இனப்படுகொலையா எங்கே? சுரேஸ் போட்டுத்தாக்கு!

காலைக்கதிர் ஏட்டில் அதன் ஆசிரியர் தான் அறிந்த பல விடயங்களை 'இனி இது இரகசியம் அல்ல' என்ற பந்தியினூடு வாசகர்களுடன் பகிர்ந்து

கொள்வதுண்டு. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியோர் இணைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்துக்கு என தயாரித்த கோரிக்கைகள் தொடர்பாக, சில சர்ச்சைகள் உருவானதாகவும் அதற்குக் காரணம் திரு.விக்னேஸ்வரன் என்றும் இப்பொழுது திரு.விக்னேஸ்வரன் அவர்கள் திரு.சுமந்திரன் மேல் பழி போட முயற்சிக்கின்றார் என்ற பாணியிலும் ஒரு கருத்தை காலைக்கதிர் ஆசிரியர் வெளியிட்டிருக்கின்றார்.

முதலாவதாக இதில் பலபேர் சம்பந்தப்பட்டிருக்;கும் போது ஒரு பக்கத்து கதையைக் கேட்டு அது தான் சரியான முடிவு என்ற முடிவிற்கு வந்து ஏனைய எவருடனும் பேசாமல் மிகச் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கொதித்துப் போய் தன் பத்திரிகையில் எழுதி இருப்பது விந்தையாக இருக்கின்றது.

ஆவண தயாரிப்பில் திரு.சுமந்திரன் அவரது நடவடிக்கைகள் சரியென்பதை நிரூபிக்கத் தன்னிடம் மின்னஞ்சல் ஆவணங்கள் இருப்பதாகவும், தனது கருத்தை சவாலுக்குட்படுத்தினால் எல்லா ஆவணங்களையும் வெளியிடத் தயாராக இருப்பதாகவும் ஆசிரியர் குறிப்பிட்டு விடிய விடிய ராமர் கதை விடிந்தால் ராமர் சீதைக்கு என்ன முறை என்ற கணக்கில் திரு.விக்னேஸ்வரனின் நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதில் எங்களது பெயரும் சம்பந்தப்பட்டிருப்பதால் எமது சில கருத்துக்களை வெளியிட விரும்புகின்றோம். பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட கூட்டத் தொடர் டிசெம்பர் 10ந் திகதி முடிந்ததும் திரு.சுமந்திரன் அவர்கள் திரு.விக்னேஸ்வரன் மற்றும் திரு.கஜேந்திரகுமார் இருவருக்கும் ஐ.நாவிற்கு அனுப்புவதற்கான ஓர் ஆவணத்தை கொடுத்து அது தொடர்பாக அவர்களது கருத்தைக் கேட்டிருந்தார். இருவரும் அதனைத் தனித்தனியே நிராகரித்திருந்தார்கள். பின்னர் இது தனது ஆவணமல்ல புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்தது எனக் கூறினார். புலம்பெயர் தேசத்தில் இருந்து யார் அனுப்பினார்கள் என்பது அவரால் வெளியிடப்படவில்லை. அது இன்று வரையில் இரகசியமாகவே இருக்கின்றது.

அதற்கு பின்னர் திரு.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினராகிய நாம் ஓர் ஆவணத்தைத் தயார் செய்து, கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது கட்சித் தலைவர்களோ கையெழுத்திட விரும்பினால் கையெழுத்திடலாம் என அறிவித்து அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் எமது ஆவணம் தொடர்பாக எந்தக் கருத்தினையும் அவர்கள் வெளியிடவில்லை.

இந்தச் சமயத்தில்த்தான் 29.12.2020இல் திரு.சிவகரன் அவர்களால் கிளிநொச்சியில் ஓர் கூட்டம் கூட்டப்பட்டது. அக் கூட்டத்திற்கு அவர் தனக்கு விரும்பியோர்க்கு அழைப்பு விடுத்திருந்தார். அங்கு எம்மால் முன் வைக்கப்பட்ட ஆவணத்தில் திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ளலாம் என்று திரு.சிவாஜிலிங்கம் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் அது தொடர்பாக யாரும் பதில் கூறவில்லை. அங்கு விவாதிக்க வேறு ஆவணங்களும் அவர்களிடம் அப்போது இருக்கவில்லை.

பின்னர் 3.1.2021இல் வவுனியாவில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் முன்னர் கலந்து கொண்டவர்களுடன் திரு.கஜேந்திரகுமாரும் கலந்து கொண்டார். அங்கும் விவாதங்கள் நடைபெற்றதே தவிர முடிவுகள் எட்டப்படவில்லை. பின்னர் கொழும்பில் திரு.சுமந்திரன், திரு.கஜேந்திரகுமார் ஆகியோர் திரு.விக்னேஸ்வரனுடன் பேசி வரைபொன்றைத் தயாரிக்கப் போவதாகக் கூறினார்கள். அத்தருணத்தில் திரு.பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் அம்மூவரையும் அவர்களின் கட்சியிலுள்ள சிலரையும் ஓர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அக் கூட்டத்திற்கு இந்த மூன்று அணியினரையும் சேர்ந்தவர்கள் சென்றிருந்தனர். அங்கு முக்கியமாகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றததிற்கு இலங்கையைப் பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஏனைய விடயங்கள் குறித்துப் பேசுவதற்குப் போதிய நேரம் இருக்காததால் மூவர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அதில் அவை பரிசீலிக்கப்பட்டு ஓர் வரைவு உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

கலாநிதி சர்வேஸ்வரன், திரு.சுமந்திரன் மற்றும் திரு.கஜேந்திரகுமார் ஆகியோர் இக் குழுவில் இருந்தனர். 7.1.2021 அன்று இக்குழு திரு.பாக்கியசோதி சரவணமுத்துவின் தொண்டு நிறுவனமான மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தில் (CPA) கூடியது.

அங்கு சிரியா தொடர்பாக விசாரணை செய்து சாட்சியங்களை தொகுத்துப் பாதுகாத்து விசாரணைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எவ்வாறான குழு நியமிக்கப்பட்டதோ அதே போன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்னும் யோசனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கலாநிதி சர்வேஸ்வரனால் கூறப்பட்டது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள மற்றைய இருவரும் தயாராக இருக்கவில்லை. வெறுமனே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICCக்கு) அனுப்ப நடவடிக்கை எடுத்தால் போதுமென்ற அடிப்படையிலேயே ஆவணம் தயாரிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டதுடன் எமது கட்சியின் ஆவணத்தில் காணப்பட்ட ஏனையவற்றைப் பற்றிப் பேச அவர்கள் தயாராக இல்லாததால் கலாநிதி சர்வேஸ்வரன் அவர்கள் அக் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

பின்னர் அவர்கள் இருவரும் தயாரித்த ஆவணத்தைப் பரிசீலிக்க கிளிநொச்சியில் 09.01.2021 அன்று நடைபெறவிருந்த இன்னொரு கூட்டத்திற்கு திரு.சிவகரனால் அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு முன்னர் அழைக்கப்படாத எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அக் கூட்டத்தில் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணம் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

அதிலும் ICCக்கு பாரப்படுத்த வேண்டும், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கெதிரான குற்றங்கள் போன்றவற்றிற்குப் பொறுப்பு கூற வேண்டும் என்று கூறப்பட்டதே தவிர இனப்படுகொலை தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற எந்தச் சொல்லும் சேர்;த்துக் கொள்ளப்படவில்லை. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை எனத் தொடர்ந்து முழங்கி வந்த திரு.கஜேந்திரகுமார், திரு.சுமந்திரனுடன் இணங்கித் தயாரித்த ஆவணத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தையையே சேர்க்கவில்லை என்றால் திரு.கஜேந்திரகுமார் தனது கொள்கையில் எவ்வளவு தூரம் உறுதியாக இப்பொழுது இருக்கின்றார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். திரு.மணிவண்ணனுடன் தர்க்கப்பட்ட பின் அவரின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவோ நான் அறியேன்.

அதேகூட்டத்தில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைக்க வேண்டும் என்று நாம் கோரியிருந்தோம். ஆனால் அவற்றை மறுதலித்து ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது. இறுதியாக, ஒரு வருட காலக்கெடு விதித்து அவ்வாறு ஒரு கோரிக்கையை வைக்க முடியும் என கஜேந்திரகுமார் தரப்பினர் ஏற்றுக்கொண்டனர். இதனை பின்னர் சுமந்திரனும் ஏற்றுக்கொண்டார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நான்கு விடயங்களை உள்ளடக்கி மீண்டும் ஓர் ஆவணம் தயார் செய்யப்பட்டது.

எமக்கு அனுப்பிய இந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்ட 4 கோரிக்கைகளில் இனப்படுகொலை என்ற வார்த்தைப் பிரயோகம் தவிர்க்கப்பட்டிருந்தது. ஆகவே அது எம்மால் சுட்டிக் காட்டப்பட்டு பின்னர் அந்த விடயம் உள்ளடக்கப்பட்டது. இதன் பின்னர் ஆவணத்தில் இருந்த சிறிய பிழைகள் அனைத்தும் திரு.விக்னேஸ்வரன் மற்றும் திரு.சுமந்திரனின் மின்னஞ்சல் ஊடாகத் திருத்தப்பட்டதென்பது உண்மை.

