கஜேந்திரகுமார்:அனுமதி மறுக்கப்பட்ட உரை

 


தியாகதீபம் திலீபன் அவர்களை நினைவுவதனை அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனையும் சுட்டிக்காட்டி குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் உரையாற்றுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் நேற்றய தினம் பாராளுமன்ற சபாநாயகரின் அனுமதிக்காக அவரது அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

பாராளுமன்ற நிலையியல் கட்டளைச்சட்டம் 27 (2) ,ன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் கட்சித்தலைவர்கள் உரையாற்ற முடியும். ஆந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர அனுமதி மறுத்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் உணர்வுகளை புண்படுத்தும் செயலும் உரிமைகளை முற்றாக மீறும் செயலும் என்ற அடிப்படையில் குறித்த மேற்படி நிலையியல் கட்டளையின் பிரகாரம் உரையாற்றுவதற்கு முன் அனுமதி கோரி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் சமர்ப்பித்திருந்த கோரிக்கையை நீதி மன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விடயம் என்று கூறி உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தியாகி திலீபன் தொடர்பாக உரையாற்றுவதற்காக சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை முழுவிபரம் வருமாறு.

//செப்ரெம்பர் 26ம் திகதி தியாக தீபம் திலீபன் என அழைக்கப்படும் திரு. இராசையா பார்த்திபன் அவர்களது 33வது ஆண்டு நினைவேந்தல் தினமாகும்.

அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அரசியற் பொறுப்பாளராக இருந்தவர்.  இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கையளித்து நிராயுதபாணிகளாக இருந்தசமயம் அவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினார்.  இந்திய அரசாங்கம் தனது நல்லெண்ண முயற்சிகளை உபயோகித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுத்து தமிழ்மக்கள் எதிர்நோக்கம் அன்றாடப்பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுக்கவேண்டுமென  ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் சாகும்வரையிலான உண்ணாநிலைப்  போராட்டத்தை மேற்கொண்டார். 

செப்ரெம்பர் 15ம் திகதி ஆரம்பித்த அவரது உண்ணாநிலைப் போராட்டம் 26ம் திகதி அவரது வீரச்சாவுடன் நிறைவுக்கு வந்தது.  அவரது போராட்டமானது அமைதி வழியிலான அதியுச்சமான  தியாகமாக உலகத் தமிழர்களால் போற்றப்படுகிறது. 

கடந்த 32 வருடங்களாக இலங்கையில் வாழும் தமிழர்களும் அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து வருகிறார்கள். போர் நடைபெற்றுவந்த காலத்திலும், 2015ம் ஆண்டுக்குப்பின்னரும் , இந்நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. சிறிலங்காப் படையினர் அவ்வப்போது இந்நிகழ்வினைக் குழப்புவதற்கு எத்தனித்தபோதிலும், மக்கள் தாமாக முன்வந்து இந்நிகழ்வினை முன்னெடுத்து வருகிறார்கள். இருப்பினும் முன்னர் நீதிமன்றம் மூலமாக தடையுத்தரவினைப் பெறும் முயற்சியில் காவற்துறையினர் ஈடுபட்டதில்லை.

ஆனால் இம்முறை நீதிமன்ற தடையுத்தரவை பெறுமாறு தமக்கு அரசாங்கத்தின் அதி உயர்பீடத்திலிருந்தே  உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக,  இத்தடையுத்தரவை என்னிடம் கையளிப்பதற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸ் அதியட்சகர் குறிப்பிட்டிருந்தார்

.  

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலின் இறுதி நாள் செப்டம்பர் 26 ம் திகதி வருகின்றது. இந்த இறுதி நேரத்திலாவது, அடிப்படை மனிதவுரிமைகளின் அடிப்படையில் நினைவு கூருவதற்கான தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை  வழங்குமாறு கோருவதற்கு இவ்விடயத்தை நான்  நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.

தியாகதீபம் திலீபன் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்தவர் என்ற வகையில் அவரை நினைவுகொள்ளும் நிகழ்வு நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எனக்கூறி இத்தடையுத்தரவு நியாயப்படுத்தப்படுகிறது. 

நினைவுகூரும் நிகழ்வுகள்  சமாதானத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுமே தவிர ஒருபோதும் சமாதானத்துக்கு குந்தகமாக அமையப்போவதில்லை என்பதனை சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

1994ம் ஆண்டு சன்னா பீரிசுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில் நீதியரசர் அமரசிங்க மேற்காட்டிய அவதானத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

“வரையறைகளுக்கு உட்படாத கருத்துப் பரிமாற்றம், அவை எந்த அடிப்படைகளுக்கு முரணாகவோ, குழப்பம் விளைவிக்கக்கூடியதாவோ அல்லது மக்களில் ஒருசாராருக்கு உடன்பாடில்லாதாக இருந்தாலும், உண்மை வெளிக்கொணரப்படுமாயின் அவை அனுமதிக்கப்பட வேண்டும்.  பேச்சுரிமை என்பது பொதுவில் ஏற்றுக்கொளள்ளப்பட்ட கருத்துகளை தெரிவிப்பது என மட்டுப்படுத்த முடியாது.”

