19 மற்றும் 18 குப்பை தொட்டியினுள்?

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் அரசமைப்பின் 19ஆவது  மற்றும் 18ஆவது திருத்தங்களை நீக்க தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

19ஆவது திருத்தமானது நல்லாட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் 19ஆவது திருத்தத்துக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில்,  அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

19ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியல் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையில் தேவையற்ற முரண்பாடுகள் இதனால் ஏற்படுவதாகவும் கடந்த காலங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன.

இதேவேளை, 18ஆவது திருத்தமானது அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவியில் நீடிக்க முடியும் என்ற பிரிவு குறித்த திருத்தத்தில் நீக்கப்பட்டது. அத்துடன், பொலிஸ் மற்றும் ஆணைக்குழுக்கள் தொடர்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 

இதனையடுத்து, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான வரையறை நீக்கப்பட்டமை தொடர்பில் அப்போது பல கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த இரண்டு திருத்தங்களையும் நீக்கிய பின்னர் புதிய அரசமைப்பொன்று உருவாக்கப்படும் வரை 17ஆவது திருத்தமே நடைமுறையில் இருக்கும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments