ஒரு மாதத்துக்குள் தடுப்பூசி தயார்! சூடுபிடிக்கிறது தேர்தல் களம்!


உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 68 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தேர்தலுக்கு முன்னதாக அதாவது அடுத்த ஒரு மாதத்தில் கொரோனாவுக்கு மருந்து கிடைத்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் பென்சில்வேனியாவில் கேள்வி பதில் நேரத்தில் வாக்காளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ‘கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் நாம் நெருங்கிவிட்டோம். இன்னும் ஒரு மாதத்துக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்’ என்று தெரிவித்தார்.

ஆனால் அதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, ஃபாக்ஸ் ஊடகத்திடம், “கொரோனா மருந்து சந்தைக்கு வர 4 அல்லது 8 வாரங்கள் கூட ஆகலாம் என்று தெரிவித்துள்ளார். ஒரு சில மணி நேரத்தில் ட்ரம்ப் தனது நிலையை இவ்வாறு மாற்றிக் கொண்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், அரசு சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு, தேர்தலை ஒட்டி விரைவாக மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுப்பதாக ஜனநாயகக் கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் அரசு மருத்துவரான ஆன்டனி பாசி கூறுகையில், ''2020 இறுதியில்தான் கொரோனா தடுப்பு மருந்து மனித பயன்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ”கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமான எஃப்டிஏவின் அனுமதி கிடைத்தவுடன் 24 மணி நேரத்தில் அமெரிக்கா முழுவதும் மருந்தை விநியோகம் செய்யவுள்ளோம்” என்று அமெரிக்க மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

No comments