செயலாளராக மாவை! கூட்டமைப்புத் தீர்மானம்?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவை நியமிப்பதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் எவ்விதமான பதவி நிலைமாற்றங்களை செய்வதில்லை என்றும் உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத்திட்டத்தினை எவ்வித குழப்பங்களுமின்றி கூட்டமைப்பாக நிறைவேற்றுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பளிக்குமாறு கோருவது என்றும் கட்சித்தலைவர்களிடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றின் தலைவர்களான மாவை, சோ.சேனாதிராஜா, செல்வம் அடைக்கலாநதன், சித்தார்த்தன் ஆகியோரும் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்ற கூட்டமொன்று நேற்று யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது உள்ளூராட்சி மன்றத்தேர்தலின்போது தமிழ்த் தேசிக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிடையே ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பட்டுக்கு அமைவாக இரண்டரை வருடங்கள் நிறைவில் பதவிநிலைகளை மாற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

எனினும் தற்போதுள்ள சூழமைகளை கருத்தில் கொண்டு முதலில் டிசம்பர் மாதம் வரவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வரவு செலவுத்திட்டத்தினை நிறைவு செய்துவிட்டு எதிவர்ரும் ஜனவரிக்கு பின்னர் பதவி நிலைகளை மாற்றுவதென்று கட்சித்தலைவர்கள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனினும், சில உள்ளூராட்சி மன்றங்களில் பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிலைமைகளை எடுத்துக்கூறி, குழப்பங்கள் எதுவுமின்றி வரவு செலவுத்திட்டத்தின கூட்டமைப்பாக நிறைவேற்றுவதற்கு அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை நல்க வேண்டுமெனக் கோருவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழரசுக்கட்சியின் தற்காலிக செயலாளராக வைத்தியர்.ப.சத்தியலிங்கம் செயற்படுவரென்றும் அதற்கான முறையான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதென்றும் தீர்மானிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சோதிராஜா தெரிவித்தார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் பதவி இதுவரையில் யாரும் வகித்திருக்காத நிலையிலும் அவ்வாறானதொரு பதவி வெற்றிடமாக நீடித்து வருகின்ற நிலையிலும் கூட்டமைப்பிற்கான செயலாளர் பதவிக்கு பொருத்தமான ஒருவரைய நியமிக்க முடியும் என்றும் இக்கூட்டத்தில் முன்மொழிவொன்று செய்யப்பட்டது.

அதற்கு அமைவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவை நியமிப்பதென்றும் அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோக பூர்வமாக அறிவித்து அவருக்கான அதிகாரங்கள், செயற்பாடுகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதென்றும் பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட்டின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments