திலீபனின் நினைவு நாளில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவில் புதிய அலுவலகம் திறப்பு


தியாக தீபம் திலீபன் அவர்கள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நாளான 15.09.2020 செவ்வாய்க்கிழமை 15.00 மணிக்கு செந்தனிப் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் புதிய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

புதிய அலுவலகத்தினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.ரஞ்சன் அவர்கள் நாடாவெட்டித் திறந்த வைக்க மங்களவிளக்கினை பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த திவாகர் அவர்களும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம், பிரான்சு மனித உரிமைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.கிரபாகரன், பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் சார்பில் திரு.அகிலன், பிரான்சு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர் திருமதி யோகச்சந்திரன், பிரான்சு மூதாளர் அவையின் செயற்பாட்டாளர் திரு. கிருஸ்ணபிள்ளை ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து மாவீரர் திருஉருவப்படம் மற்றும் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் திருஉருவப் படம் முன்பாக ஈகைச்சுடரினை கடந்த 2000 இல் ஆனையிறவு இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த கப்டன் துரியோதனன் அவர்களின் சகோதரர் அவர்களும் கடந்த 2001 இல் திருகோணமலைக் கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில் வீரமரணமடைந்த 2ஆம் லெப்.ஆதவனின் சகோதரர் அவர்களும் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து வருகைதந்திருந்த அனைவரும் அணிவகுத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

அனைவரும் கோவிட் 19 சட்டதிட்டங்களுக்கு அமைவாக முகக்கவசம் அணிந்து கைகளுக்கு மருந்து தடவிக் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்ந்து பால் காய்ச்சப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட பிரமுகர்கள் பலரும் உரைநிகழ்த்தியிருந்தார்கள்.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திரு.மேத்தா, நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம், இளையோர் அமைப்பின் உறுப்பினர் செல்வன் திவாகர், பிரான்சு மனித உரிமைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. கிரபாகரன், பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை உறுப்பினர் திரு.யோகச்சந்திரன், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. சத்தியதாசன் ஆகியோர் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

நிறைவாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் அனைவருக்கும் நன்றிதெரிவித்ததுடன் உத்வேகத்துடன் பயணிப்போம் என இந்த நாளில் உறுதி எடுத்துக்கொண்டு பல விடயங்களையும் பகிர்ந்துகொண்டார்.

நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.


No comments