இனப்பிரச்சினை பேச்சு: திம்பு, நோர்வே, நாடாளுமன்ற கன்ரீன்?


திம்பு,நோர்வே,பாங்கொங் என நீண்ட தமிழ்மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை சுமந்திரன் புண்ணியத்தில் தற்போது நாடாளுமன்ற கன்ரீனிற்கு சென்றுள்ளது.

தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சுக்களை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனை நாடாளுமன்ற சிற்றுண்டி சாலையில் வைத்து தனக்கு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகளின்போது பிரதமர், ஜனாதிபதியை நாம் சந்திப்பது வழமை. அதேபோன்று நேற்று நாடாளுமன்றச் சிற்றுண்டிச் சாலையில் பிரதமர் மஹிந்த என்னைச் சந்தித்துப் பேசினார். நாங்கள் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க வேண்டும் என அவர் கூறினார். நாம் எப்போதும் பேச்சுக்குத் தயாராக இருக்கின்றோம் என அவருக்கு நான் பதிலளித்தேன்.


இதேவேளை ஜனாதிபதியும் அவ்விடத்துக்கு வந்தார். அப்போது நான் தேர்தலுக்கு முன்பு இவர்களுடன் பலமுறை பேச்சுக்களை நடத்தியிருக்கின்றேன் என ஜனாதிபதி கூறினார். உடனே பிரதமர் அது தேர்தலுக்கு முதல், ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு ஒழுங்கான பேச்சு எதுவும் நடத்தவில்லை என்றார்.

இந்நிலையில் தான் பிரதமருடன் அதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடிவிட்டு அறிவிக்கின்றேன் என ஜனாதிபதி கூறினார் என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தலிற்கு முன்னதாக எம்.ஏ.சுமந்திரன் மகிந்தவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து நடத்திய பேச்சுக்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments