கோத்தா ஒரு சாந்தமான புத்தர்! இராணுவத்தினர் குடும்பம் மாதிரி - கே.பி

கோத்தபாய சாந்தமான புத்தர். தனது பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் குடும்பம் மாதிரி. லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவைக் கட்டீயெழுப்பியது போலவும், அவர் புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவார். பல நாடுகளில் பல பிரபலமான தலைவர்கள் அவ்வப்போது பொற்காலங்களைப் படைத்திருக்கின்றனர். ஜனாதிபதி ராஜபக்ச, இலங்கையை ஒரு சிங்கப்பூர் மாதிரி மாற்றுவார் எனவே நான் நம்புகிறேன்.

மீது உறுதியான நம்பிக்கையை வைத்திருக்கிறேன். மக்களது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அவர் செய்து முடிப்பார். நான் அவரை அவ்வப்போ சந்தித்திருக்கிறேன். எங்கள் தாய் நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி அவர் அடிக்கடி பேசுவார். இந் நாட்டுக்குச் சரியான தலைவர் அவர் தான்.

சரியான பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட சரியான தலைவர் அவர். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போன்றோரின் செயற்பாடுகளால் மக்களிடையே பிரபலமாகி வந்துகொண்டிருந்தது. அந்த நிர்வாகம் மிகவும் சுயநம்பிக்கையுடன் செயற்பட்டது. ஏனைய அரசுகளைப் போலல்லாமல், இந்த அரசு, விடுதலைப் புலிகளின் வழங்கல் பாதைகளை உடைத்தது. அதுவே விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் ஆரம்பம் என கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லி எவ்.ரி என்ற ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் அங்கமே இந்த நேர்காணல் எனக் கூறப்படுகிறது. அவர் வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் இங்கே:-


கேள்வி: இயல்பு வாழ்வைப் பாதிக்கும் பல சிறிதளவிலான முயற்சிகள், விடுதலைப் புலி ஆதரவாளர்கள் எனப்படும் சிலரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகச் செய்திகள் வந்தன. புலம் பெயர்ந்த தமிழர்கள் சிலர் இவற்றுக்குப் பின்னால் இருக்கலாமென நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: வட, கிழக்கிலுள்ள, இளைஞர்கள், பெரும்பான்மையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இப்படியான முயற்சிகளில் இறங்குவதை விரும்புவதில்லை. தமது வாழ்நாள் முழுவதும் , முற்றிலும் பலனற்ற ஒரு விடயத்துக்காக அவர்கள் போராடி நொந்துபோயிருக்கிறார்கள். அவர்களில் சிலர் வேலையின்மை காரணமாகவும், வறுமை காரணமாகவும், புலம்பெயர்ந்த தமிழர்களின் பொறிக்குள் வீழ்ந்து இப்படியான முயற்சிகளில் இறங்கியிருக்கலாம். இப்படியான சம்பவங்கள் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரின் சட்டபூர்வ இருப்புக்கு உதவி செய்யலாம். வடக்கில் இன்னும் வன்முறை நிகழ்கிறது என்பதை காட்டி, இலங்கைக்குத் திரும்புவது ஆபத்தானது என அவர்கள் தமது அரசாங்கங்களுக்குக் காட்டவேண்டும்.

ஆனால் இந்த முயற்சிகள் பயனற்றவை. ஏணெனில், அதற்கான ஆதரவோ அல்லது போதுமான சக்தியோ மக்களிடம் இல்லை. இப்படியான முயற்சிகளில் இறங்காமலிருப்பதற்கு இங்குள்ள இளைஞர்களுக்கும், இதர மக்களுக்கும் போதுமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். அரசாங்கம் உடனடியாகக் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்களில் இதுவுமொன்று.

இன்னொரு வகையில், ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சியில், விடுதலைப் புலிகள் மீளுருவாவதற்கான வெளி இல்லை. ஏனெனில் அவர் மிகவும் திறமையோடு கட்டமைத்திருக்கும் பாதுகாப்பு அமைப்பு எதிர்கால ஆபத்துக்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும்.

