தமிழ்த் தேசிய அணிகள் தோல்வியில் வெற்றி! வெற்றியில் தோல்வி! பனங்காட்டான்

மாற்று அணியை அல்லது மாற்றுத் தலைமையை விரும்பிய மக்கள் தங்கள் மௌன மொழியின் வாயிலாக தமிழர் தாயகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த மாற்றத்தின் நாடாளுமன்ற அரசியல் வகிபாகம் பெறுமதியானதும் பொறுப்பானதுமாகும். பொங்கலுக்கு வெடி கொழுத்தலாம் புத்தாண்டுக்கு கொடி ஏற்றலாம் தீபாவளிக்கு ஆடு வெட்டலாம் என்றவாறான நம்பிக்கைப் பிரகடனங்களை நிறுத்த மக்கள் ஏற்படுத்தியுள்ள புதிய மாற்றம் வழிவகுக்குமென நம்புவோமாக.

வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள் குடும்பமாகவும் கூட்டமாகவும் வெளியேவந்து பல தரப்பினரையும் சந்திக்கும் ஒரு நாள் தேர்தல் நாளாகும். தங்கள் தலைவிதியைத் தீர்மானிப்பதற்காகவே இவர்கள் இவ்வாறு வெளிவருவர். 

முன்னர் ஒருதடவை குறிப்பிட்டதுபோல இந்நாளே இவர்கள் நீதிபதிகளாகும் நாள். இவர்களின் ஒற்றைப் புள்ளடியே தங்களைத் தலைவர்களாக எண்ணும் அரசியல்வாதிகளின் தலையெழுத்தாக மாறும். 

அவ்வாறான ஒரு வரலாற்று நாளாக இந்த மாதம் ஐந்தாம் திகதி அமைந்தது. கடந்த மார்ச் மாதம் இரண்டாம் திகதி கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் திகதி இரண்டு தடவை பின்போடப்பட்டு, பின்னர் ஒருவாறு ஐந்தாம் திகதி நிகழ்ந்தேறிவிட்டது. 

இலங்கைச் சரித்திரத்தில் வன்முறைகளற்ற தேர்தலாக இது இடம்பெற்றதென்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் திருப்தியும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். (கொரோனா தொற்றுக்கு ஒரு நன்றி கூற வேண்டும்).

ஆனால், பல தலைகளின் மகிழ்ச்சியை இத்தேர்தல் முடிவு தலைகீழாக மாற்றிவிட்டது. இருந்த இடம் தெரியாமல் சிலர் காணாமல் போய்விட்டனர். சிலருக்கு நெற்றியில் நாமம் போட்டு தலையைத் துண்டால் மூடி வீட்டுக்கு வெளியே அனுப்பியுள்ளனர் ஒருநாள் நீதிபதிகளான வாக்காளப் பெருமக்கள். 

இலங்கையை இரண்டாகப் பிரித்து இத்தேர்தலைப் பார்க்க வேண்டிய நிலையை இன்றைய அரசியல் ஏற்படுத்தியுள்ளது. இதனை எழுதும்போது விருப்பு வாக்கு முடிவுகள் முழுமையாக வெளிவரவில்லையென ஆரம்பத்திலேயே இங்கு குறிப்பிட வேண்டும். 

ஒன்பது மாகாணங்களில் ஏழினை மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன சுவீகரித்துக் கொண்டது. ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட பிளவே மகிந்த அணியின் மகோன்னத வெற்றிக்கு வழிவகுத்தது. 

இதனை எழுதுகையில் மகிந்த அணி பெற்ற வாக்குகள் அறுபத்தெட்டு லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்த சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி இருபது லட்சம் வாக்குகளுக்கும் அப்பால் சென்றுள்னது. ஜே.வி.பி. நான்கு லட்சத்துக்கும் மேலாகப் பெற்றுள்ளது. ஆனால், ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியைக் காணவில்லை. 

ரணிலே படுதோல்வியென செய்திகள் வந்துள்ளன. இவரது தோழர்களான ரவி கருணநாயக்க, நவீன் திசநாயக்க, அகிலராஜ் காரியவாசம் ஆகியோரும் மண்கவ்வியுள்ளனர். முதன்முதலாக கொழும்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவும் அவரது அணியினரும் கொழும்பைத் தங்கள் கோட்டையாக்கியுள்ளனர். 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து பொதுஜன பெரமுனவை உருவாக்கிய ராஜபக்ச சகோதரர்கள், ஜனாதிபதித் தேர்தலில் கோதபாயவை வெற்றி பெறச்செய்தனர். இப்போது மகிந்தவை பிரதமராக்க வெற்றி பெற்றுள்ளனர். 

அறுதிப் பெரும்பான்மை (113) கிடைத்தாலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை (151) பெறுவதற்கு என்ன செய்யலாமென்பது ராஜபக்சக்களுக்கு கைவந்த கலை. மகிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ச இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில், தேர்தலின் பின்னர் தங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்குமென்றார். 

தேர்தலன்று வாக்களித்த பின்னர் ஊடகவியலாளர்களுடன் உரையாற்றுகையில் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றம் இருபதாம் திகதி கூடும்போது தங்களின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை நிரூபிக்கப்படுமென்று கூறினார். 

இதன் அர்த்தம் என்ன? மூன்றிலிரண்டுக்குத் தேவையான எண்ணிக்கையை மாற்றுக் கட்சிகளிடமிருந்து தங்களால் கொள்வனவு செய்ய முடியுமென்ற நம்பிக்கை இவர்களுக்குண்டு. 

கோடிக்கணக்கான பணம், அமைச்சர் - அரை அமைச்சர் - கட்டிட அமைச்சர் பதவிகளுக்கான குதிரைப் பேரம் இப்போதே ஆரம்பமாகி இருந்தாலும் ஆச்சரியப்பட நேராது. இதற்கு வசதியாகவே புதிய நாடாளுமன்ற அமர்வுக்கு இருபதாம் திகதிவரையான இரண்டு வார இடைவெளியை வழங்கிய கோதபாய, அதற்கான வர்த்தமானியை தேர்தலுக்கு முன்னரே வெளியிட்டது நன்கு தெரிகிறது. 

ரணிலிடமிருந்து தம்மிடம் பாய்ந்து வந்தவர்களை மகிந்தவிடம் பாய்ந்த செல்லாது பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சஜித்துக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. 

இவ்விடத்தில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒன்றுண்டு. 1946ல் உருவான முதலாவது சிங்களக் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும், 1952ல் உருவான இரண்டாவது சிங்களக் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இத்தேர்தலில் துடைத்தழிக்கப்பட்டு விட்டன. இக்கட்சிகளிலிருந்து பிரிந்து புதுக்கட்சிகளை உருவாக்கிய மகிந்தவும் சஜித்துமே தங்கள் தங்கள் தாய்க்கட்சிகளுக்கு இறுதிக்கிரியை செய்துள்ளனர். 

தமிழர் தாயக நிலைவரத்தை இனிப்பார்க்கலாம். 

கடந்த 2015ம் ஆண்டுத் தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் பதினான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று இரணடு தேசியப் பட்டியல் ஆசனங்களை தம்வசமாக்கி பதினாறு இடங்களைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை ஒன்பது ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழு இடங்களில் ஐந்தைக் கடந்த முறை பெற்ற இவர்கள் இம்முறை இரண்டைக் கோட்டை விட்டனர். 

2015ம் ஆண்டுத் தேர்தலில் 72,158 வாக்குகள் பெற்று முதலிடத்தில் வந்த சிவஞானம் சிறிதரன் இம்முறை 31,156 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எப்போதும் மூன்று ஆசனங்களைத் தக்க வைத்துக் கொண்ட கூட்டமைப்பு இம்முறை தங்களின் ஒரு இடத்தை பிள்ளையான் கைப்பற்ற வைத்துள்ளது. 

அம்பாறையில் தொடர்ந்து பெற்று வந்த ஒரு ஆசனத்தையும் கூட்டமைப்பு இம்முறை பறிகொடுத்துவிட்டது. கடந்த தேர்தலில் ரெலோ சார்பில் போட்டியிட்டு இங்கு வெற்றி பெற்ற கோடீஸ்வரனை சில மாதங்களுக்கு முன்னர் தங்கள் கட்சிக்கு இழுத்தெடுத்த தமிழரசு தங்கள் கட்சி சார்பில் இவரை அங்கு போட்டியில் நிறுத்தியது. பங்காளிக் கட்சிக்கு துரோகம் செய்த குற்றச்சாட்டை சுமத்திய ரெலோ இவருக்கு ஆதரவாக பரப்புரை செய்யவில்லை. 

மொத்தத்தில் கூட்டமைப்பு இத்தேர்தலில் தோல்வியடைந்ததற்கு எதிரணிகள் காரணமென்பதைவிட, உள்வீட்டு மோதல்களே அடிப்படையாகும். ஒவ்வொரு வேட்பாளரும் தமது வெற்றியில் கவனம் செலுத்துவதைவிட தங்கள் கூட்டுக்குள் போட்டியிடும் மற்றவருக்கு குழி பறிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். 

