காணாமல் ஆக்கபட்டோரிலும் அரசியல்: கஜேந்திரன் அணி?


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது கவனயீரப்பு போராட்டத்தை இரண்டுபடுத்திய செல்வராசா கஜேந்திரன் அணியின் நடவடிக்கை அனைத்து மட்டங்களிலும் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இன்று யாழ்.நகரின் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட செயலகம் வரையென திட்டமிட்டு பேரணிக்கான அறிவிப்பை வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஈபிடிபி பின்னணி ஆதரவாளர் என அடையாளப்படுத்தப்பட்ட பெண்மணியொருவர் முத்திரைசந்தியிலிருந்து அதே நேரம் மற்றொரு பேரணிக்கு ஒரிரு நாட்களிற்கு முன்னதாக அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனாலும் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினது போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முதல் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி,பொ.ஜங்கரநேசன் என பலரும் திரண்டு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வழமை போல கஜேந்திரனின் தகிடு தத்த வேலையில் முத்திரை சந்தியிலிருந்து இன்னொரு பேரணி அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விடயத்தை பெரிதாக்காமல் வடகிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் அனைத்து மாவட்டங்களிலுமிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க பிரதிநிதிகளை வாகன மூலம் ஏற்றி வந்திருந்தனர்.


அத்துடன் தமது பிரதான போராட்டத்தை முன்னிலைப்படுத்தி ஆதரவும் கோரியுமிருந்தனர்.

அதிலும் புகுந்து விளையாடிய கஜேந்திரன் அணி முல்லைதீவிலிருந்து வருகை தந்த வாகனத்துடன் ஆட்களை  முத்திரை சந்தைக்கு கொண்டு சென்றுவிட பரிதாபகரமாக கைவிடப்பட்டனர் ஏற்பாட்டாளர்கள்.

அழைத்து வரப்பட்ட வயோதிப தாய்மாரிற்கோ எது முத்திரை சந்தை எது மத்திய பேருந்து நிலையமென தெரியாது திண்டாடினர்.

ஒருவாறாக நூறு பேர் வரையில் திரட்டி ஊர்வலத்தை கஜேந்திரன்  நடத்தி முடிக்க இடையிலேயே புரிந்து கொண்ட பலரும் தப்பித்து பிரதான பேரணியில் இணைந்து கொண்டனர்.

அதிலும் பரிதாபம் முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தியும் முத்திரை சந்தை சென்று தப்பித்து பின்னராக பிரதான பேரணிக்கு வந்துள்ளார்.

இதேவேளை வலிகாமத்திலிருந்து அழைத்து வரப்பட்டு முத்திரை சந்தைக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்ட 50 வரையிலான பெண்கள் பிரதான பேரணிக்கு வருகை தர வாகன ஏற்பாடு செய்துதருமாறு தன்னிடம் கோரியதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இறுதியில் ஆயிரக்கணக்கான மக்களது பங்கெடுப்புடன் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட செயலகம் வரை பிரதான பேரணி சென்றடைந்திருந்தது.

முத்திரை சந்தை பேரணியோ ஆதரவாளர்கள் ஊர்வலமாக நூறுக்கும் குறைவானவர்களுடன் கலைந்து சென்றுள்ளது.

இதனிடையே தீடிரென தமது கட்சி ஆதரவாளர்களை முன்னிறுத்தி மக்களை குழப்ப மாவட்டங்கள் தோறும் முன்னணியின் கஜேந்திரன் அணியால் திடீர் பேரணி  நடத்தப்பட்டதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க பிரதிநிதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். ஆதரவாளர்களிற்கு நிவாரணம், பணமென சலுகைகள் வீசப்பட்டதாக அவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுமிருந்தது.

இதனிடையே பிரதான பேரணியில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் அனைத்து கட்சி பிரமுகர்களும் பங்கெடுத்திருந்தனர்.


முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனும் பிரதான பேரணியில் தனது ஆதரவாளர்கள் சகிதம் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments