மணி அணியின் வரவு செலவு திட்டம் தப்பியது?யாழ்.மாநகரசபையின் முதல்வரான வி.மணிவண்ணனால் சமர்பிக்கப்பட்ட  மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓட்டுமொத்தமாக 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 26 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களிக்க, 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

அதற்கமைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்கள், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் என 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பை சேர்ந்த 3 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர். 

இதற்கமைய மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையிலிருந்த யாழ் மாநகரசபையை வி.மணிவண்ணன் தரப்பினர் கைப்பற்றிய பின்னர் முதலாவது வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பை சேர்ந்த 3 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை ஒத்திவைக்க கோரிய போதும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


No comments