காணி விவகாரம்: கண்டிக்கின்றது டெலோ?


யாழ். மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணியற்றுள்ள போது தனியாருக்குச் சொந்தமான காணிகளையே இராணுவத்துக்குச் சுவீகரிக்க முயற்சிக்கின்றமை போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுவதாக ரெலோவின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர்  தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இன்றைய தினம் (19) தீவகத்தில் நில அபகரிப்பிற்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தீவகத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்திற்குச் சுவீகரிப்பதற்காக நேற்றைய தினம் வருகை தந்திருந்த அதிகாரிகள் மக்களின் எதிர்ப்பினை அடுத்துத் திரும்பினர். இன்றைய தினம் மண்கும்பானில் பொதுமக்களின் காணிகளை அபகரிப்பதற்கு அதிகாரிகள் வருவார்கள் அவர்களை அளவீடு செய்ய விடாது திருப்பி அனுப்புவதற்காக காத்திருந்தோம். பின்னர் வேலணை பிரதேச செயலகம் முன்னும் போராட்டம் நடத்தியுள்ளோம். பிரதேச செயலர் பொதுமக்களின் எதிர்ப்பினை காணி அமைச்சுக்குத் தெரியப்படுத்தி அமைச்சின் அறிவுறுத்தல் பெறும் வரையில் காணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படாதென உத்தரவாதம் அளித்துள்ளமையால் இன்றைய போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றது. 

இவ்வாறாக எமது மண்ணில் எமக்குச் சொந்தமான பிரதேசத்தில் வளமான காணிகளை இராணுவத்தினர் யுத்தத்தின் போது கையகப்படுத்திவிட்டு இன்று அவற்றை சட்ட ரீதியிலான நிரந்தர உடமையாக மாற்றுவதற்கு பலாத்காரம் பிரயோகிக்கப்படுகின்றது. அடிப்படையில் மக்கள் சொந்தமாக காணியினைக் கொண்டிருக்கும் உரிமையைக்கூட அரசாங்கம் நசுக்குகின்றது. யுத்தத்தின் பின்னர் மக்கள் தமது காணிகளில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு வசதியாக இராணுவத்தினை அரசாங்கம் முகாம்களுக்குள் மட்டுப்படுத்தியிருக்கவேண்டும். ஆனால் மக்களின் நிலங்களையும் அவர்களது உரிமைகளையும் இராணுவமயப்படுத்துவதில் அரசாங்கம் கரிசனை கொள்கின்றது. முதலில் சரியான கொள்கை ஒன்றை வகுத்து அரசாங்கம் காணியற்ற 10 ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கும் நிலங்களை வழங்க வேண்டும். 

தமிழ் மக்களின் பிரச்சினைகளை இராணுவ வழிமுறைகள் ஊடாக அடக்கிவிடலாம் என்பதை எடுகோலாகக் கொண்டு அரசாங்கம் செயற்படக்கூடாது. எமது ஜனநாயக உரிமைகளுக்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும். எமது மக்களின் நிலங்கள் அவர்களுக்கானதே என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என ரெலோவின் யாழ் மாவட்டப்பொறுப்பாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

No comments