தியாக தீபம் திலீபனின் 33 ஆம் நினைவு நாள் இன்று ஆரம்பம்!


இனப்படுகொலையாளிகளின் ஆட்சியில் சிங்களக் காவல்துறையின் கெடுபிடிகளோடு நீதிமன்றத் தடையுடன் தியாக தீபம் லெப்.கேணல்

திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளின் முதலாம் நாள் இன்று ஆரம்பமாகின்றது.

யாழ்ப்பாணம் ஊரெழுவில் நவம்பர் 27, 1963 ஆம் ஆண்டு பிறந்தார்  திலீபன். தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டம் தோல்வியடைந்த பின்பு இலங்கைத் தமிழர்கள் ஆயுத போராட்டத்தைக் கையில் எடுத்தனர். ஆரம்பத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் உண்ணாவிரதத்தின் பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26 1987 ல் வீரச்சாவடைந்தார்.

திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள்

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

முதல் நாள் 

யாழ்ப்பாணம் நல்லூரில் மக்கள் ஒன்றுகூடி நின்றிருந்தார்கள். அவர்களது உள்ளம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. திலீபன், உண்ணாவிரத மேடைக்குச் சென்றார். மேடை ஏறும் முன் ஒரு வயதான அம்மா திலீபனுக்கு ஆரத்தி எடுத்து திருநீறு பூசி விடுகிறார். சரியாக 9.45க்கு திலீபன் மேடையில் அமர்ந்தார். 

உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்கிற விளக்க உரை கொடுக்கப்பட்டது. வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபனுக்கு சே குவேரா , பிடல் காஸ்ட்ரோ, யாசர் அராபத் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு வழங்கப்பட்டது. 

தொடர்ந்து கவிதைகள், உண்ணாவிரத விளக்க உரைகள் அரங்கேறின. இரவு 11 மணிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வந்து திலீபனை சந்தித்தார் . அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு அதிகாலை 1.30க்கு உறங்கினார்.

No comments