கேள்வி: விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை உயிருடன் வைத்திருப்பதே புலம் பெயர்ந்த தமிழர்களின் நோக்கமாக இருப்பின், அவர்களுக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி என்னவாகவிருக்கும்?

பதில்: அவர்களது முயற்சிகள் வெற்றிபெறப் போவதில்லை. அவர்கள் வாழும் நாடுகளில் அவர்களின் சுய இருப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் இவை. இது அவர்களுக்கு ஒரு வியாபாரம். விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்பவர்கள் வெளிநாடுகளில் ஆடம்பர வாழ்க்கைகளை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒன்றும் ரகசியமல்ல.

இலங்கையில் குழப்பங்களை விளைவிக்காமல் அவர்களால் ஐரோப்பாவில் தொடர்ந்தும் வாழ்வதற்குச் சந்தர்ப்பங்களில்லை. வடக்கு கிழக்கு மக்களின் பரிதாப நிலையை விற்பதனால் தான் அவர்களால் அங்கு சீவிக்க முடிகிறது. அங்கு வாழும் மக்களுக்கு வடக்கு கிழக்கின் கள நிலவரம் தெரியாது. அதனால் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுத் தாம் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இவர்களுக்குத் தானம் செய்கிறார்கள்.

எனவே அவர்களுக்கு நான் தரும் செய்தி, அவர்கள் உண்மையிலேயே வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்ற விரும்பினால், நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை உரிய வழிகளில் தானம் செய்யுங்கள். போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் அவர்களது தானங்களைச் செய்யலாம்.

பிரபாகரன், பொட்டு அம்மான் தலைமை தாங்கிய காலங்கள் முடிந்து விட்டன. இந்த நாட்டில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை இனி ஆரம்பிக்க முடியாது. அப்படியானதொரு சித்தாந்தத்தை நோக்கிப் போவது நேரத்தை விரயம் செய்யும் செயல் என தனிப்பட்ட முறையில், நான் பலருக்கு விளங்கப்படுத்தியுள்ளேன்.

போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கோ அல்லது இளையவர்களுக்கோ நல்ல கல்வியைக் கொடுத்தலும், வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்தலும், வடக்கு கிழக்கு மக்களுக்கு சமூக நல, வாழ்வாதாரத் திட்டங்களை உருவாக்கி அம் மக்கள் தங்கள் கால்களில் நிற்க வழிசெய்தலுமே புலம் பெயர்ந்த தமிழர்கள் இப்போதைக்குச் செய்ய வேண்டியது என்பதையும் அவர்களுக்குச் சொல்லியுள்ளேன். மக்கள் ஆதரவளிக்காதபோது இன்னுமொரு ஆயுதப்போராடம் பற்றிச் சிந்திப்பது பலனற்றது.

கேள்வி: சென்ற வருடம் இந் நாடு தீவிரவாதத்தின் மிரட்டலை ஒரு தடவை சந்தித்தது. மிகவும் சிரமப்பட்டு இந்நாடு பெற்றுக்கொண்ட சமாதானத்தை அது சீரழித்ததை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: நாங்கள் அது பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் மட்டும், இந் நாட்டின் பாதுகாப்பை அவர் உறுதிப்படுத்துவார். அப்படியான படுகொலைகள் இனிமேல் நடாதவாறு அவர் பார்த்துக்கொள்வார். அது தீவிரவாதமோ அல்லது பயங்கரவாதமோ இலங்கை என்ற இந்தத் தாய்நாட்டில் ஒருவருக்கும் தீங்கு இழைக்கப்படமாட்டாது. அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.

கேள்வி: நீங்கள் ஏன் அவர் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? அவர் உங்கள் உயிரைக் காப்பாற்றியவர் என்ற வகையிலா?

பதில்: ஆம். நான் அவர் மீது உறுதியான நம்பிக்கையை வைத்திருக்கிறேன். மக்களது நம்பிக்கைக்கு ஏற்றவாறு அவர் செய்து முடிப்பார். நான் அவரை அவ்வப்போ சந்தித்திருக்கிறேன். எங்கள் தாய் நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றி அவர் அடிக்கடி பேசுவார். இந் நாட்டுக்குச் சரியான தலைவர் அவர் தான்.