இதுகாலவரை நடந்த கூட்டங்களில் இதில் யார் கையெழுத்திடுவது என்பது பேசப்படவில்லை. ஆனால் ஆவணத்தின் முதல் வசனம் என்ன கூறுகின்றதென்றால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் மக்கள் பிரதிநிதிகள் (Elected Representatives), தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் (Tamil National Political Party Leaders), பாதிக்கப்பட்ட தமிழ் சமூக பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஐ.நா. சபைக்கு எழுதும் கடிதம் என குறிப்பிடுகின்றது. அப்படியாயின் ஏனைய கட்சிகளிடம் கையெழுத்து வாங்கத் தயக்கம் ஏன்? திரு.கஜேந்திரகுமாரும், திரு.சுமந்திரனும் இவ்வாறு கையொப்பம் பெற விரும்பவில்லை என்றால் என்ன காரணத்திற்காக அவர்கள் விரும்பவில்லை? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் இருக்கின்றன. மூன்று கட்சித் தலைவர்களும் கையெழுத்து வைக்க மறுத்தார்களா? தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைப் பொறுத்தவரையில் 15ம் திகதி இரவு 7.16 மணிக்கு நான்கு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டு இறுதிக் கடிதம் வெளிநாடு செல்ல 14 மணி நேரத்திற்கு முன்னரே அனுப்பப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்வதில் திரு.கஜேந்திரகுமார் அவர்களுக்கும் திரு.சுமந்திரன் அவர்களுக்கும் என்ன பிரச்சினை இருந்தது? 16ம் திகதி காலை 9 மணிக்கு பின்னர் தானே குறித்த ஆவணம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது? (திரு.சிவகரன் அவர்களின் கூற்று இது). பல்வேறுபட்ட சிவில் அமைப்புக்களின் கையெழுத்து உள்ளடக்கப்பட முடியும் என்றால் மிகப்பழமையான தமிழரசுக் கட்சியின் தலைவர் ஏன் கையெழுத்து வைக்க முடியாது? ஏறத்தாழ 45 வருட வரலாற்றைக் கொண்டEPRLF, TELO, PLOTE ஆகியவற்றின் தலைவர்கள் ஏன் கையெழுத்து வைக்கக் கூடாது?

ஆவணத் தயாரிப்பில் எல்லோரது பங்களிப்பும் கோரப்பட்டது. ஆனால் கையெழுத்திடுவதை ஓர் பிரச்சினையாக்கி அதனைத் தவிர்த்துக் கொள்வதற்கு இருவரும் முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். அதன் காரணமென்ன? காலைக்கதிர் ஆசிரியர் TNAயின் பங்காளிக் கட்சிகள் அனைவரும் திரு.சுமந்திரனுடன் ஒத்துப் போனார்கள் என்று எழுதியுள்ளார். திரு.செல்வம் அடைக்கலநாதனோ, திரு.சித்தார்த்தனோ அவ்வாறு அவருக்குக் கூறினார்களா? அவர்களிடம் கேட்டறிந்தா அவர் தனது 'இனி இது இரகசியம் இல்லை' பந்தியை காலைக்கதிர் இதழில் வடித்தார்?

பேனா கையில் இருக்கின்றது என்பதற்காக விரும்பிய அனைத்தையும் எழுதி சிலபேரை நல்லவராகக் காட்ட முயல்வதும், சிலபேரை காட்டமாக விமர்சிப்பதும் அல்லது குற்றங்களைச் சுமத்துவதும் சரியான ஊடகத் தர்மமாக எனக்குப் படவில்லை. குறைந்த பட்சம் ஏனையோரின் கருத்தைக் கேட்கக் கூட முற்படாமல் ஆசிரியர் சவால் விடுவது (அவ்வாறு தான் 'இனி இது இரகசியம் இல்லை'யின் எழுத்தோட்டம் உள்ளது) எவ்வளவு சரியென்பதை ஆசிரியரே சொல்ல வேண்டும்.

இந்த ஆவணத்தில் அனைத்துத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தால் அது கனதியாக இருந்திருக்கும். இந்த விடயங்களைக் கையாளுகின்ற திரு.சுமந்திரன், திரு.கஜேந்திரகுமாரை விட அனுபவம் பெற்ற அரசியல் தலைவர்களும், நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் பலபேர் எம்முள் இருக்கின்றார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் பத்திரிகைகளின் எழுத்துக்களே தவறு விடுபவர்களை மேலும் மேலும் தவறு விடத் தூண்டிவிடுகின்றது.

திரு.சுரேஷ் க. பிறேமச்சந்திரன்

தலைவர்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

இணைப்பேச்சாளர்

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

No comments