சீமான் அறிவிப்பால், கலக்கத்தில் ஸ்டாலின்!


வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளில் சரிபாதியாக 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்திலுள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகமான ராவணன் குடிலில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சீமான் நேற்று (நவம்பர் 18) மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்து நீங்கள் போட்டியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளதே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு வழக்கமான தன்னுடைய சிரிப்பை வெளிப்படுத்திய சீமான், “மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் விரும்புகிறார்கள். நானும் அதையே நினைக்கிறேன்” எனப் பதிலளித்தார்.

பிகாரில் தேஜஸ்வி யாதவுக்கு வந்த நிலை, தமிழகத்தில் திமுகவுக்கு வரக்கூடாது என்றால் காங்கிரஸை அது கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற சீமான், அதிமுகவுக்கு எதிர்காலம் வேண்டும் எனில் பாஜகவைக் கழற்றிவிட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பாஜக நடத்தும் வேல் யாத்திரை மூலமாக நாம் தமிழருக்குத்தான் விளம்பரம் கிடைக்குமெனவும், பாஜகவுக்கு அல்ல எனவும் கூறியவர், 10 ஆண்டுகளாக தான் பேசிவரும் கொள்கைகளை தற்போது பாஜக கையில் எடுத்திருப்பதாகச் சாடினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில், ஸ்டாலினை எதிர்த்து போட்டி என அறிவித்துள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் கடலூரில் நின்ற சீமான் 12,000 வாக்குகளைப் பெற்றார். அக்கட்சி 1 சதவிகித வாக்குகளையும் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் 4 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அறிவிப்பு உண்மையாகுமா இல்ல பொய்யாகுமா எனும் கேள்வி இருந்தாலும் இணையத்தில் திமுகவினருக்கும் நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே இணையத்தில் கடும் மோதல்கள் நடைபெற்றுவருவது குடிப்பிடத்தக்கது.

No comments