இவ்விடயத்தில் இலங்கையின் மனிதவுரிமை ஆணைக்குழு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு 2017ம் ஆண்டு ஜுன் 7ம் திகதி எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“30வருட போருக்குப்பின்னர் தற்போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் வகையில் இலங்கை செயற்பட்டுவருகிறது.  இம்முயற்சியில் இழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனைத்துச் சமூகங்களுக்கும் இடமளிக்கவேண்டும். ஆதலால் நினைவுகூருவது நல்லிணக்க முயற்சிகளில் முக்கிய பங்களிப்பினை வகிக்கின்றது.  இலங்கையில் போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூருவதற்காக நாங்கள் பல நினைவுச்சின்னங்களை அமைத்துள்ளோம். அதுபோன்று தமது குடும்ப உறுப்பினர்களையும், அவர்களது அன்புக்குரியவர்களயும் நினைவுகூருவதற்கு நினைவுச்சின்னங்களை அமைப்பதற்கு எல்லாச் சமூகங்களுக்கும் உரிமையுள்ளது. இறந்தவர் விடுதலைப்புலிகள் இயக்த்தைச் சேர்ந்தவர் எனக்காரணங்காட்டி  அவரை நினைவுகூர்வதற்கு அவரது குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்க முடியாது. அவர்களது அரசியல்நிலைப்பாடு எதுவாயிருப்பினும் இறந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அவர்களது குடும்பத்தினருக்கு உரிமையுள்ளது. ஆணைக்குழுவின் பார்வையில், தங்களது உறவுகளை நினைவுகூர அனுமதிப்பதன் மூலம் இலங்கைத்தீவின் மக்களாக தமது உரிமையை நிலைநாட்டமுடிகிறது உணர்வினை அவர்களுக்கு வழங்கும் எனக் கருதுகிறது. இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சியில் இது ஒரு பகுதியாக அமைகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தை மறுப்பது இனங்களுக்கிடையிலான பிளவினை மேலும் அதிகரிக்கவும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்புவதாகவுமே அமையும்.”

கடந்தகாலத்தில் இவ்விடயம் தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு உள்ளாக்கியிருந்தனர். 1971ம் ஆண்டு நடைபெற்ற ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியை நினைவுகூரும்விதமாக “ஏப்பிரல் வீரர்கள்’ எனவும், 1989ம் நடைபெற்ற ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியை நினைவுகூரும்விதமாக ‘நொவெம்பர் வீரர்கள்” எனவும் அவர்களது தலைவர் ரோகண விஜேவீரவினதும் மற்றைய சகாக்களினதும் இறப்பை நினைவுகூருகிறார்கள்.

எல்லாவற்றிற்கும்மேலாக உண்மை, நீதி மற்றும் மீளநடவாமையை உறுப்படுத்துதல் போன்ற விடயங்களிற்கான ஐ.நா. சபையின் சிறப்பு ஆணையாளர் அவரது A/HRC/45/45  என இலக்கமிடப்பட்ட அறிக்கையில் நிலைமாறுகால நீதியை அடையும் முயற்சியில், நினைவுகொள்வது என்பது ஐந்தாவது தூணாக அமைகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளதாவது:

“பாரிய மனதவுரிமை மீறல்களுக்கு உள்ளான, பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுத்த சமூகங்கள் நினைவுகொள்வதற்கான உரிமை என்பது சர்வதேச மனிவுரிமைச் சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை பொருணமிய விடங்களைக் காட்டியோ அரசியல் மற்று நடைமுறைகளைக்காட்டியோ, அல்லது நிலைமாறு கால நீதிவிடயத்தில் இதர செயன்முறைகளைக்காட்டியோ சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் விலக்கிவிட முடியாது.”

அவ்வறிக்கையில் 100வது பந்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்து. “நினைவுகொள்வதனை தவிர்த்துவிட்டு, உண்மை, நீதியை கண்டறிதல், இழப்பீடு வழங்குதல் போன்றவற்றை முழுமைப்படுத்த முடியாது. மீளநடவாமையையும் உறுதிப்படுத்த முடியாது.”

110வது பந்தியில், “போருக்குப் பின்னரான காலத்தில், நினைவுகூருதலினால் ஏற்படும் பயன் தங்களது வன்முறை நிறைந்து கடந்தகாலத்தினை உணரந்துகொள்வதற்கு மற்றவர்கள் மீது பழிவாங்கும் உணர்வினைத் தவிர்ப்பதாகவும், முன்னைய பிளவுகளை சரிசெயவ்வதற்கும் உதவும்.

தமிழ் மக்களின் நினைவேந்தல்கள் காலாகாலமாக அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஏனைய மக்களின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் கூட மதிப்புகொடுத்து அவற்றிற்கு  எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்காமலும் நடாத்தப்படுகின்றவை . 

 சிங்கள தேசத்தின் 80 %மான ஆதரவைப்பெற்று அவர்களின் பெரும் செல்வாக்குடன் வந்திருக்கின்ற இந்த ஒரு அரசாங்கம்,  தமிழ்

மக்களின் உரிமைகள் என வரும்போது எதற்காக  ஒரு பாதுகாப்பின்மையை பயத்தை உணர்ந்து  இந்த நினைவேந்தல்களை தடைசெய்கிறது என்பதை புரிந்துகொள்ளமுடியவில்லை.

இந்த வகையில் இன்னும் மீதம் இருக்கும் மூன்று நாட்களாவது  தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை  செய்வதற்கு அனுமதிக்க  சிறிலங்கா காவல்துறைக்கு பணிக்குமாறு  ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்ளுமாறு இந்த அவையில் இருக்கும் பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன்


No comments