சரியான பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட சரியான தலைவர் அவர். ஜனாதிபதி ராஜபக்ச எங்கள் தாய்நாட்டுக்குக் கிடைத்த பரிசு. இதர அரசியல் தலைவர்களுடன் ஒப்பிடும்போது இவர் ஒருவரால்தான் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். இந்த நாட்டுக்காகவும், எமது இளைய சந்ததியினருக்காகவும் அவர் நீண்டகாலப் பார்வையுடன் செயற்படுகிறார்.

அவருக்குப் பயப்படும் அரசியல்வாதிகளால் அவரைப் பற்றிய பொய்யான விடயங்கள் பரப்பப்படுகின்றன. இருப்பினும், அக் கதைகளினால் ஏமாற வேண்டாம், அவர் எல்லா சமூகங்களுக்கும் தலைவர் என நான் எனது மக்களுக்குக் கூறி வைத்துள்ளேன். அவர் இந் நாட்டை மிகவும் ஆழமாக நேசிக்கிறார். புதிய வழிகளில் இந்நாட்டை அபிவிருத்தி செய்து இந்நாட்டு மக்களின் வாழ்வை முன்னேற்ற நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

கேள்வி: வடக்குக்கு புதிய அரசியல் தலைமை தேவை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிகம் இளையவர்கள் அரசியலில் பங்குபெறவேண்டுமெந்பதில் நீங்கள் உடன்படுகிறீர்களா?

பதில்: பல வித்தியாசமான தலைவர்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தென்னிலங்கை மக்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்கள். அதே போன்ற மாற்றங்களை நாம் வடக்கிலும் எதிர்பார்க்கிறோம். பல தசாப்தங்களாக, வடக்கில், தமிழ் மக்கள் ஒரே அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.

வடக்கு கிழக்கில் புதிய அரசியல் தலைமைக்காக பாரிய வெற்றிடமொன்று இருப்பதாக நான் நம்புகிறேன். இப் பிரதேசங்களில் இப்போது மக்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அரசியல் விளையாட்டுக்களை மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். இதுவரை செய்துவரும் தமிழ்நாட்டு அரசியல் இனிமேலும் இலங்கையில் எடுபடாது என்பதைத் தமிழ் அரசியல்வாதிகள் அறிந்துவைத்திருக்க வேண்டும்.

கேள்வி: கடந்த தசாப்தத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் பற்றி விசாரணைகள் செய்யப்படவேண்டுமென ஐ.நா. தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகிறது. இப்படியான குற்றச்சாட்டுகளி விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்று அவசியமென்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: பூகோள அரசியல் தளங்கள் மாற்றமடையும்போது இப்படியான் குற்றங்களை அவர்கள் வித்தியாசமான வடிவங்களில் கொண்டு வருகின்றார்கள். போர்க் குற்றங்கள் இலங்கைக்கு எதிரானவை மட்டுமல்ல. உலகப் போர்களில் ஈடுபட்ட நாடுகளுக்கு எதிராகவும் அவை கொண்டுவரப்பட்டன. எனவே, போர் என்று ஒன்று முடிவுற்றதும் இப்படியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல.

எந்தவிதமான விடயமாகவிருந்தாலும் இலங்கை தனது பிரச்சினைகளைத் தானே தீர்த்துக்கொள்ளும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். தவறான புரிதலும், நம்பிக்கையீனமும் எங்கள் சிறுபான்மையித்தவரின் மத்தியில்தான், சர்வதேசங்களிடையே அல்ல. ஒரு உள்நாட்டுப் பிரச்சினையி வெளியார் தலையீடு அவசியமற்றதும், காரணமற்றதும் எனவே நான் கூறுவேன்.

கேள்வி: வட மாகாணத்திலுள்ள இராணுவத்தைக் குறைக்கும்படி வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்தும் கேட்டு வருகிறார்கள். உங்கள் கருத்து என்ன?