சுமந்திரனும் சிறிதரனும் இணையர்களாக களம் இறங்கினர். விருப்பு வாக்குகளை இருவரும் சமமாகப் பெறும் நோக்குடன் தங்கள் பரப்புரையைக் கூட்டாக மேற்கொண்டனர். சிறிதரன் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற போதிலும், சுமந்திரனால் அதனைப் பெறமுடியாது போய்விட்டது. சிறிதரன் சுமந்திரனை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. 

தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவினதும் உதயன் பத்திரிகை முதலாளி சரவணபவனினதும் தோல்வி ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டிருந்தது. இதற்கும் சுமந்திரனின் சூட்சுமமான திட்டமிடலே காரணமாக அமைந்தது. புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அங்குமிங்கும் முட்டுப்படாமல் தன்னை ஒருவாறு காப்பாற்றி வெற்றி பெற்றுள்ளார். 

யாழ். மாவட்ட கூட்டமைப்பின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சிறிதரன், சித்தார்த்தன், சசிகலா ரவிராஜ் வெற்றி பெற்றதாக முதலில் செய்திகள் வெளியானது. பின்னர், சசிகலா தோற்றுவிட்டதாகவும் சுமந்திரன் வென்றதாகவும் செய்திகள் வந்தன. 

2015ம் ஆண்டுத் தேர்தலில் அருந்தவபாலன் என்னும் ஆசிரியர் விருப்பு வாக்கு எண்ணிக்கையின்போது தோற்கடிக்கப்பட்டது போன்ற செயற்பாடே சுமந்திரனை வெல்லச் செய்ததாக இவரது ஆதரவு கூட்டாளிகளே கூறுகின்றனர். 2015ம் ஆண்டுத் தேர்தலில் ஐம்பத்தினாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற சுமந்திரன், இந்தத் தேர்தலில் தாம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறப்போவதாக சிங்கள தொலைக்காட்சிச் செவ்வியொன்றில் சொன்னதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால், இவருக்கு முப்பதாயிரத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைத்தது என்றால் இதனை அவமான வெற்றியாகவே கருத இடமுண்டு. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமாரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நீதியரசர் விக்னேஸ்வரனும் வெற்றி பெற்றது ஆரோக்கியமாக வரவேற்கப்பட்டுள்ளது. 

கஜேந்திரகுமாரின் நாடாளுமன்ற அரசியல் வகிபாகத்தை அவரது சமரசத்துக்கு இடமற்ற விட்டுக்கொடாத கொள்கை வழியாக மக்கள் பார்க்கிறார்கள். தமிழ் தேசிய அரசியல் அபிலாசை, சிங்கள தேசிய அரசியல் நீரோட்டம் மற்றும் ராஜரீகத் தொடர்புகள் வழியான நகர்வுகளுக்கு இவரின் வெற்றி கதவு திறந்திருப்பதாக பலரும் கருதுகின்றனர். 

கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் இணைந்து செயற்பட்டால், இணக்க அரசியலைச் செய்து இளிச்ச வாயர்களான கூட்டமைப்பினரை வழிக்குக் கொண்டு வரலாமென சிலர் எதிர்பார்ப்பது சாத்தியமாகுமா?

கூட்டமைப்பினரும் புதிதாக வெற்றி பெற்றுள்ள மாற்றுத் தரப்பினரும் இனநலன்சார் விடயங்களில் சேர்ந்து இயங்குவது காலம் இடும் கட்டாயமாகக் காணப்படுகிறது. அவ்வாறு இயங்கினால், தீபாவளிக்கு வெடி கொழுத்தலாம் - புத்தாண்டுக்கு கொடி ஏற்றலாம் - தீபாவளிக்கு ஆடு வெட்டலாம் என்றவாறான நம்பிக்கைப் பிரகடனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

தமிழர் தாயகத்தைப் பொறுத்தளவில் கூட்டமைப்பினர் குறைந்த ஆசனங்களைப் பெற்றபோதிலும் தோல்வியில் வெற்றி கண்டுள்ளனர். மாற்றுத் தரப்புகளில் வெற்றி பெற்றவர்கள் நாடாளுமன்றப் புகுமுகத்தால் தங்கள் அணிகளைப் பொறுத்தளவில் வெற்றியில் தோல்வி கண்டுள்ளனர். 

கடந்த வாரம் இப்பத்தியின் இறுதியில் குறிப்பிட்டதுபோல, இந்த மூன்று தரப்பினரும் பச்சை மண்ணும் சுட்ட மண்ணுமாக இயங்கப் போகிறார்களா அல்லது இனம்சார் நன்மை கருதி இணைந்து இயங்கப் போகிறார்களா என்ற கேள்வியே இப்போது மேலெழுந்து நிற்கிறது. 


No comments