மேயர், நல்லூர் தவிசாளர் தெரிவுக்கான கொடுக்கல் வாங்கலில் வென்றது யார்? தோற்றது யார்? யாருக்கு லாபம்?

அடுத்த மாதம் ஆரம்பமாகவிருக்கும் ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் பற்றியும், தலைவிரித்தாடும் கொரோனா கொடுநோயின் தாக்கம் பற்றியும் எல்லோரும் மோதிக் கொண்டிருக்கும் வேளையில், தமிழர் தாயகத்தில் ஓர் அரசியல் நாடகம் கச்சிதமாக அரங்கேறியுள்ளது. 

தமிழரின் கலாசார தலைநகரமென்று பெருமை கொள்ளப்படும் யாழ்ப்பாணத்தின் யாழ்.  மாநகரசபையிலும், யாழ்ப்பாண ராசதானி அமைந்திருந்த நல்லூரின் பிரதேச சபையிலுமே இந்த நாடகங்கள் இடம்பெற்றன. முதலாவதற்கான மேயரும், இரண்டாவதற்கான தவிசாளரும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இங்கு இடம்பெற்ற நாடகங்களின் பிரதான இயக்குனர்களாக மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா ஆகிய நால்வருமே இயங்கியுள்ளனர். 

2018ம் ஆண்டில் இடம்பெற்ற யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வெற்றிபெற்ற இமானுவல் ஆர்னோல்ட் அதேயாண்டு மார்ச் மாதம் 26ம் திகதி அதன் மேயராகத் தெரிவானார். நாற்பத்தைந்து உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் கூட்டமைப்பினர் பதினாறு பேர். தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு பதின்மூன்று இடங்கள். ஈ.பி.டி.பிக்கு பத்து இடங்கள். ஐக்கிய தேசிய கட்சி மூன்று. சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஒன்று. 

மொத்தம் நாற்பத்தைந்து உறுப்பினர்களில் இருபத்திமூன்று பேரின் ஆதரவைப் பெறுபவர் மேயராக முடியும். தனித்து நின்று மேயராவதற்கு எந்த அணியிடமும் இந்த எண்ணிக்கை இல்லை. ஆனால், பதினாறு மட்டும் பெற்ற கூட்டமைப்பின் ஆர்னோல்ட், ஈ.பி.டி.பியின் பத்து உறுப்பினர்களின் ஆதரவோடு அப்போது மேயராகத் தெரிவானார். 

பதின்மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மேயர் பதவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஈ.பி.டி.பி தனது ஆதரவை கூட்டமைப்புக்கு வழங்கியதாகவும்,  இதற்கான பின்னணிப் பணிகளை சுமந்திரனே மேற்கொண்டதாகவும் அப்போது தெரியவந்தது. 

ஒவ்வொரு வருடமும் சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம். ஒரு வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் நிராகரிக்கப்பட்டால் மேயர் பதவியில் இருப்பவர் விலக வேண்டும். இதுதான் ஆர்னோல்ட் மேயர் பதவியிலிருந்து இறங்கக் காரணமானது. 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆர்னோல்டை மேயர் பதவிக்குக் கொண்டுவர நேரடி ஆதரவு வழங்கிய ஈ.பி.டி.பி., வரவு செலவுத் திட்ட வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்தது. ஆக, கூட்டமைப்பின் ஆர்னோல்டை மேயராக்கி அழகு பார்த்த ஈ.பி.டி.பி, அவரை பதவியிலிருந்து கவிழ்த்து அழ வைத்தது என்பதே உண்மை. 

ஆர்னோல்ட் மேயர் பதவிக்கு போட்டியிட்டபோது அதனை எதிர்த்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வரவு செலவுத் திட்டங்களிலும் எதிராகவே வாக்களித்தது. எனவே அவரின் மேயர் பதவி இழப்புக்கு மக்கள் முன்னணி உரிமை கோர முடியாது. ஆனால், அதன் விருப்பம் ஈ.பி.டி.பியினால் நிறைவேற்றப்பட்டது என்று சொன்னால் தவறில்லை. 

2018ல் ஆர்னோல்டை மேயராக்க முன்னும் பின்னும் நின்று உழைத்தவர் சுமந்திரன். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆர்னோல்ட் திடீரென சுமந்திரன் முகாமிலிருந்து விலகி மாவை சேனாதிராஜா அணிக்குத் தாவினார். இதனால், இப்போது சுமந்திரனும் அவரது சகாவான சிவஞானம் சிறிதரனும், மீண்டும் ஆர்னோல்ட் மேயராவதை விரும்பவில்லை. இவ்விடயத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் இவர்கள் பக்கமே. 

இதனால்தான் சொலமன் சிறிலை மேயராக்குவதற்கு சுமந்திரன் தரப்பினர் ஒற்றைக் காலில் நின்றனர். பொதுத்தேர்தலில் தம்மோடு இணைந்த ஆர்னோல்டை நட்டாற்றில் விடுவதற்கு  மாவையருக்கு விருப்பமில்லை. அதனால், தோற்றாலும் பரவாயில்லை என்ற முடிவில்  ஆர்னோல்டை மீண்டும் மேயர் தெரிவுப் போட்டியில் நிறுத்தினார். 

டிசம்பர் 30ம் திகதி இடம்பெற்ற மேயர் தெரிவுப் போட்டியில் விசுவலிங்கம் மணிவண்ணன் போட்டியிட்டார். 2018ல் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் மக்கள் முன்னணியின் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட இவர், கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் கஜேந்திரகுமாருடன் ஏற்பட்ட பிணக்கினால் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பினால் அவர் தொடர்ந்து உறுப்பினராக இருந்து வருகிறார். இப்போது இடம்பெற்ற மேயர் போட்டியில் ஆர்னோல்டைவிட ஒரு வாக்கை மேலதிகமாகப் பெற்று (21-20) வெற்றி பெற்றுள்ளார். 

வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பின் பதினாறு உறுப்பினர்களில் பதினைந்து பேர் ஆர்னோல்டுக்கு  ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒன்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒன்று என மொத்தம் இருபது வாக்குகள் இவருக்குக் கிடைத்தது. 

மறுபுறத்தில், மணிவண்ணனுக்கு மக்கள் முன்னணியின் பதின்மூன்று உறுப்பினர்களில் பத்துப் பேருடன், ஈ.பி.டி.பியின் ஒட்டுமொத்தமான பத்துப்பேரும் சேர்ந்து வாக்களித்தனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் இவருக்கு வாக்களித்ததால் மொத்த எண்ணிக்கை இருபத்தொன்று ஆனது. 

இந்தப் போட்டியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூவரும், கூட்டமைப்பின் ஒருவரும் எவருக்கும் வாக்களிக்காது நடுநிலை வகித்தனர். இந்த வாக்களிப்பு இடம்பெற்ற முறை சற்றே வித்தியாசமானது. 

நடுநிலை வகித்த கூட்டணியின் உறுப்பினர் தமது வாக்கை ஆர்னோல்டுக்கு அளித்திருந்தால் முடிவு சரிசமமாக (21-21) ஆகியிருக்கும். அவ்வேளை தெரிவு திருவுளச்சீட்டு மூலம் இடம்பெற்றிருக்கும். வாக்களிப்பில் பங்குபற்றாத தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூவரும் தங்கள் அணியைச் சேர்ந்த மணிவண்ணனுக்கு வாக்களித்திருந்தால், அவரது வெற்றி எண்ணிக்கை இருபத்திநான்காக உயர்ந்திருக்கும். 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இருவரில் ஒருவர் ஆர்னோல்டை ஆதரிக்க, மற்றவர் மணிவண்ணன் பக்கம் நின்றார். இருவரும் ஒருபக்கமாக வாக்களித்திருந்தால் முடிவு மாற்றமடைந்திருக்கலாம். 

ஈ.பி.டி.பி. தமது பத்து வாக்குகளை எவருக்கும் அளிக்காது இருந்திருந்தால் ஆர்னோல்ட் இலகுவாக பத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றிருப்பார். 

ஒருவகையில் பார்த்தால், ஆர்னோல்டின் வெற்றி வாய்ப்பை இல்லாமல் செய்ததில் முக்கிய பங்கு வகித்தவராக, வாக்களிப்பில் நடுநிலைமை வகித்த கூட்டமைப்பின் ஒற்றை உறுப்பினரைக் குறிப்பிடலாம். அந்தக் கறுப்பு ஆடு யார்? இவர்மீது கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? 

ஆர்னோல்டின் தோல்விக்கு மாவை சேனாதிராஜாவே பொறுப்பு என்று காட்டமான ஓர் அறிக்கையை சுமந்திரன் விடுத்துள்ளார். இது, உட்கட்சி மோதலின் வெளிப்பாடு. எதிர்பார்த்த அறிக்கையும்கூட. ஆர்னோல்ட் தோல்வியடைந்தது சுமந்திரனுக்கு மகிழ்ச்சியாகவிருப்பினும், மாவை மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி, அவரது தலைமைப் பதவியை பறித்து அந்தக் கதிரைக்கு சிவஞானம் சிறிதரனை நியமிக்க இச்சந்தர்ப்பத்தை சுமந்திரன் சரியாக பயன்படுத்துவதாகவே பார்க்க முடிகிறது. 

தம்முடன் மோதல் புரிகின்ற மணிவண்ணன் மேயராகத் தெரிவானதை விரும்பாத மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவரை டக்ளஸின் ஆளாகச் சித்தரித்து கருத்து வெளியிட்டுள்ளார். மணிவண்ணனையும் அவருக்கு ஆதரவளித்த முன்னணியின் பத்து உறுப்பினர்களையும் கட்சியிலிருந்து நீக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்தவகையில், சுமந்திரனுக்கும் கஜேந்திரகுமாருக்கும் வித்தியாசம் காணப்படவில்லை. ஒரே உத்தியையே இருவரும் வெவ்வேறு தளங்களில் நின்று பயன்படுத்துகின்றனர். 

மணிவண்ணன் மேயராகிவிட்டாலும் இவர் தாண்ட வேண்டிய பெருங்கண்டமொன்று முன்னால் உள்ளது. இவர் சமர்ப்பிக்கவுள்ள புதிய வரவு செலவுத் திட்டத்துக்கு இருபத்திமூன்று வாக்குகள் கிடைக்க வேண்டும். இல்லையேல் இவர் பதவியிழப்பது மட்டுமன்றி மாநகரசபை கலைக்கப்பட்டு ஆணையாளர் ஆட்சிக்குச் செல்லும். 

மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாக வேண்டும் என்ற விருப்பில் மாவை, சுமந்திரன், கஜேந்திரன் ஆகியோர் தத்தம் பாணியில் இந்தக் கைங்கரியத்தை செய்தால் ஆச்சரியப்பட நேராது. 

நல்லூர் பிரதேச சபையில் சுமந்திரனின் ஆளாகவிருந்த தவிசாளர் தியாகமூர்த்தி வரவு செலவுத் திட்ட தோல்வியால் பதவியிழக்க நேர்ந்தது. இதற்கான தெரிவின்போது கஜேந்திரகுமாரின் முன்னணி வெற்றி பெற்றுள்ளது. யாழ். மாநகர சபையைப் போன்று இங்கும் கூட்டமைப்பு தனது இருப்பை பறிகொடுத்துள்ளது. கூட்டமைப்பின் சார்பில் நல்லூரில் போட்டியிட்ட மதுசூதனனைவிட மக்கள் முன்னணியின் மயூரன் இரண்டு வாக்குகள் அதிகம் பெற்று (10-8) புதிய தவிசாளராகியுள்ளார். 

மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்ட மக்கள் முன்னணிக்கு எவ்வாறு பத்து வாக்குகள் கிடைத்தது? டக்ளசின் ஈ.பி.டி.பியின் மூன்று, சுயேட்சை இரண்டு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒவ்வொன்றாக ஏழு வாக்குகள் கிடைத்ததால் மயூரன் வெற்றி பெற்றார். இங்கும் கூட்டமைப்பின் ஒருவரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருவரும் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இருவரும் பங்குபற்றி கூட்டமைப்புக்கு ஆதரவளித்திருந்தால் 10-10 என்ற சமநிலை ஏற்பட்டு திருவுளச்சீட்டுக்கு சென்றிருக்க நேர்ந்திருக்கும்.

ஈ.பி.டி.பி.யின் மூன்று வாக்குகளும் மயூரனுக்கு கிடைக்காதிருந்திருந்தால், அவர் ஏழு வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்திருப்பார். ஆக, ஈ.பி.டி.பி. போட்ட பிச்சையே மக்கள் முன்னணியின் மயூரனை நல்லூரின் தவிசாளராக்கியது என்று கூறலாம். 

யாழ். மாநகரசபையில் மணிவண்ணனை டக்ளஸ் அணி ஆதரித்து மேயராக்கியதால் அவரை டக்ளசின் ஆள் என்று கூறுவதுபோல, நல்லூரில் மயூரனை டக்ளஸ் அணி ஆதரித்து தவிசாளராக்கியதால் இவரையும் டக்ளசின் ஆள் என்று கஜேந்திரகுமார் கூறுவாரா? அரசியலில் இதுவெல்லாம் சகஜமா?

'தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!" என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. 

'நான் என்னை உன்னிடம் தந்தேன், நீ என்னிடம் உன்னைத் தந்தாய், இந்தக் கொடுக்கல் வாங்கலில் யாருக்கு லாபம்" என்பது இதன் பொருள். 

நடந்து முடிந்த யாழ்நகர மேயர், நல்லூர் தவிசாளர் தெரிவுக்கான கொடுக்கல் வாங்கலில் வென்றது யார்? தோற்றது யார்? யாருக்கு லாபம்?

No comments