இது கோட்பாட்டின் மீது கட்டப்பட்ட கோட்டை. யாரும் இதை பிளக்க முடியாது; சீமான் ஆவேசம்

 


நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாண சுந்தரம், மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியில் இருந்து விலகிய நிலையில் நாம் தமிழர் கட்சிக்குள் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘இது கோட்பாட்டின் மீது கட்டப்பட்ட கோட்டை. இதை யாராலும் தகர்க்க முடியாது’ என்று பதிலளித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சீமான் சமீப நாட்களாக கட்சிக்குள் நடப்பவற்றைப் பற்றி பேசியுள்ளார்.

“கட்சிக்கு ஒருவர் வருகிறார், இருக்கிறார், அவர் போகிறார் என்றால் கட்சி பிளவு என்று ஆகிவிடுமா? நாம் தமிழர் கட்சி முன்பை விட மிகவும் இறுக்கமாகவும், நெருக்கமாகவும், உற்சாகத்தோடும் தேர்தல் பணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சிலர் வருவார்கள், முரண்பாடு வரும்- வெளியேறுவார்கள் வெளியேற்றப்படுவார்கள். இது எல்லா கட்சிகளிலும் இயல்பாக நடப்பதுதான். அதனால் பிளவு என்பது வேடிக்கையானது.

 

திமுகவில் இருந்து வைகோ போனதுதான் பிளவு. சிலரிடம் நானே சொல்கிறேனே... போங்கள், உங்களோடு யாரும் வந்தால் அவர்களையும் கூட்டிக் கொண்டு போங்கள் என்று. என்னை இரண்டாக வெட்டிப் பிளந்தாலொழிய நாம் தமிழர் கட்சியை பிளவுபடுத்த முடியாது. இது கோட்பாட்டின் மீது கட்டப்பட்ட கோட்டை. யாரும் இதை பிளக்க முடியாது. சில மொட்டைக் கடுதாசிகள் எல்லாம் தம்பிகளின் கூட்டு மனசாட்சி கிடையாது. வாதத்தில் தோற்பவனே அவதூறை கையிலெடுப்பான்” என்று சொல்லியிருக்கும் சீமான்,

“தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி பொதுக்குழுவை, செயற்குழுவை கூட்டித்தான் ஆக வேண்டும். கூட்டாமல் இருக்க முடியாது. அந்த கடிதம் எழுதியவர் செயற்குழு, பொதுக் குழுவுக்கு வராமல் இருந்திருக்கலாம். ஒரு அரசியல் இயக்கம் வளரும்போது இதையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். பத்து வருடத்துக்கு முன் இதையெல்லாம் யாரும் கேட்கவில்லை. இப்போது கேட்கிறார்கள், கடிதம் எழுதுகிறார்கள் என்றால் சீமான் வளர்கிறார், கட்சி வளர்கிறது என்றுதான் பொருள்.

சீமானை வீழ்த்திவிட வேண்டும் என்று பலர் ஆசைப்படுகிறார்கள். பலர் அதற்கான வேலைத் திட்டத்தோடு இருக்கிறார்கள். என் தலைவர் படையிலே சிங்களன் ஊடுருவுவது போல சிலர் நம் கட்சியிலேயே இருந்திருக்கிறார்கள். படையை நடத்துபவன் எதிரியோடு சண்டை போடலாம், இப்படிப்பட்டவர்களோடு சண்டை போட முடியாது. என் தம்பி பேரறிவாளன் என்னிடம் எழுதிக் கொடுத்ததை போல, ஜனநாயக முறையில் முடிவெடுத்து சர்வாதிகாரமாக செயலாக்கிக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் சீமான்.

 

No comments