சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020!

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.

தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி நடைபெற்ற இவ் நிகழ்வில், முதற்களப்பலியான மாவீரர் லெப். சங்கர் அவர்களின் நினைவுக்கல் அமைந்திருக்கும் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்து ஏற்கனவே இங்கு பாதுகாக்கப்பட்ட புனிதமண்ணும் தாயகத்து சில மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித மண்ணும் எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன், காலத்தின் தேவை கருதி தமிழீழத் தேசியத் தலைவர்; அவர்களின் 2008ஆம் ஆண்டின் தேசிய மாவீரர் நாள் உரையின் சிறுதொகுப்பு திரையில் காண்பிக்கப்பட்டதோடு, சமகாலத்திற்கு பொருந்தக்கூடியதான தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிவணக்கமும் ஒளிபரப்பப்பட்டது. மணியோசை, சங்கொலி, பறையொலியுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து தாயக நேரம்  18:07 (ஐரோப்பிய நேரம் 13:37) மணிக்கு துயிலுமில்லப் பாடலோடு முதன்மைச் சுடரேற்றப்பட்டது. தொடர்ந்து மலர்வணக்கப் பாடலும் ஒலிபரப்பப்பட்டதுடன், சுகாதார நடைமுறை ஒழுங்கை சீரிய முறையில் பின்பற்றி வருகை தந்த மக்களால் சுடர், மலர்வணக்கமும் செலுத்தப்பட்டது.

சமநேரத்தில் இவர்டோன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவு சுமந்த நடுகல் நினைவுத்தூபியிலும், பொதுத்தளங்களிலும், இல்லங்களிலும் ஈகைச்சுடரேற்றலுடன் தமது வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வையும், இலட்சியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழத் தேசிய மாவீரர் 2019க்கான கொள்கைவகுப்பு அறிக்கை ஒலிபரப்பப்பட்டதுடன், தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையின் அறிக்கையும் வாசித்தளிக்கப்பட்டது.  தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர்; நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டியில் 13வயதுப் பிரிவில் முதலாமிடத்திடத்தினைப் பெற்றுக் கொண்டிவரின் பேச்சும் இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியாக 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 சுவிஸ் நிகழ்வானது உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நிறைவுபெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை


No comments