பதில்: வடக்கில் இராணுவ – பொதுமக்கள் உறவு மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது. இராணுவம் சமூகத்தின் ஒரு பங்காக மாறியிருக்கிறது. அரசியல்வாதிகள், தமது அரசியல் இலாபங்களுக்காக வடக்கில் இருந்து இராணுவத்தைக் குறைக்கும்படி கேட்கிறார்கள். ஆனால் சாதாரண மக்கள் தமது பாதுகாப்புக்காக இராணுவம் தேவை என்ற நிலையில் இருக்கிறார்கள்.

மக்கள் அதிகம் வேலை வாய்ப்புகளைப் பெறும் வரை, புதிய அரசியல் தலைமை உருவாக்கப்படும்வரை, அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்வரை, இராணுவம் அங்கு இன்னும் சில வருடங்கள் இருக்கவேண்டுமென்பதையே நானும் விரும்புகிறேன்.

கேள்வி: நீங்கள் உங்கள் முற்காலத்தை மீள்நோக்கிப் பார்ப்பின், 1970 இளையோர் எழுச்சியில் உங்கள் இடம் என்னவாக இருந்திருக்கும்?

பதில்: வட கிழக்கு மாகாணங்களில் 1970 களில் எழுந்த மாணவர் எழுச்சியில் பங்கெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. எங்கள் அரசியல் தலைவர்கள் இளையோரை நகர்த்தி அதன் மூலம் எழுந்த குழப்பத்தைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்தினார்கள்.

வேலுப்பிள்ளை பிரபாகரன், தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து வடக்கில் வன்முறையை ஆரம்பித்தார்கள். இளையோர் இவர்களைத் தலைவர்களாகவும் பார்த்தார்கள். நான் அவரைச் (பிரபாகரனை) சந்தித்தபோது, பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். அவர் தான் தங்கத்துரையையும் குட்டிமணியையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நான் அவர்களை ஆதரிக்க ஆரம்பித்தேன்.

கேள்வி: நீங்கள் முன்னர் வழங்கிய பேட்டியொன்றின்போது, “நாட்டிற்குச் சேவை செய்ய ஒரு பொலிஸ் அதிகாரியாக வர விரும்பியிருந்தேன்” எனக் கூறியிருந்தீர்கள்?

பதில்: ஆம், நான் எனது க.பொ.த. உயர்தரக் கல்வி கற்றுக்கொண்டிருந்தபோது, நான் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தபடியால், ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டராக வர விரும்பியிருந்ததுண்டு. அதற்கான விணப்பத்தையும் நான் அனுப்பியிருந்தேன். திடீரென்று நான் மனதி மாற்றி அரச் நிர்வாகத் துறையில் சேர விரும்பினேன். பின்னர் இந்தியாவுக்கு ஓடவேண்டி வந்துவிட்டது.

கேள்வி: ஏன் பொலிஸ் சேவையில் சேர விரும்பினீர்கள்?

பதில்: எனது நோக்கம் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டுமென்பது. பொலிஸ் சேவை, இராணுவ சேவையைப் போன்றது. அப்போது எனது சகோதரர்கள் சிலர் இராணுவத்தில் கடமை புரிந்தார்கள். அவர்களது சீருடைகளினால் கவரப்பட்ட நானும் ஒருநாள் சீருடை தரிக்கும் ஒரு வேலையில் சேர வேண்டுமென விரும்பினேன்.

கேள்வி: ஏன் உங்கள் நிலைப்பாட்டை மாற்றினீர்கள்?

பதில்: அக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கில் அரசியல் நிலைமை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததும், இளையவர்களிடையே அமைதியின்மை இருந்ததுமே காரணம்.

கேள்வி: உணர்ச்சிகரமான நிலைமை என்று எதைக் குறிப்பிட்டீர்கள்?

பதில்: தமிழ் அரசியல்வாதிகள் இளையவர்களை ஊக்கப்படுத்தியமையால் இளையவர்கள் அவர்களை நம்பத் தலைப்பட்டார்கள். நாங்கள் அவர்களுடைய கூட்டங்களில் கலந்துகொண்டோம். அவர்கள் உணர்ச்சி எழும் வகையிலான விடயங்களைப் பேசினார்கள். தமிழ் ஈழத்தைப் பற்றி அவர்கள் விளக்கமாகப் பேசினார்கள். இதனால் அவர்களால் வட மாகாண இளையவர்களின் மனங்களையும், இதயங்களையும் தொட முடிந்தது. இறுதியில் இதுவே ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தது.

இதே காலப்பகுதியில் தான் ஜே.வி.பி. தலைவர் றோஹன விஜேவீர தனது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இளையோராக இருந்தபோது, அரசியல்வாதிகளின் போதனைகளைக் கேள்விக்குள்ளாக்கும் மனநிலையில் நாம் இருக்கவில்லை. நாங்கள் குருட்டுத் தனமாக அவர்களை நம்பிப் பிந்தொடர்ந்தோம்.

கேள்வி: நாட்டிற்குச் சேவை செய்யவேண்டுமென்று விரும்பிய நீங்கள் ஏன் நாட்டை விட்டு சென்றீர்கள்?

பதில்: நான் பொன்னம்மானுடனும் வேறு இரு நண்பர்களுடனும் மதுரைக்கு (இந்தியா) போனேன். இந்தியாவில் பொருட்கள் வாங்கும் பொறுப்பைப் பார்க்கும்படி பிரபாகரன் என்னிடம் கேட்டிருந்தார்.

நாங்கள் ஒரு வீடில் தங்கி, சிறிதளவில், பொருட்கள் வாங்கும் விடயங்களைக் கவனித்து வந்தோம். பின்னர் சென்னையில் நிரந்தரமாக இருக்கவேண்டி வந்துவிட்டது. பின்னர் இலங்கையில் சில சம்பவங்கள் நடைபெற்றதன் காரணமாக, சிங்கப்பூரில் சில தொலைத் தொடர்பு சாதனங்களை வாங்கிவருமாறு பிரபாகரன் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூரில் பணி புரியும் சில புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்திக்கும்படி அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். அவர் கேட்ட படியே அச் சாதனத்தை நான் வாங்கி அனுப்பினேன்.

படிப்படியாக, ஐரோப்பாவிலுள்ள தனது தொடர்புகளை எல்லாம் எனக்கு அறிமுகம் செய்து விடுதலைப் புலிகளின் வலையமைப்பை விஸ்தரிக்க உதவி செய்தார். 25 வருடங்களாக நான் விடுதலைப் புலிகளின் கொள்வனவு வேலைகளைச் செய்துவந்தேன். 2003 இற்குப் பிறகு அரசியல் தீர்வொன்றை நோக்கி செல்லுமாறு நான் பிரபாகரனைக் கேட்டேன். 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் பாரிய மாற்றங்களைக் கண்டுவந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களாக நாம் செய்துவந்த கொள்வனவு போலத் தொடர்ந்தும் என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது.

9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்களும், உறுப்பினர்களும் கணிசமான தடைகளையும் சிக்கல்களையும் எதிர்கொண்டதால் அவர்களும் விரக்தி நிலையை அடைந்திருந்தார்கள்.

அதே வேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச போன்றோரின் செயற்பாடுகளால் மக்களிடையே பிரபலமாகி வந்துகொண்டிருந்தது. அந்த நிர்வாகம் மிகவும் சுயநம்பிக்கையுடன் செயற்பட்டது. ஏனைய அரசுகளைப் போலல்லாமல், இந்த அரசு, விடுதலைப் புலிகளின் வழங்கல் பாதைகளை உடைத்தது. அதுவே விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் ஆரம்பம்.

கேள்வி: விடுதலைப் புலிகள் போரில் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்தீர்களா?

பதில்: ஆம். விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதில் அர்த்தமில்லை என நான் உணர்ந்தேன். அவர்கள் தமது திட்டத்தை மாற்ற வேண்டிய தேவை வந்திருந்தது, ஆனால் அவர்கள் மாறவில்லை.

கேள்வி: போராட்டத்தை நிறுத்துவது உங்கள் திட்டமானால், அதற்கடுத்தான உங்கள் திட்டம் என்ன?

