ரெமீடியஸா? குமரனா ? அடுத்த யாழ்.மாநகர முதல்வர்?யாழ். மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம் 03 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் மீண்டும் இம்மானுவல் ஆனோல்ட் பதவியேற்கும் சாத்தியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் கூட்டமைப்பின் சார்பில் மற்றொரு வேட்பாளரை  முன்னிறுத்த தற்போது ஏனைய தரப்புக்கள் சிபார்சினை முன்வைத்துள்ளன. 


வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு – செலவுத் திட்டம், மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்டினால் கடந்த 2 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.


அந்தச் சமர்ப்பணத்தின் போது, அதற்கு ஆதரவாக 19 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டு முதலாவது வாசிப்பு தோற்கடிக்கப்பட்டிருந்தது.


மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது.


இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு – செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்நிலையில் புதிய முதல்வர் பெயரை 14 நாட்களுள் சமர்ப்பிக்க வேண்டிய தேவை உள்ள போதும் மாற்றீடான தரப்பு இன்மையே காணப்படுகின்றது.

ஈபிடிபி தமது தரப்பில் சட்டத்தரணி ரெமீடியஸை களமிறக்க திட்டமிட்டுள்ளது.

ஆயினும் மறுபுறம் ரெமீடியஸிற்கு மாற்றீடாக களமிறக்க பொருத்தமான வேட்பாளர் இல்லாத சூழலே காணப்படுகின்றது.

தமிழ் தேசிய முன்னணியின் உள்ளக முரண்பாடுகளால் மணிவண்ணனின் முதல்வர் கனவு பொய்த்துள்ளது.

இந்நிலையில் மாற்றீடு இன்றி இம்மானுவல் ஆனோல்டினை களமிறக்க சில தரப்புக்கள் முயற்சித்துவருகின்றன.

எனினும் சுமந்திரன் தரப்பு தற்போதைய யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடக செயலாளரும் கூட்டமைப்பின் உறுப்பினருமான அருள்குமரனை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.


No comments