மிகுந்த இழுபறியின்பின், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு!


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாலும், கொரோனா வைரஸ் தொற்று காலத்தைக் கருத்தில் கொண்டும் 90 நாட்கள் சிறை விடுப்பு வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணையிலிருந்து வந்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது பேரறிவாளனின் சிறை விடுப்பு மனுவை நிராகரித்து விட்டதாகத் தமிழக அரசும், சிறைத் துறையும் தெரிவித்தன.

மேலும் பேரறிவாளன் உடல்நிலை முழுமையாகப் புழல் மருத்துவமனையிலேயே தினசரி கவனிக்கப் படுவதாகவும், அவரது உடல் நிலையில் எந்த வித குறைபாடும் இல்லை என்றும் அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சிறையில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளும் முழுமையாகப் பின்பற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதோடு ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும் சிறையில் இருக்கும் வரை சிறை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இந்த வைரஸ் தொற்று காலத்தில் சிறையில் இருப்பதே பாதுகாப்பானது என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பேரறிவாளனுக்குக் கடந்த முறை வழங்கப்பட்ட பரோல் ஜனவரி மாதம் தான் முடிந்ததால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் மீண்டும் சிறை விடுப்பு கேட்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அற்புதம்மாள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பேரறிவாளனின் தாய் தந்தை இருவரும் வயதானவர்கள் என்பதால் அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக வாதிட்டார். 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரைத்த நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சர்வதேச தொடர்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமையைக் காரணம் காட்டி பரிந்துரையின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றும் 7 பேரை விடுதலை செய்யப் பரிந்துரைத்த அரசு, சிறை விடுப்பு வழங்க மறுப்புத் தெரிவிக்கிறது. விடுதலை செய்ய முடிவெடுத்ததும், தற்போது பரோலுக்கு மறுப்புத் தெரிவிப்பதும் ஒரே தலைமையிலான அரசுதான் என்றும் அவர் வாதிட்டார்.

அப்போது, சிறை விடுப்பு விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரத்தில் முடிவெடுக்கச் சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அமைச்சரவை மாறியிருந்தாலும், விடுதலை தொடர்பாக முடிவெடுத்த அரசுகள் ஒன்றுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

இவ்வழக்கில் இன்று , பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்கி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவு கிடைத்த ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுத்து 30 நாட்கள் சிறை விடுப்பு வழங்க வேண்டும் என்றும் பேரறிவாளன் விடுப்பில் இருக்கும் காலங்களில் சிறைத்துறை விதிக்கும் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

No comments