30ம் திகதி திரளும் மக்கள்?

எதிர்வரும் 30ம் திகதி வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களது போராட்டத்தில் தமிழ் அரசியல் தரப்புக்கள் அணிதிரளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது ஆதரவை வெளியிட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் இணைந்து கொண்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் 4 வருடங்களை எட்டுகின்றது. இதுவரையிலும் தமது பிள்ளைகளை தேடியபடி போராடி வந்த 72 க்கும் மேற்பட்ட தாய் தந்தையர் நீதியே இன்றி இறந்து போயுள்ளார்கள் . தொடர்ந்தும் கேட்பார் யாரும் இன்றி இவர்களின் போராட்டம் தொடர்கிறது .

எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் தினத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாகவும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தடியிலும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களாக தொடர்ந்தும் வலிகளோடு போராடி வரும் தாய்மாருக்கு வலு சேர்க்க இந்த போராட்டங்களில் இன ,மத ,அரசியல் பேதங்கள் கடந்து அனைவரும் பங்கெடுப்போம்.

காணாமல் ஆக்கபடுதலுக்கு காரணமானவர்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அரியணை ஏறியுள்ள நிலையில் அவர்களை நோக்கி கேள்வி கேட்டு போராடுபவர்களுக்கு பலம் சேர்ப்போம் . சர்வதேசத்தை நோக்கி நீதி கேட்க்கும் தாய்மாருக்கு பலம் சேர்ப்போம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


No comments