சண்டித்தனத்தில் தவிசாளர்?


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள சேவைச் சந்தியில் உள்ள 38 மரக்கறி கடைகளுக்கு நேற்று (24) இரவோடு இரவாக கரைச்சிப் பிரதேச சபையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் ஒப்பத்துடன் 38 வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும் கடைகள் பூட்டப்பட்டுள்ளன என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சந்தையில் உள்ள மரக்கறி  வியாபாரிகள் 48 பேருக்கு, கூட்டம் ஒன்று நேற்று (24) பிற்பகல் மூன்று  மணிக்கு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு வாய்மொழி மூலம் சந்தை காப்பாளர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், திடீரென  அறிவிக்கப்பட்டதால் குறித்த கூட்டத்துக்கு 38 வியாபாரிகள் செல்லவில்லை. அதனால் கோபமடைந்த தவிசாளர் சேவை சந்தையின் வர்த்தக சங்கத்தின் தலைவர் முன்னிலையில் சபையின் செயலாளருக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக 38 வியாபார நிலையங்களுக்கு முன்பாகவும், சந்தை பூட்டப்பட்ட பின்னர் நேற்றிரவு 8  மணியளவில் தங்களது வியாபார நிலையங்கள் 25-08-2020  முதல் மூடப்படுகிறது என்ற அறிவித்தல் ஓட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை சந்தைக்குச் சென்ற வியாபாரிகளுக்க இது அதிர்ச்சியாக இருந்துள்ளது.

இதையடுத்து சந்தை வளாகத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,


“நேற்று திருமணம் மற்றும் புதுவீடு குடிபுகுதல் போன்ற நிகழ்வுகள் இருந்தமையால் நாம் வியாபார நிலையங்களில் உதவியாளர்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டோம். அத்துடன், பல வியாபாரிகளுக்கு தகவல் சென்றடையவில்லை. மேலும் சாதாரண ஒரு கூட்டத்துக்கு ஏழு நாட்களுக்கு முன் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். ஆனால் இதில் எந்த நடைமுறையும் பின்பற்றாது அன்று காலை 11 மணிக்கு வாய் மொழி மூலம் பிற்பகல் 3 மணி கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு கூட்டத்துக்கு சமூகமளிக்காதவர்களின் வியாபார நிலையங்களைபூட்டுவது என்பது அநியாயமான செயல்.

கோரோனா தாக்கத்துக்குப் பின்னர் தற்போது நாம் வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் கரைச்சி பிரதேச சபைத் தவிசாளரின் இந்த நடவடிக்கை எம்மை மேலும் பாதித்துள்ளது. அத்துடன், தூரத்திலிருந்து மரக்கறிக்களைக் கொண்டு வந்த விவசாயிகளும் பெரிதும் பாதிப்படைந்து செய்வதறியாது நிற்கின்றனர்.

எவ்வித சட்ட விதிமுறைகளுக்கும் உட்பட்டு எழுத்து மூல அறிவித்த வழங்காத கூட்டத்துக்கு சமூகமளிக்காத வியாபாரிகளின் கடைகளை இரவு எட்டு மணிக்கு – அலுவலக நேரம் தவிர்ந்த காலத்தில் கடைகள் மூடப்படுகிறது என எழுத்து மூலம்  அவசர அவசரமாக ஒட்டியதன் நோக்கம் என்னவென்று எமக்குத் தெரியவில்லை.” என்றனர்.

இதன் போது அங்கு சமூகமளித்த கரைச்சி பிரதேச சபையின் செயலாளர், வியாபார நிலையங்களை பூட்டும் தீர்மானத்தைத் தவிசாளரின் பணிப்புக்கமைய வர்த்தக சங்கத்தின் தலைவரின் முன்னிலையில் மேற்ள்ளப்பட்டது எனவும் அதனடிப்படையில் நேற்றிரவு அறிவித்தல் ஒட்டப்பட்டது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இது தமது தவறான நடவடிக்கை என்றும் வியாபாரிகள் மீண்டும் தங்களின்  வியாபார நிலையத்தை திறந்து நடவடிக்கைளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் சந்தைக்கு சென்ற கிளிநொச்சி  உள்ளுராட்சி உதவி ஆணையாளர்  ச.பிரபாகரன் வியாபாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன்  வியாபார நிலையங்களைத் திறந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், குறித்த விடயம் தொடர்நது ஆராய்ந்து பதிலளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments