சுமந்திரன் ஓய்வு பெறுவது நல்லது?



அண்மைய தேர்தல் முடிவு அடுத்த தந்தை செல்வா ஆக முயற்சித்தவருக்கு யாழ் மக்கள் கொடுத்த மரண அடியென கருத்து வெளியிட்டுள்ளார் வலை பதியுனர் ஒருவர்.


மேலும் அவர் விபரிக்கையில் கடந்த 8ஆவது நாடாளுமன்றதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 பிரதிநிதிகள் இருந்தாலும் அவர்களில் ஆங்கில மற்றும் சிங்கள புலமையாளர்களாக அல்லது மும்மொழியிலும் சரளமாக பணியாற்றக்கூடியவர்களாக இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே இருந்தனர்.

இவர்கள் இருவரும் நாடாளுமன்றத்தில் தமிழர்கள் சார்பில் ஆங்கிலத்தில் மற்றும் சிங்களத்தில் நிகழ்த்திய உரைகள் கூர்ந்து அவதானிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரைகள். கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக வேறு அவர் இருந்தமையின் காரணமாக ஊடகங்களிலும் அவருடைய பெயர் தாறுமாறாக அடிபட்டது. இதன் காரணமாக எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களின் தவிர்க்கமுடியாத அரசியல்வாதியென்று ஒரு போலியான மாயை உருவாகியது. இதனால் பொதுவெளியில் உள்ள சிலர், சுயாதீன ஊடகவியலாளர்கள், ரணில் மற்றும் மகிந்த ஆகியோரின தமிழ் விசுவாசிகள் எல்லோருமே, கூட்டமைப்பின் அடுத்த தலைவர் ஆகுவதற்குரிய அனைத்துத் தகுதிகளும் சுமந்திரனுக்கே இருப்பதாகவும் அவர் தமிழ் மக்களின் தவிர்க்க முடியாத தலைவர் எனவும் கதைக்கவும் எழுதவும் தொடங்கினர்.


'குறிப்பிட்ட' திருச்சபையின் பேராயர் ஒரு படி மேலேபோய் அடுத்த தந்தை செல்வா சுமந்திரன் தான் என்பது போன்ற ஒரு மாயையை தனது திருச்சபை சூழலில் மட்டுமன்றி தமிழ் மக்களிடையேயும் தோற்றுவிக்க முயன்றார்.


இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் கூட்டமைப்புக்குள்ளும் தமிழரசு கட்சிக்குள்ளும் யார் பேச்சையும் கேட்காது சர்வதிகாரத் தன்மையோடு நடந்து கொண்டார். கூட்டமைப்பின் தலைவர் கடிவாளம் போடாமல் கண்டும் காணாமல் இருந்தமை சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்று. அதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாக பார்க்கக்கூடியதாக இருந்தது.


தமிழ் மக்களும் இந்த மாயைகளை உண்மையென நம்பத் தொடங்கிய நேரம்தான் சிங்கள ஊடகவியலாளர் சமுத்தித சமரவிக்கிரம சுமந்திரனுடன்; நடத்திய நேர்காணல் வெளிவந்து சுமந்திரனின் விடுதலைப் போராட்டம், தேசியத் தலைவர் தொடர்பான அவருடைய உண்மை நிலைப்பாடுகளை தமிழ் மக்கள் தெளிவாக அறிவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் ஏக அரசியல் பிரதிநிதித்துவத்தை ரணில் விக்கிரமசிங்கவின் நலன்களை காப்பாற்றுவதற்கு அடகு வைப்பதில் .சுமந்திரன் முன்னின்றாரென தமிழ் மக்களிடையே விசனமொன்றும் காணப்பட்டிருந்தது.


சுதாகரித்த யாழ் தமிழ் மக்கள், 116 ஆயிரம் வாக்குகளை பெறுவேனென இறுமாப்புடன் இருந்த சுமந்திரனுக்கு தெளிவான செய்தியை கபாலத்தில் ஆணி அடித்தாற்போல் 2020 ஆகஸ்ட் ஐந்து இடம்பெற்ற தேர்தலில் கூறிச் சென்றுள்ளனர். இம்முறை சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகளில் சுமார் 15 - 18 ஆயிரம் அளவிலான வாக்குகள் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் திருச்சபை சார்ந்த வாக்குகள் என்பது கணிப்பு.


9ஆவது நாடாளுமன்றத்தில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 10 பேர் இருந்தாலும் அவர்களில் சுமந்திரனைத் தவிர மும்மொழி ஆற்றலில் மட்டக்களப்பு மாவட்ட பா.உ சாணக்கியனை குறிப்பிட்டு சொல்லலாம். அதனாலேயே.சாணக்கியன் கூட்டமைப்பின் புதிய ஊடக பேச்சாளர் பதவிக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கருதுகிறேன்.


ஆங்கில மற்றும் சிங்கள மொழிப் புலமையுள்ள சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் த.தே.கூட்டமைப்புக்கு அப்பால் யாழ் மக்களால் வாக்களித்து தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.


ஆகவே இம்முறை சுமந்திரனுடைய பேச்சைவிட இவர்களுடைய பேச்சுக்கள் தென்னிலங்கையில் கூர்ந்து கவனிக்கப்படும் என்பதைவிட ஏற்கனவே கவனிக்கப்படத் தொடங்கிவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது. ஆகவே சுமந்திரன் அடுத்த ஐந்து வருடங்கள் பத்திலொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு மக்கள் நிராகரிப்பதற்கு முன்னரே அரசியலில் இருந்து ஒதுங்குவதே சிறப்பாக இருக்கும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.


No comments