ஊடகவியலாளர்களிற்கு நீதி வழங்காத நாடு இலங்கை?

நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற  ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைவிலக்கை ஒழிப்பதற்கான சர்வதேச

தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட செய்தி

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத வரலாற்றைக் கொண்ட நாடு இலங்கை: சுதந்திர ஊடக இயக்கம்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தாலும், இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஒரு குற்றத்திற்கு கூட நீதி வழங்கப்படாத வரலாற்றைக் கொண்ட ஒரு நாட்டில் வாழ வேண்டியது குறித்து சுதந்திர ஊடக இயக்கம் கவலை கொண்டுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம்  என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த அரசு கடந்த ஆட்சியின் போது பல சம்பவங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தாலும், அவை மந்த கதியிலேயே நகர்கின்றன. நாட்டின் வரலாற்றில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இரண்டு உயர் நீதிமன்ற வழக்குகள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. ஒன்று கிடப்பில் போடப்பட்டுள்ள தர்மரத்னம் சிவராம் கொலை தொடர்பான வழக்கு மற்றது பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்கு.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகி, தான் இதற்கு முன் வழங்கிய சாட்சியம் நிர்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று கூறியுள்ளார். இவ்வாறு கூறியுள்ளதானது, வழக்கில் ஒரு பாதகமான திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. 

சுதந்திர ஊடக இயக்கம் நடத்திய ஆய்வின்படி, இப்போதிருப்பது ஊடகவியலாளர்களுக்கு எதிராக அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் இடம்பெற்ற காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஆகும். இந்த நிலையில் நீதியான விசாரணைகள் இடம்பெறுமா என்ற கவலையை நீதிக்காக குரல் எழுப்பும் ஊடக சமூகத்தினரிடையே ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 22 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தம், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சுயாதீனமாக நடத்தப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. 

20 வது திருத்தத்தின்படி, இலங்கையின் அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு நியமிக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இதற்கு முன் செய்யப்படாத வகையில் விசாரணைகளை மேற்கொள்வார்களா…?, அத்தகைய நீதிபதிகள் சுயாதீனமாக இருப்பார்களா…? என்ற கேள்விகள் இந்த துறையில் எழுந்துள்ளன.

இந்தப் பின்னணியில்தான், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் நவம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் அனுஷ்டிக்கப்படுகிறது. 

யார் ஆட்சியில் இருந்தாலும் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும். இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் பிற ஊடக அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து அனைத்து அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்கிறார்கள். கோரிக்கைகள் விடுக்கின்றார்கள். வரலாற்றில் கல்லெறியப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க முழு அளவிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை ஊடக சமூகம் மற்றும் நீதியை மதிக்கும் அனைத்து சமூகங்களும் விசாரணைகளை துரிதப்படுத்த புதிய அரசாங்கம் மீது வலுவான அழுத்தம் கொடுக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.


No comments