பதில்: நாங்கள் ஒரு அரசியல் தீர்வை நோக்கிச் செந்றிருக்க வேண்டும். மறைந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் நான் நல்ல உறவைப் பேணி வந்தேன். அதனால் அவரிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்து அவரது சம்மதத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் விடுதலைப் புலிகளின் சித்தாந்தத்திலிருந்து நான் விலகிச் செல்கிறேன் என அவர்கள் நினைத்தார்கள். பிரபாகரனைச் சூழவிருந்தவர்கள் அவரைப் பிழையான வழிகளில் நடத்திக்கொண்டார்கள். புதிய உலகப் போக்கை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

கேள்வி: விடுதலைப் புலிகள் இளம் சிறுவர்களைப் போராட்டத்தில் இணைத்துக்கொள்வது பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா அது பற்றி நீங்கள் பிரபாகரனிடம் கூறியது என்ன?

பதில்: 2003 இலிருந்து 2008 வரை பிரபாகரனுடனான எனது தொடர்பு மிகவும் அந்நியமானது. நான் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவில் இருக்கவில்லை ஆனால், குழந்தைகளை போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என நான் அவருக்குக் கூறியிருக்கிறேன்.

கேள்வி: போர் முடிந்து 11 வருடங்கள் ஆகிவிட்டன. வடக்கின் நிலைமை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: போர் முடிந்து 5 வருடங்களில் எனக்கு நல்ல திருப்தி. வடக்கில் பல துரித அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்றன.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவும் 12,500 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களில் 5,000 பேருக்கு வேலை வாய்ப்புகளையும் இதர வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

ஆனால் அந்த முன்னேற்றம் ஆட்சி மாற்றத்துடன் சடுதியாக நிறுத்தப்பட்டு வடக்கு மாகாணத்தவர் கடுமையான சூழலில் கைவிடப்பட்டனர். அங்கு அபிவிருத்தி எதுவும் நடைபெறவில்லை. பலர் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

கேள்வி: நீங்கள் இலங்கையில் வந்திறங்கியபோது சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவையும், தற்போதுள்ள ஜனாதிபதி ராஜபக்சவையையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: நான் மலேசியாவிலிருந்தபோது அவரை ஒரு கடுமையான இராணுவ அதிகாரியாகவே பார்த்தேன். அவர் என்னைத் தூக்கிலிடுவார் என்றே  எதிர்பார்த்தேன். விமான நிலையத்தில் இறங்கியபோது எனது வாழ்வின் கடைசி நிமிடங்களை நான் அனுபவிக்கிறேன் எனவே நான் எண்ணினேன்.

அவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றபோது, அவரின் பின்னால் ஒரு சாந்தமான புத்தர் சிலை இருப்பதைக் கண்டேன். அது எனக்கு ஒருவிதமான அமைதியைத் தந்தது. பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச என்னை வரவேற்று கைகளைக் குலுக்கினார். ஒரு மணித்தியாலம் பேசிய பின்னர், அவர் என்னை வரவேற்ற முறையிலிருந்து நான் பாதுகாப்பான கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன் என உணர்ந்தேன்.

இலங்கையின் ஜனாதிபதியாக, அவர் நாட்டிற்குப் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவார். உதாரணமாக, லீ குவான் யூ சிங்கப்பூரைக் கட்டியெழுப்பியது போலவும், நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவைக் கட்டீயெழுப்பியது போலவும், அவர் புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவார். பல நாடுகளில் பல பிரபலமான தலைவர்கள் அவ்வப்போது பொற்காலங்களைப் படைத்திருக்கின்றனர். ஜனாதிபதி ராஜபக்ச, இலங்கையை ஒரு சிங்கப்பூர் மாதிரி மாற்றுவார் எனவே நான் நம்புகிறேன்.

கேள்வி: உங்களைப் பாதுகாக்கவென நியமிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளைப் பற்றிய உங்களது ஆரம்ப அபிப்பிராயங்களென்ன?

