புலி நீக்க அரசியல் மட்டுமன்றி புலித்தோல் அரசியலும் தோற்றது!பனங்காட்டான்


துயிலும் இல்லம் துப்பரவு செய்தவர்கள் வீடுகளுக்குள் மாவீரர் தீபமேற்றி தேசியக் கடமையை முடித்துக் கொண்டார்கள். புலிநீக்க அரசியலில் தோல்வி கண்டவர் புலி ஆதரவு அரசியலுக்காக புலித்தோல் போர்க்கப் போய் வேடம் கலைந்து காட்சி தருகிறார். மாவீரர்களை சுயஅரசியலுக்கு ஆதாயமாக்க முனைபவர்களை இவ்வருட நினைவேந்தல் நன்றாக அடையாளம் காட்டியுள்ளது. 

இந்த வாரப் பத்தியை எழுதும்போது, கடந்த மாதம் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் விவகாரங்களை குறிப்பிடாது அல்லது பூசி மெழுகிச் செல்வது வரலாற்றுப் பதிவுக்கு தவறிழைப்பதாக அமையும். 

மாவீரர் நாளுக்கு முன்னதாக தாயகத்திலிருந்து வரும் தமிழ் ஊடகங்களில் வெளியான சில செய்திகளும் ஒளிப்படங்களும், அவைகளை அப்படியே பிரதி பண்ணிய பல சமூக ஊடகங்களின் பதிவுகளும் பெரும் நம்பிக்கையை அப்போது தந்தது. 

மாவீரர் துயிலும் இல்லங்களை போட்டி அடிப்படையில் துப்பரவு செய்த சில அரசியல்வாதிகளின் படங்களுடனான செய்திகள், மாறி மாறி வெளிவந்த ஊடக அறிக்கைகள் புதுப்புது கூட்டுகளாக இடம்பெற்ற சந்திப்புகள், மாவீரர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற முக்கியமான நினைவேந்தல் என்ற காட்சிகள் இவற்றுள் அடங்கும். 

சமகாலத்தில் நீதிமன்ற வழக்குகளும்கூட. நினைவேந்தலுக்கு அனுமதி கேட்கும் தமிழர் தரப்பின் மனுக்கள் ஒருபுறம். தடைபோடும் காவற்துறையினரின் (ஏவற்படை) மனுக்கள் மற்றொருபுறம். 

கொழும்பிலிருந்து சட்டமா அதிபர் அலுவலக வழக்குரைஞர்கள் உலங்கு வானூர்திகளில் பறந்து சென்று நீதிமன்றங்களில் தோன்றி தடை பெற்ற காட்சிகள் இன்னொருபுறம். தமிழர் தாயகத்தில் சத்தியாக்கிரகங்கள் செய்தபோதும், அரச செயலகங்களை இயங்கவிடாது தடுத்தபோதும் நீதிமன்றங்களில் அனுமதிபெற்றா மேற்கொள்ளப்பட்டது என்ற கேள்வி இப்போது நீதிமன்றங்களை நாடும்போது எழுகின்றது. 

இப்பொழுது இடம்பெறுபவை எல்லாமே ஒரு நாடகம்தான். தமிழ்த் தேசியத்தை தங்கள் கட்சிகளின் பெயர்களுக்குள் பொறித்துக் கொண்டவர்கள், எவ்வாறாவது ஒரு பொது இடத்தில் மாவீரர் நாளை நிகழ்த்துவார்களென்ற பொதுமக்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போயிற்று. 

ஒரு தமிழர் தேசிய கட்சியாவது முனைந்திருந்தால் அதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மாவீரர் குடும்பங்கள் காத்திருந்தன என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். மக்களின் நம்பிக்கை ஏமாற்றம் கண்டதா அல்லது அரசியல்வாதிகள் அவர்களை ஏமாளிகள் ஆக்கினரா என்பது பின்னொரு காலத்தில் தெரியவரும். 

மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று அடிக்கடி முழக்கமிடும் தமிழரசுக் கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா தமது வீட்டுவாசலில் தீபமேற்றி தேசியக் கடமையை முடித்துக் கொண்டார். ஈழத்தின் பூர்வீக குடிகள் தமிழர்களே என்று ஓயாது பேசிவரும் தமிழ்த் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தமது வீட்டு முற்றத்தில் தீபமேற்றி வணக்கத்தை செலுத்தினார். தமிழர் தேசம் தனித்தேசமென்று குரல் கொடுத்துவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கட்சி அலுவலகத்துள் விளக்கேற்றி மாவீரர் நினைவை நிறைவேற்றினார். 

சிவாஜிலிங்கம், செல்வராஜா கஜேந்திரன், சிவஞானம் சிறிதரன், சாணக்கியன் போன்றவர்களும் எங்கெங்கோ வளவுக்குள் தங்கள் பணியை முடித்துக் கொண்டனர். 

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை எங்கும் காணோம். சிலவேளை உடல்நிலை சரியில்லாது, கொழும்பில் அரசாங்கம் இலவசமாக வழங்கிய மாளிகைக்குள் இருந்திருப்பார். யார் தடுத்தாலும் மக்கள் தங்கள் கடமையை செய்வார்கள் என்று இவர் முற்கூட்டியே ஒரு அறிக்கையை விட்டாரல்லவா? இந்த அறிக்கைதான் மாவீரர் குடும்பங்கள் வீட்டுக்குள் தீபமேற்ற வழிவகுத்தது என்று சம்பந்தன் தமது முதுகைத் தாமே தடவிக் கொடுத்து மகிழ்வடையலாம். 

மாவீரர் நினைவேந்தலுக்கு எவ்வகையான தடையை நீதிமன்றம் விதித்தது என்பதை சட்டத்துறையில் மூத்தவரான வழக்குரைஞர் (அட்வகேட்) ஒருவர் என்னிடம் தெரிவித்ததை அப்படியே இங்கு தருகிறேன். 


ஷபொது இடங்களில்| என்று குறிப்பிடுவது துயிலும் இல்லங்கள், பொதுவான வெளிகள், வயல்கள் - தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள், ஆலய முகப்புகள் மற்றும் வீதிகள் என்று அர்த்தப்படும். 'பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்த முடியாது" என்பதே யாழ். நீதிமன்ற நீதிவான் வழங்கிய தீர்ப்பின் வாசகம். பயங்கரவாத தடைச்சட்டம், தேசிய பாதுகாப்பு, கொரோனா தொற்று இடர்கால விதிமுறைகள் என்பவைகளை மேற்காட்டியே இலங்கை அரசு நீதிமன்றத் தீர்ப்பை பெற்றது. ஆனால், நினைவேந்தலை நீதிமன்றத் தீர்ப்பு முற்றாக தடை செய்யவில்லை. 

ஷஒன்றுகூடி| என்பது ஆறு அடி இடைவெளிவிடாது கூட்டமாக நிற்பது என்று அர்த்தப்படுவது. அதாவது முன்னைய நாட்கள்போல ஒருவரோடு ஒருவர் இணைந்து கூட்டமாக நிற்க முடியாது என்பது. இதன் பிரகாரம், பொது இடங்களில் தனித்தனியாக - ஆறு அடி இடைவெளி விட்டு நிற்க நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளலாம். 

மாவீரர் துயிலும் இல்லங்களை ராணுவம், காவற்துறை, புலனாய்வுத்துறை ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்னராகவே முற்றுகையிட்டு, வீதிகளையும் தடுப்பு போட்டு யாரும் அங்கு செல்ல முடியாது மறித்துவிட்டனர். மற்றைய பொது இடங்களில் - இடர்கால விதிமுறைகளை அனுசரித்து யாரும் செல்வதற்கு நினைவேந்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதிக்கவில்லை என்பது மூத்த வழக்குரைஞரின் கருத்து. 

ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை தங்களுக்கான வசதியாகக் கருதிய தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டதோடு நிற்காது மக்களையும் மாவீரர் குடும்பங்களையும் வீடுகளுக்குள் தீபமேற்றி வணங்குங்கள் என்று அறிக்கை விட்டு முடக்கிவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். 

இங்கு இதனோடு தொடர்புள்ள சில சம்பவங்களையும் தவறாது குறிப்பிட வேண்டும். 

யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த வயோதிபத் தாயொருவர் நல்லூரிலுள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் மலர்தூவி வணக்கம் செலுத்தினார். காவற்துறையினர் அங்கு சென்றனர். தமது மகன் ஒரு மாவீரர் என்றும், அவருக்கு வணக்கம் செலுத்த தமக்கு உரிமை உண்டென்றும் காவற்துறையினரிடம் அந்தத் தாயார் தெரிவித்தார். பல கேள்விகளைக் கேட்டு துளைத்துவிட்டு காவற்துறையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். தொடர்ந்து அத்தாயார் அங்கிருந்து மலர்தூவி தீபமேற்றி வணங்கிவிட்டு சென்றார். 

மாவீரர் நாளன்று யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தின் முன்னால் அடுத்த சம்பவம் இடம்பெற்றது. கத்தோலிக்க குருவான இளவாலையைச் சேர்ந்த பாஸ்கரன் அடிகளார் பல ஒளிச்சுடர்களை ஆயர் இல்லம் முன்னாலுள்ள பொது இடத்தில் ஏற்றினார். அங்கு சென்ற காவற்துறையினர் அவரைக் கைது செய்து மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இவர் மீதான வழக்கை அடுத்த மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்த நீதிவான், பாஸ்கரன் அடிகளாரை சொந்தப் பிணையில் விடுவித்தார். 

வழக்கு விசாரணையின்போது அவர் நிச்சயம் தம்மை சுற்றவாளி என்றே வாதிடுவார். தமக்கு வழங்கப்படக்கூடிய எந்தத் தீர்ப்பையும் அவர் ஏற்றுக்கொள்ள துணிவுள்ளவர். ஆனால், இங்கு அரச தரப்புக்கு பல சட்டச் சிக்கல்கள் ஏற்படக்கூடும். (சிலசமயம் வீடுகளுக்குள் தீபமேற்றிய தமிழ் அரசியல்வாதிகளான சட்டவாளர்கள் பாஸ்கரனுக்காக நீதிமன்றத்தில் வாதாட முன்னிலையாகக்கூடும்.) இதுதான் இன்றைய அரசியல். 

ஆயர் இல்ல முகப்பில் பகிரங்கமாகத் தீபமேற்றி நினைவேந்தல் செய்வதால் தம்மீது சட்டம் பாயும், தாம் கைது செய்யப்படலாம் என்பது தெரிந்து கொண்டே பாஸ்கரன் அடிகளார் இதனை மேற்கொண்டார். 


மாவீரர் வார முதல் நாளன்று கப்டன் பண்டிதரின் வீடு சென்று அவரின் தாயாரோடு இணைந்து நினைவேந்தல் செய்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் முன்மாதிரியை இங்கு குறிப்பிடாவிட்டால் இக்கட்டுரை நிறைவு பெறாது. இவ்விடயத்தை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். மாவீரரின் தாயான அந்த வயோதிபத் தாயாரிடமும், பாஸ்கரன் அடிகளாரிடமும் காணப்பட்ட துணிச்சல் தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்களிடம் ஏன் ஏற்படவில்லை. நாடாளுமன்றத்தில் மாவீரர் நினைவுசார் உரைகளை நிகழ்த்திவிட்டால் தங்கள் கடமை முடிந்துவிட்டதென எண்ணினார்களா? இறந்தவர் பெயரில் தம் புகழ் பாடுபவர்கள்போல இந்த அரசியல்வாதிகளும் இப்போது காணப்படுகிறார்களே தவிர வேறில்லை. 

விடுதலைப் போராட்டத்தில் கப்டன் பண்டிதர் எனப்பெயர் கொண்டவர் சின்னத்துரை ரவீந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட ஆரம்பகால மூத்த போராளி. வல்வெட்டித்துறை கம்பர் மலையைச் சேர்ந்த இவர் 1985ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி அச்சுவேலிப் பகுதியில் நடந்த மோதலில் மாவீரரானவர். 

அவரின் தாயார் மகேஸ்வரி சின்னத்துரை அவர்கள் நவம்பர் 21ம் திகதி தமது வீட்டில் மகனுக்கு நினைவுத் தீபமேற்றி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்தார். அவ்வேளை சுமந்திரன் திடுதிப்பென தமது பரிவாரங்களுடன் அங்கு சென்றார். 

கப்டன் பண்டிதரின் திருவுருவப் படத்துக்கு தாயார் தீபமேற்றும்போது இவரும் இணைந்து தீபம் ஏற்றிய ஒளிப்படம் பத்திரிகைகளில் வெளியானது. விடுதலைப் புலிகளின் போராட்ட வழிமுறையை (ஆயுதப் போராட்டம்) தாம் ஒருபோதும் ஏற்கவில்லையென கூறிவந்த சுமந்திரன் - ஆயுதமேந்திப் போராடி - அதுவும் விடுதலைப் புலி போராளியாக சிங்கள காவற்துறையினருடனான மோதலில் மாவீரரான கப்டன் பண்டிதருக்கு தீபமேற்றியது பலருக்கும் வியப்பையளித்தது. அதேசமயம், இது ஒரு (கபட) நாடகமாக இருக்கலாமென்ற எண்ணத்தையும் உருவாக்கியது. 

புலி நீக்க அரசியலில் கிடைத்த அனுபவமா? அல்லது புலித்தோல் அரசியலா என்றுங்கூட விமர்சனங்கள் எழுந்தன. இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாக அவரே இலங்கை நாடாளுமன்றத்தில் பதிலளித்துவிட்டார். 

சரத் வீரசேகர என்னும் முன்னாள் கடற்படை அதிகாரியான - தற்போது நாடாளுமன்றத்தில் சிங்கள பௌத்த இனவாத உறுப்பினராகவிருப்பவரின் கேள்வியொன்றுக்கு, சுமந்திரன் பதிலளிக்கையில் கப்டன் பண்டிதரின் வீட்டுக்கு செல்ல வேண்டிய விடயத்துக்கு விளக்கமளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இங்கு இரண்டு விடயங்களை அவர் குறிப்பிட்டார். 

'கப்டன் பண்டிதரின் படத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை இல்லை. அவரது தாய் நினைவேந்தல் நிகழ்த்தும்போது நான் அருகில் நின்றேன்" என்பது இவரது சுயவெளிப்படுத்தல். அதாவது அந்தப் படம் விடுதலைப் புலிகளின் சீருடையில் இருந்திருந்தால் தாம் அங்கு சென்றிருக்க மாட்டேன் என்பது அவரது முதலாவது வாதம். சீருடை இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன அந்த மாவீரன் சீருடை அணிந்து ஆயுதமேந்தி களத்தில் விதையான புலிப்போராளியென்பது சுமந்திரனுக்குத் தெரியாததல்ல. 

அடுத்தது தாயாரின் அருகே நின்றேன் என்ற வாதம். மாவீரர் பண்டிதரின் படத்துக்கு சுமந்திரன் தீபம் ஏற்றும் ஒளிப்படம் பத்திரிகைகளில் பிரசுரமானது தெரிந்தும் எதற்காக அருகில் நின்றேன் என்று சொல்ல வேண்டும். ஒரு மாவீரனுக்கு மரியாதை செலுத்திய விடயத்தை மறுத்து அந்த மாவீரனை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதை என்னென்று சொல்வது?

அதுமட்டுமன்றி, அந்த மாவீரன் வீட்டுக்குச் செல்லும்போது சிங்கள படையினரின் பாதுகாப்புடன் சென்றதுங்கூட அந்த மாவீரனின் போராட்டத்தையும் உயிர்க்கொடையையும் அவமரியாதை செய்வது. அதே சிங்களப் படையினரால்தான் கப்டன் பண்டிதர் கொல்லப்பட்டாரென்பது சுமந்திரனுக்குத் தெரியாதா?

தமிழர் தாயகத்தில் தங்களை தமிழரசுக் கட்சியினரென்று கூறிக்கொண்டு வெளியுலகில் தங்களை சம~;டிக் கட்சியென்று கூறும் தமிழரசாரின் சுத்துமாத்தில் வந்த ஒரு கலை இது. 

புலி நீக்க அரசியல் தோற்றதால் புலி ஆதரவு அரசியல் வேண்டப்பட்ட நிலையில், புலித்தோல் போர்வையில் நடத்திய வேடம் அந்த நாடகமேடை அகற்றப்படும் முன்னரே கலைக்கப்பட்ட காட்சியை இந்த வருட மாவீரர் நாள் அரங்கேற்றியுள்ளது. தேசியம் பெயர் கொண்ட தமிழ் கட்சிகளின் தலைவர்களின் வேடங்களும் சிலவேளை வளர்காலங்களில் கலையலாம். 


No comments