சூர்யா மீது நீதிமன்றம் நடவடிக்கையா! வைகோ உட்பட பெருகும் ஆதரவு!


தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் மதுரை ஜோதி ஸ்ரீ துர்கா, நாமக்கல் மோதிலால், தருமபுரி ஆதித்யா என 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வுக்கு தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாணவர்களின் தற்கொலை மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

நீட் தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி சூர்யா விமர்சித்த நிலையில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதினார். ஆனால், சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என அவருக்கு ஆதரவு கரங்களும் நீண்டுள்ளன.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (செப்டம்பர் 15) அளித்த பேட்டியில், “நீட் தேர்வு தொடர்பாக சூர்யா தெரிவித்த கருத்தில் உள்நோக்கம் இல்லை. நீட் தேர்வால் 3 பேர் இறந்த அதிர்ச்சியில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்” என்று ஆதரவு தெரிவித்தார்.

“நீட் தேர்வின் ஆபத்தைக் குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து, மாணவர்கள் மீதான அக்கறையின் வெளிப்பாடு. அரசும், நீதிமன்றங்களும் என்ன செய்கின்றனவோ அதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் அவமதிப்புக்கு இடம் எங்கே வந்தது” என்று கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வீடியோ கான்பிரன்சிங் விசாரணை நடப்பது உண்மைதானே? கொரோனா காலத்திலும் நீட் தேர்வுகள் நடத்துமாறு தீர்ப்புச் சொல்லப்பட்டதும் உண்மைதானே என்றும் கேட்டுள்ளார்.

 மேலும், “மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு, மாணவர்களை பலியெடுத்துக் கொண்டுள்ளது. நீதிமன்றங்களும் அதற்கு ஒத்துப் போகலாமா? ... நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதை விட்டுவிட்டு, விமர்சனங்களை முடக்கும் போக்கு ஆபத்தானது. அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல்” என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “நடிகர் சூர்யா மீது நடத்தப்படும் தாக்குதல் உள்நோக்கம் கொண்டது. நீட் தேர்வுக்கு எதிரான கோபத்தின் வெளிப்பாடாகவே இவ்வாறான கருத்தை சூர்யா தெரிவித்துள்ளார். அதில் தவறு ஏதுவுமில்லை. நடிகர் சூர்யா குறி வைக்கப்பட்டால் காங்கிரஸ் துணை நிற்கும்” என்று ஆதரவு அளித்துள்ளார்.

திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கல்வி உரிமை பறிபோகும்போது கலைஞர்கள்-படைப்பாளிகள் எழுப்பும் உரிமைக்குரலே மாணவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும். நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யாவுக்கு வாழ்த்துகள். பிற உச்ச நடிகர்களும் மாணவர் பக்கம் நிற்பார்கள் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

எனினும் இதற்கு எதிர்வினையாற்றிய பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன், “மாணவர்களின் தற்கொலையைத் தொடர்ந்து போட்டித் தேர்வுகளே கூடாது என்பது போல நடிகர் சூர்யா பேசுகிறார். சினிமாவில் வசனம் பேசுவதைப் போல நினைத்து மாணவர்களின் வாழ்க்கையில் அவர் விளையாட வேண்டாம்” என்று சாடியுள்ளார்.

No comments