பதில்: என்னிடம் பயம் குடிகொண்டிருந்த படியால், நான் அவர்களைச் சந்தேகத்துடனேயே பார்த்தேன். ஆனால் படிப்படியாக அவர்கள் என்னுடன் நல்ல உறவை அபிவிருத்தி செய்ததுடன், என்னை மிகவும் கண்ணியத்துடன் நடத்தினர். இந்த இளம் இரானுவ அதிகாரிகள் விடுமுறைக்குப் போய் வரும்போது, அவர்கள் வீட்டில் செய்யப்பட்ட இனிப்புப் பண்டங்களைக் கொண்டுவந்து தருவார்கள். நாங்கள் பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக்கொண்டுள்ளோம். இப்போது நாங்கள் ஒரு குடும்பம் மாதிரி.

கேள்வி: வடக்கில் தற்போதுள்ள அரசியல் நிலமை எப்படி இருக்கிறது?

பதில்: எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் தமது சொந்த நலன்களையும் இருப்பையும் பார்த்துக்கொள்கிறார்கள். தங்கள் நலனுக்காக அவர்கள் பொது மக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகிறார்கள். கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அந்த அரசியல்வாதிகள் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உதாசீன்ம் செய்துவிட்டனர். அவர்களது இரட்டை வேடம் கலைந்துகொண்டு போவதால் அவர்களால் தொடர்ந்தும் மக்களை ஏமாற்ற முடியாது.

கேள்வி: மூன்று தசாப்தங்களாக நீங்கள் ஆயுதப் போராட்டத்தில் உங்களை இணைத்துக்கொண்டிருந்தீர்கள். தமிழரது குறைகள் என்னவென்று கருதுகிறீர்கள்?

பதில்: இனப்பாகுபாடுகளுக்கு அப்பால், வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் சிறந்த பொருளாதார, கல்வி அபிவிருத்தியையும், வேலை வாய்ப்புக்களயுமே எதிர்பார்க்கிறார்கள். வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கும் அதே வேளை, வறுமை ஒழிப்பு அத்தியாவசியமானது. புதிய அரசியல் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி ராஜபக்ச மீது அவர்கள் அளப்பரிய நம்பிக்கையை வைத்துள்ளார்கள். வடக்கிலும், கிழக்கிலும் பல படித்த அரசியல்வாதிகள் வருகின்றபோது அங்கும் கல்வி, பொருளாதாரத் துறைகளில் எதிர்கால பிரகாசமானதாக மாறும்.

கேள்வி: திரும்பிப் பார்க்கில், நீங்கள் உங்கள் வாழ்க்கை பற்றிக் கவலைப் படுவீர்களா?

பதில்: ஆம். நான் கவலைப்படுகிறேன். எனக்கு இப்போது 64 வயது. எனது வயதின், ஏறத்தாள, 40 வருடங்களைப் பிரயோசனமற்ற பாதையில் தொலைத்து விட்டேன். ஜனாதிபதி ராஜபக்சவின் தயவில், இப்போதாவது நான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்கிறேன். நம்பிக்கையை இழந்த குழந்தைகளைப் பராமரிக்கும் உன்னதமான பாதையில் அவர் என்னைப் பயணிக்கச் செய்திருக்கிறார். நாங்கள் இளமையாக இருக்கும்போது எதையும் எங்களால் மாற்ற முடியும் என நாம் நம்புகிறோம். அதனால் தான் இளம் பராயத்தில் நாங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தோம். அப்போது எங்கள் பாதை வெற்றிபெறக்கூடிய ஒன்று என நம்பினோம். ஆனால் நான் ஏற்கெனவே சொன்னது போல, 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் போராட்டத்தை விட்டு ஒரு அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமெனவே நான் விரும்பினேன். நடந்ததையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகிறேன். நாங்கள் எங்கள பாதையை மாற்றிக்கொள்ளாமையால் எல்லோரும் வருந்துகிறார்கள்.

கேள்வி: சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் செஞ்சோலை அனாதைகள் இல்லத்தைக் கிளிநொச்சியில் ஆரம்பித்தீர்கள். இப் பெண்கள் இல்லத்தின் முன்னேற்றம் எந்தளவில் இருக்கிறது?

