கல்வியாளர்களின் கல்விச்சுதந்திரத்துக்கு ஒரு சவால்!பல்கலைக்கழகம் என்பது தனியே கற்றல்-கற்பித்தல்-பட்டம் வழங்கல் செயற்பாடுகள் நடைபெறும் இடமன்று. அவற்றோடு அதற்கு மேலாக பரிசோதனைகள், ஆராய்ச்சிகள், கொள்கை உருவாக்கம், புதிய சித்தாந்த உருவாக்கம், புத்தாக்க சிந்தனைகளை வளர்த்தல், கண்டுபிடிப்புக்கள் என பல்வேறுபட்ட செயற்பாடுகளின் மூலம் சமுகத்திற்கும், தேசத்திற்கும், மனித குலத்திற்கும் ஏன் இந்த பிரபஞ்சத்திற்கும் நல்ல மனிதர்களை, நல்லவைகளை உருவாக்குதற்கும் அதற்கு அத்திவாரமிடுவதற்கும் களமமைக்கும் ஓர் இடமாகும் என யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.இன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்அந்தவகையில் இலங்கைப் பல்கலைக்கழகங்களும் அமைய வேண்டும் என்ற காரணங்களினால்தான் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு பல்கலைக்கழகங்களிற்கும் பல்கலைக்கழக பேரவை அமைக்கப்பட்டு அவை சுயாதீனமுடையவையாக பல்கலைக்கழக சட்டத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் பல சந்தர்ப்பங்களில் அது கேள்விக்குரியதாக-கேலிக்குரியதாகவே காணப்படுகின்றமை வரலாறு. இருந்தபோதிலும் சில முதுகெலும்புள்ள கல்விமான்களாலும் பெரிய மனிதர்களாலும் சில சந்தர்ப்பங்களில் சுயாதீனத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளமையும் மறுப்பதற்கில்லை.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவராகவிருந்த கலாநிதி கு. குருபரன் அவர்களை நீதிமன்றங்களில் முன்னிலையாவதை தடைசெய்யுமாறு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு, 2019 செப்டம்பர் 19ம் திகதியிடப்பட்ட  கடிதத்தின் மூலம் தகுதிவாய்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அவர்களுக்கு அறிவித்திருந்தது. அவர் அதனை யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் கவனத்திற்குச் சமர்ப்பித்திருந்ததின் அடிப்படையில் பேரவையானது கலாநிதி குருபரன் அவர்களின் பக்க நியாயங்கள் எதனையும் கேட்காது ஒருதலைப்பட்சமாக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவினை ஏற்றுக்கொண்டது. எனினும் உரிய நடைமுறைகளின் பிரகாரம் கலாநிதி குருபரன் அவர்கள் 2011ம் ஆண்டிலேயே நீதிமன்றங்களில் முன்னிலையாகுவதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவையின் அனுமதியினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மானியங்கள் ஆணைக்குழுவின் இவ்வறிவித்தல் கடிதமானது தனியே கலாநிதி குருபரனிற்கு மட்டுமானதாக அமைந்திருந்ததே ஒழிய ஒரு சுற்றிக்கையாக, பொதுவானதாக குறித்த திகதியில் அமைந்திருக்கவில்லை என்பதும் அத்திகதியின் பின்னரே சட்டத்துறை விரிவுரையாளர்களிற்கானதாக மட்டும், குறித்த தடையினை வலிதாக்கும் சுற்றறிக்கை மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல சிக்கல்கள் இருந்தபோதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் இந்தமுடிவானது பல்கலைக்கழக சுயாதிபத்தியத்தினை மானியங்கள் ஆணைக்குழுவிற்கு தாரைவார்த்துக் கொடுக்கும் ஒரு செயற்பாடாக அமைந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையானது தனதும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினதும் சுயாதிபத்தியத்தினை இதற்கு முன்னரும் விட்டுக்கொடுத்திருந்தமை வரலாறேயாகும்.

அத்துடன் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவும் குறித்த முடிவினை தானாக மேற்கொள்ளவில்லை என்பதுடன் கலாநிதி குருபரன் அவர்கள் முன்னிலையான வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான வழக்கு ஒன்றின் பின்னணியில் அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூண்டுதலாலேயே மேற்கொள்ளப்பட்டதும் வெளிப்படையானது. இராணுவம் குருபரன் என்ற ஒருவர் பல்கலைக்கழகத்தில் கடமையிலுள்ளரா? எனவும் அவர் நீதிமன்றங்களின் ஆஜராகி வழக்காடுகின்றரா? எனவும் தன்னிடம் கோரியுள்ளதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தையும் பக்கச்சார்பின்மையையும் கேள்விக்குள்ளாக்குவதுடன், கல்வியாளர்களின் கல்விச் சுதந்திரத்தில் (Academic Freedom) கை வைக்கும் ஒரு செயற்பாடும் ஆகும்.

மானிங்கள் ஆணைக்குழு கல்விசாரா பணியாளர்கள் தொடர்பில் ஏற்கனவே அதன் சுயாதீனத்தையும் பக்கச்சார்பின்மையையும் இழந்துவிட்டமை, கல்விசாரா பணியாளரில் ஒரு தொகுதியினரை பணிக்கமர்த்தும் செயற்பாட்டில் உயர்கல்வி அமைச்சர் ஆளும் அரசியல்வாதிகளின் பட்டியலை பயன்படுத்துவதும், அதன் மூலம் அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தினை உண்டுபண்ணுவதுனூடாகவும், பல்கலைக்கழகத்தின் உயர் அதிகார சபையான பேரவையின் வெளிவாரி உறுப்பினர் தெரிவிலும், உயர் நிர்வாகப் பதவியான துணைவேந்தர்கள் தெரிவிலும் ஆளும்தரப்பு அரசியல் வாதிகளின் சிபாரிசுக்கு முதலிடம் வழங்கப்படுவதற்கு பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழுவும் துணை நிற்கின்றமையூடாகவும் வெளிப்படையாகின்றது.

இங்கு பல்கலைக்கழக முறைமைக்குள் மருத்துவம், பொறியியல், கட்டிடக்கலை மற்றும் சட்டம் போன்ற பாடங்களை கற்பிக்கும் கல்வியாளர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு வெளியில் உள்ள நிறுவனங்களில் அவர்களின் துறை மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் மற்றும் அரச, சமூக நிறுவனங்கள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்கவும் இதுகாலவரையிலும் எவ்வித மட்டுப்பாடுகளும் இருந்ததில்லை என்பதும் இப்போதும் தனியே சட்டதுறை சார்ந்தோருக்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
கலாநிதி குருபரன் அவர்கள்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தனியே கற்றல்-கற்பித்தல்-பட்டம் வழங்கல் செயற்பாடுகளுடன் மட்டும் நின்றுவிடாது அதனையும் தாண்டி மாணவர்கள் நடைமுறை சூழலுக்கு ஏற்ப செயற்படவும், சிந்தனையாளர்களாகவும், தர்க்கரீதியில் சிந்தித்து விவாதிக்கவும், செயற்படவும், ஆராய்ந்து முடிவெடுக்கவும் களங்கள் அமைத்துக் கொடுத்ததோடு வழிகாட்டியும் நின்றார். அத்துடன் பல்கலைக்கழகத்தின் சட்ட ஆலோசகராகவும், பல்கலைக்கழக சமுகத்திற்கு நியாத்தின்பாற்பட்டு ஆலோசனைகளையும் உதவிகளையும் புரிந்துமுள்ளார். மேலும் பல சமுகநலன் சார் வழக்குகளில் முன்னிலையாகி நியாயத்தினை நிலைநிறுத்தியுமுள்ளார்.

இவ்வாறான முற்போக்கு செயற்பாட்டாளரான கலாநிதி குருபரன் அவர்கள் பதவி விலகுமளவிற்கு வழங்கப்பட்ட நெருக்குதல்கள், அது பல்கலைக்கழகம் சார்ந்ததாகவோ, பேரவை சார்ந்ததாகவோ, மானியங்கள் ஆணைக்குழு சார்ந்ததாகவோ, இல்லையெனில் அரசு சார்ந்ததாகவோ, எதுவாயினும் ஒட்டுமொத்தத்தில் அவர் முன்னிலையான வழக்கின் அடிப்படையினதே, அது காணாமல் போன பொதுமக்கள் தொடர்பிலான நியாயம் கோரும் செயற்பாட்டின் அடிப்படையினதே. எனவே இது நீதியின்-நியாயத்தின் குரலினை இல்லாதொழிக்கும் செயற்பாடே ஆகும் என்பதே எமது நிலைப்பாடு.

கலாநிதி குருபரன் அவர்களின் சேவையானது- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு, பல்கலைக்கழக சமுகத்திற்கு, நியாயம் வேண்டி நிற்கும் அனைவருக்கும் - சிங்களவர்களிற்கும், தமிழர்களுக்கும்- உண்மையை, நேர்மையை நேசிக்கின்ற இலங்கையர் அனைவரிற்கும்- அத்தியாவசியமானது.

எனவே கலாநிதி குருபரன் அவர்களிற்கு நியாயம் கிடைப்பதற்கு ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். நியாயம் கிடைக்கும்வரை அவருடன் இணைந்து நிற்க வேண்டியது பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அநியாயங்களுக்கு எதிராக நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகின்றவர்கள் என்றவகையில் ஊழியர் சங்கத்தின் கடமையுமாகும்.


No comments