கந்தபுரம் கரும்புத்தோட்டம்:கூட்டு களவாணிகள் யார்?

 


யுத்த வடுக்களை தாண்டி மக்கள் முடங்கிக்கிடக்க பெருமளவு அரச காணியை  வடக்கின் பெரும் தரப்புக்கள் சில ஆக்கிரமிக்க முற்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கந்தபுரம் கரும்பு தோட்ட காணி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் இன்றும் நிலவுகின்றது. 1964ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக சொல்லப்படும் சீனி உற்பத்தி நிறுவனம் 1983ம் ஆண்டளவில் சீனி உற்பத்தி உற்பத்தி செயற்பாட்டினையும், கரும்பு செய்கையினையும் முற்றாகவே கைவிட்டுள்ளதாக பிரதேசத்தில் உள்ள மூத்த குடிமக்கள் தெரிவிக்கின்றனர். அதன் பின்னர் தென்னை மற்றும் உப பயிர் செய்கை மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. எனவே என்ன நோக்கத்திற்காக அரசிடமிருந்து குத்தகையாக குறித்த காணி பெறப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படாது மாற்று பயிர் செய்கை மேற்கொள்ள முயற்சித்த காலமான 1983ம் ஆண்டு காலப்பகுதியினுடனேயே குத்தகை ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக கணிக்கப்பட வேண்டும்.


குறித்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் போர் சூழல் காரணமாக வெளிநாடுகளிற்கு செல்கின்றபோது எந்த விதமான சட்ட ஏற்பாடுகளும் பின்பற்றப்படாமல் மேற்குறித்த காலப்பகுதியில் முகாமையாளராக செயற்பட்ட சொக்கலிங்கம் கோபாலசிங்கம் என்பவரை பணிப்பாளராக நியமிக்கப்பட்டமையானது சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக அமைகின்றது. குறித்த நபர் 1983ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2008ம் ஆண்டுவரை தனி மனிதராக காணியில் உள்ள வருமானங்களை எந்தவித அரச வரிகளும் செலுத்தாமல் தேறிய இலாபமாக வருடம் ஒன்றிற்கு 24 லட்சம் வீதம் 25 வருடங்களாக பெற்று வந்துள்ளதாக பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. 


தற்போது குறித்த காணியின் வருமானத்தினை ஆண்டு ஒன்றுக்கு 100 லட்சம் இலாபமாக கடந்த 4 ஆண்டுகளாக பெறப்பட்டு வருகின்றது. கிளிநொச்சி சீனி உற்பத்தி நிறுவனம் எனும் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு என்ன சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மாவட்ட செயலகமும், கரைச்சி பிரதேச செயலகமும் வழங்கியுள்ளது என்பது தொடர்பில் மக்கள் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.


இந்நிலையில் வடக்கில் உள்ள பண முதலைகள் சில குறிதத் காணியை இலக்கு வைத்துள்ளதாகவும், அதில் வடக்கில் உள்ள கிளிநொச்சியை சேர்ந்த முக்கிய பொறுப்புவாய்ந்த அதிகாரியும் அடங்குவதாகவும் தெரியவந்துள்ளது.


இவ்வாறான நிலையில் கடந்த காலங்களில் செய்கை மேற்கொண்டு வந்த விவசாயிகள் சிலருக்கும் செய்கை மேற்கொள்வதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த காணியில் 25 வருடங்களிற்கு மெலாக வசித்தவரும் குடும்பம் ஒன்று இவ்வாறு தற்காலிகள கொட்டகையில் வாழ்ந்து வருகின்றது. இவர்களிற்கு மலசலகூடம் அமைப்பதற்கு கூட அரச காணி என அதிகாரிகள் சாட்டுக்களை கூறி வருவதாகவும், அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.


அரச காணி என தெரிவிக்கப்பட்டுவந்த காணியில் குறிப்பிட்ட சிலர் இலக்கு வைத்து இவ்வாறு காணியை ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில் உண்மை நிலை வெளிவந்துள்ளது.


தற்போது சந்தை நிலவரப்படி ஏக்கர் ஒன்று இருபத்தையாயிரம் ரூபா தொடக்கம் முப்பதாயிரம் ரூபா வரை சாதாரணமாக செய்கை குத்தகையாக பெறப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலையில் அரசுக்கு கிடைக்கவேண்டிய பல மில்லியன் ரூபாய்கள் ஒரு சிலரினது பைகளிற்குள் சென்றுள்ளமை உறுதியாகியுள்ளது. 


No comments