பதில்: பத்து வருடங்களுக்கு முன்னர் நான் கைது செய்யப்பட்டபோது நான் எதிர்காலத்தில் என்ன செய்யப் போவதாக உத்தேசித்துள்ளேன் என பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச கேட்டார். 2009 இல் போர் முடிவிற்கு வந்த பிறகு, வன்னியிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்தவித பாதுகாப்பும், எதிர்காலத்துக்கான எந்தவித திட்டங்களும் இல்லாது இருந்தனர். நான் அவர்களுக்கு உதவப் போகிறேன் என அனது திட்டத்தைக் கூறி அதற்கான ஆதரவையும் அவரிடம் கேட்டேன். அவரின் உதவியினால் கிளிநொச்சியில் இந்த ஆதரவற்றவர்கள் இல்லத்தைத் தொடங்கி நடத்தி வருகிறேன்.

கடந்த 8 வருடங்களாக நான் கிளிநொச்சியில் இருந்துகொண்டே இக் குழந்தைகளைப் பராமரித்து வருகிறேன். வறுமையான குடும்பங்களிலிருந்து வந்த, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நாம் பராமரித்து வருகிறோம். பெரும்பாலான குழந்தைகள் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்திருந்தே வருகிறார்கள். அவர்களது பாதுகாப்பை உத்தரவாதப் படுத்துவது முதலாவது கடமை. போரின்போது தந்தையையோ அல்லது தாயையோ இழந்த பிள்ளைகளே அநேகமாக இங்கு உள்ளார்கள். தந்தையை இழந்த குடும்பங்களில் இருந்து, தாயாரின் வறுமை காரணமாகப் பிள்ளைகளை இங்கே கொண்டுவந்து விடுகிறார்கள். வீடுகளில் இப் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை. தாய்மார் சில வேளைகளில் கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள். தற்போது நாங்கள் நான்கு சிறுவர் இல்லங்களைப் பராமரித்து வருகிறோம். கிளீநொச்சியிலுள்ள செஞ்சோலை அனாதைகள் இல்லம், முல்லைத் தீவிலுள்ள பாரதி சிறுவர் இல்லம், முல்லைத்தீவிலுள்ள அண்ட்றூ சிறுவர் இல்லம், கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை ஆண்கள் இல்லம் ஆகியவற்றை நாங்கள் பராமரித்து வருகிறோம். இந்த நான்கு இல்லங்களிலும் 300 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் உள்ளார்கள். பாடலைக் கல்வியோடு, பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட கற்கைகளையும் நாம் வழங்குகிறோம். சிலர், கராத்தே, குத்துச் சண்டை, உதைபந்தாட்டம் போன்ற தேசிய அளவிலான போட்டிகளில் எமது மாணவர் வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் முயற்சியால் கடந்த 6 வருடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிகவும் நம்பிக்கையுடன், சமூகத்தை எதிர்கொள்ளும் வாழ்வுத் தகமைகளுடன் சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் உயர் கல்வியை நோக்கிப் பயணிக்கிறார்கள். சிலர் கிளிநொச்சிக்கு வெளியே வேலை வாய்ப்புகளைப் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள். சிலர் சுய தொழில்களை மேற்கொண்டு சிறப்பாக வாழ்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. உயர் கல்வியை முடித்தவர்கள் சரியான தொழில்களைப் பெறுமட்டும் நாம் அவர்களுக்கான ஆதரவை வழங்குகிறோம்.

உயர் கல்வியை முடித்துக்கொண்ட பின்னர் எங்கள் திட்டங்களில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கு நாம் சந்தர்ப்பம் அளிக்கிறோம். செஞ்சோலை இல்லங்களில், குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் நாங்கள் வழங்கினாலும், அவர்களது கல்வி வளர்ச்சியே எங்கள் முக்கிய குறிக்கோள். சர்வதேச தரத்தில் ஒரு ஆங்கில மொழியிலான கல்விக்கூடமொன்றை ஆரம்பிக்கும் திட்டமொன்று என்னிடம் உள்ளது.

எதிர்காலத்தில் எங்களுக்கு அதிக நிதி தேவைப்படும். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள அக்கறையானவர்கள், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கும் பயனற்ற திட்டங்களில் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை விரயம் செய்யாது, இந்த உன்னதமான பணிக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்  என்றார்.

No comments