சுவிற்சர்லாந்து நடைபெற்ற தமிழ்மொழிப் பொதுத்தேர்வு

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 26 ஆவது பொதுத்தேர்வாக  நேற்று, 19.09.2020 ஆம்

நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 5177 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன்; சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பத்தாம் வகுப்புத்தேர்வில் 437 மாணவர்களும் பதினோராம் வகுப்புத்தேர்வில் 267 மாணவர்களும் பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் 229 மாணவர்களும்  தோற்றியமை சிறப்பாகும். இவ்வாண்டு மே மாதம் 09 ஆம் நாள் நடைபெற இருந்த இப் பொதுத்தேர்வானது கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் காரணமாகப் பிற்போடப்பட்டு இன்று நடைபெற்றது. கொரோனா பேரிடருக்கு மத்தியிலும் தம் தாய்மொழியைக்கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய குழந்தைகளை வாழ்த்துவதுடன், அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் பெற்றோரைப் போற்றுகிறோம். சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை இருபத்தைந்தாவது ஆண்டை நிறைவுசெய்து, இவ்வாண்டு வெள்ளிவிழாவினைக் கொண்டாடுவதனால், தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் வெள்ளிவிழா நினைவுப்பரிசும் வழங்கப்பெற்றது. 

நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி இத்தேர்வினைச் சிறப்பாக நடாத்துவதற்காகத் தமிழ்க் கல்விச்சேவையின் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், தமிழ் இளையோர் ஆகியோர் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் தமிழ்க்கல்விச்சேவை நன்றி தெரிவிக்கிறது.
No comments