ஜனாசாக்களை எரிப்பு போன்று கார்த்திகை தீபத்திலும் அரசு கை வைத்துள்ளது - சிவாஜி


முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி இஸ்லாமிய மத விவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மத விவகாரங்களில் அரசின் இவ்வாறான தலையீடுகளுக்கு தனது கண்டனங்களையும் அவர் தெரிவித்துள்ளார். 

இம்முறை கார்த்திகைத் தீபத் திருநாளில் தீபமேற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது செய்யப்பட்டமை மற்றும் தீபமேற்றுவதற்கு பாதுகாப்புத் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட இடயூறுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்அவர் மேலும் தெரிவிக்கையில், உலகெங்கிலும் இந்து மக்களால் கொண்டாடப்படும் காத்திகைத் தீபத் திருநாளை 29.11.2020 அன்று எமது மக்கள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்திலே கொண்டாடியபோது, தீப்பந்தங்களை ஏற்ற விடாது இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தடை செய்தனர்.

குறிப்பாக யாழ் பல்கலைக்கழக மாணவனை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றது, அதேபோல பரந்தன் சந்தியிலே வயோதிபர்களைத் தாக்கியது போன்ற பல்வேறு சம்பவங்கள் ஊடகங்கள் வாயிலாக நாம் அறியக்கூடியதாக இருந்ததுடன், மக்களாலும் எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இதை சிங்களப் பௌத்தத்தின் ஒரு இன, மத வெறி நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். சிங்களவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கலாம், நாங்கள் தமிழர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர் ஆயினும் சமமானவர்கள். அதேபோல் பௌத்தர்கள் எண்ணிக்கையில் அதிகம், இந்துக்கள், கிறிஸ்தவர்கள்ஸ், இஸ்லாமியர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராவர்.

இந்த நிலையில் எமது இந்து மத உரிமைகளைத் தடுப்பதென்பது, முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரிக்க முற்பட்டு அவர்களுடைய மத நடவடிக்கை அரசு எவ்வாறு மீறியிருந்ததோ, அவ்வாறு இந்து மக்களுடைய மத விவகாரத்திலும் அரசு கைவைத்திருக்கின்றது.

இதேவேளை கிறிஸ்தவர்களுடைய மத விவகாரங்களில் கைவைப்பதற்கு அரசு சர்வாதிகாரத்தைப் பயப்படுகின்றதோ, அல்லது எதிர்வரும் காலங்களால் கிறிஸ்தவர்களுடைய மத உரிமைகளிலும் தலையீடு செய்யுமோ தெரியவில்லை. எது எவ்வாறாயினும் இவ்வாறான மத விவகாரங்களில் அரசு தலையீடு செய்வது கண்டனத்திற்குரிய விடயமாகும் என சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

No comments