பூசகர் கொலை:இதுவரை ஜவர் கைது


பெண் சல்லாபத்தைக் கண்டித்த பூசகரை இருவருடன் சேர்ந்து அவரின் உதவியாளரே அடித்துக் கொன்றார். இந்தச் சம்பவம் புங்குடுதீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யாழ்ப்பாணம் – புங்குடுதீவு – ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயத்தின் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.


இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூவரும் மற்றும் இரு பெண்களுமாக ஐந்து பேர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்றுமுன்தினம் – வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்தவைவருமாறு:-


பூசகரும், உதவியாளரும் தங்கியிருந்த ஆலயத்தால் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்ட வீட்டில் இருவரும் தங்கியிருந்துள்ளனர். அந்த வீட்டில், உதவியாளர் பெண் ஒருவரை அழைத்து வந்து சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்ட பூசகர் அவரைக் கண்டித்ததுடன் அங்கிருந்து விரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதவியாளர், அவரைப் பழிவாங்கும் நோக்கில் வேறு இருவருடன் சேர்ந்து இந்தக் கொலையை செய்துள்ளார்.


உதவியாளர் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், ‘மூவரும் மது அருந்திவிட்டு இரும்புக் கம்பியால் பூசகரின் பின் தலையில் அடித்துக் கொன்றோம். இந்தச் சம்பவம் சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியிருக்கும் என்பதால் அதன் ‘ஹார்ட் டிஸ்க்’கையும் எடுத்துச் சென்று மறைத்தோம்”, என்று கூறியுள்ளார்.


மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மறைக்கப்பட்ட ‘ஹார்ட்டிஸ்க்’கும் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டது. மேலும், பூசகரின் உடைமையில் இருந்த 15 ஆயிரம் ரூபா பணத்தை எடுத்த கொலைச் சந்தேகநபர்கள் அதனை இரு பெண்களிடம் கொடுத்து யாழ். நகரில் சில பொருட்களை வாங்கியுள்ளனர். இதனால், சம்பவத்துக்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தில் இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இதேவேளை, நேற்று அதிகாலை பூசகரின் உடல் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் விசாரணைகளை நடத்தினார். இந்த விசாரணையை இணைந்து நடத்திய யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி மயூரன், பூசகர் வலுவான ஆயுதம் ஒன்றால் பின்னந் தலையில் தாக்கப்பட்டமையாலேயே உயிரிழந்தார்” என்பதை உறுதி செய்தார்.

No comments