மண்ணெண்ணெய் போத்தலுடன் மருமகள் போராட்டம்

தனது மாமியாரால் வழங்கப்பட்ட காணியினை மீண்டும் அவர் உரிமை கோருகிறார் என்றும் அந்தக் காணியினை மீட்டுத்தருமாறும் கோரி பெண் ஒருவர் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தெரிவிக்கையில்,

“தனது கணவனின் தாயாரால் வவுனியா கோவில்குளத்தில் நான்குபரப்பு காணி கடந்த 2006ம் ஆண்டு எழுத்துமூலமாக வழங்கப்பட்டது. தற்போது தனது கணவன் இறந்தநிலையில் அந்த காணியினை மீண்டும் அவர் உரிமை கோருவதுடன் 2010ம் ஆண்டு பொலிஸாரின் பாதுகாப்புடன் வீட்டினையும் அமைத்துள்ளார்.

எனவே கணவன் இறந்தநிலையில் தனக்கு கிடைக்க வேண்டிய காணியினை பெற்றுத்தருமாறு அவர் கோரிக்கை முன்வைத்ததுடன், தீக்குளிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.”

போராட்டத்தின் போது பதாதை ஒன்றை ஏந்தியபடி நின்ற குறித்த பெண் மண்ணெண்ணெய் போத்தில் ஒன்றினையும் உடன் வைத்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவருடன் கலந்துரையாடலை ஏற்படுத்தியதுடன், அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய் போத்திலை மீட்டு அவரை, பிரதேச செயலாளரிடம் அழைத்துச்சென்றனர்.

குறித்த காணி 1981ம் ஆண்டிலேயே அவரது மாமியாரின் பெயரில் பதியப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

இது தொடர்பாக சம்பந்தபட்ட மற்றயதரப்புடனும் கலந்துரையாடி இதற்கான தீர்வினை பரிசீலிக்கலாம் என அப்பெண்ணிடம் பொலிஸாரும் உறுதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

No comments