நைஜீரியா 333 மாணவர்களைக் காணவில்லை!! ஆயுததாரிகள் கடத்தினார்களா?


நைஜீரியாவின் வடமேற்கு அமைந்துள்ள கட்சினா மாநிலத்தில் உள்ள கங்காராவில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியை துப்பாக்கி ஏந்திய ஆயுததரிகள் தாக்கியதில் 333 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை உந்துருளியில் வந்து தாக்குதல் நடத்தியவர்கள் பள்ளியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயுததாரிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்திருந்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தப்பிச் சென்று சுற்றியுள்ள காட்டில் ஒளிந்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர்.

இதுவரை 333 மாணவர்களைக் காணவில்லை என கட்சினா ஆளுநர் அமினு மசாரி ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பின்னர் கூறினார். பள்ளியில் மொத்தம் 839 மாணவர்கள் அப்பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர்.


தாக்குதலில் இருந்து தப்பிக்க காட்டில் ஒளித்திருந்த மாணவர்கள் வெளியே வந்துள்ளனர் என்று மசாரி கூறினார். மாணவர்கள் ஆரம்பத்தில் மறைந்திருந்தார்களா அல்லது அவர்கள் தாக்குபவர்களிடமிருந்து தப்பித்தார்களா கடத்தப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

கடத்தப்பட்ட குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கையை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மசாரி கூறினார்.

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் பள்ளியில் கூடி, காணாமல் போன சிறுவர்களை பாதுகாப்பிற்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பதோடு, சிறுவர் சிறுமிகளை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

No comments