சம்பந்தனின் உள்ளங்கையும் மகிந்த நீட்டும் புறங்கையும்! பனங்காட்டான்


கூட்டமைப்பு வேண்டுமானால் தங்களுக்கு ஆதரவு வழங்க முன்வரலாமென்றும், ஆனால், தங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு அவர்களின் ஆதரவு இம்முறை தேவைப்படாது என்கிறார் மகிந்த. கூட்டமைப்பின் சம்பந்தனோ மகிந்த அரசுக்கு ஆதரவு வழங்கத் தயாரென்று விடாப்பிடியாகக் கூறி வருகிறார். புறங்கையும் உள்ளங்கையும் எவ்வாறு இணைய முடியும்?

இலங்கையின் பொதுத்தேர்தல்கள் வரலாற்றில் அடுத்த மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் முக்கியமானது எனக்கூறுவதைவிட முற்றிலும் வித்தியாசமானது என்றே கூற வேண்டும். 

இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுமென சகல அரசியற்கட்சிகளும் தெரிந்து கொண்டு களத்தில் நிற்பதுதான் இதன் விசேடம். 

இந்தத் தேர்தல் முடிவை தேர்தலுக்கு முன்னராகவே பகிரங்கமாக அறிவித்த பெருமை தமிழ் தேசியக் கூட்டமைப்பையே சாரும். பொதுஜன பெரமுன ஆட்சியமைக்க முன்றிலிரண்டு பெரும்பான்மை தேவைப்படின் அதற்கான ஆதரவை கூட்டமைப்பு வழங்கும் என்று முற்கூட்டியே அறிவித்தவர் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன். 

இவரது அறிவிப்பு எதனைச் சுட்டுகிறது? மகிந்த தலைமையிலான அணியே வெற்றி பெறுவது நிச்சயம். அவர்களே ஆட்சியைக் கைப்பற்றுவர். சிலவேளை இவர்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதனை வழங்கி அவர்களை ஆட்சிக் கதிரையில் கூட்டமைப்பு ஏற்றும் என்பதே இதன் அர்த்தம். 

இவ்வாறான ஒரு முடிவை கூட்டமைப்பின் பேச்சாளர் எடுப்பதற்கு காரணமான சிலவற்றை பார்க்கலாம். 

1. கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய ராஜபக்ச சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே வெற்றியை ஈட்டியமை. 
2. அந்தத் தேர்தலில் தமிழர் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கிய சஜித் பிரேமதாச படுதோல்வி கண்டமை.
3. சிங்கள தேசத்தின் மாற்று அணியாக எப்போதும் இருந்துவந்த ஐக்கிய தேசியக் கட்சி, ரணில் அணி - சஜித் அணி என இரண்டாகப் பிளவுபட்டு இத்தேர்தலைச் சந்திப்பது. 
4. அண்ணன் மகிந்தவின் அணியை எப்படியாவது(?)தம்பி கோதபாய எவ்வாறாவது வெற்றி பெறச் செய்து நாடாளுமன்ற ஆட்சியை கைப்பற்றுவாரென்பது. இவற்றுக்கும் மேலாக வேறு சில புறக்காரணிகளும் இருக்கலாம். 

சிங்கள தேசத்தில் மகிந்த தரப்புக்கு நிகராக, தமிழர் தேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இருப்பதான கூட்டமைப்பின் ஒரு மனக்கணிப்பே, சுமந்திரன் மட்டுமன்றி சம்பந்தனும் மகிந்தவுக்கு ஆதரவு வழங்க முண்டியடித்துக் கொண்டு கருத்துத் தெரிவிப்பதற்குக் காரணம். 

உண்மையில் கூட்டமைப்பின் தற்போதைய நிலைவரம் அப்படித்தானா? இதனை அறிந்து கொள்ள தாயக அரசியலை சற்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும். 

2001ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் இருபத்தியிரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியது ஒரு வரலாற்றுச் சாதனை. மாவட்டரீதியில் பார்த்தால் யாழ்ப்பாணத்தில் எட்டு, வன்னியில் ஐந்து, மட்டக்களப்பில் நான்கு, திருமலையில் இரண்டு, அம்பாறையில் ஒன்று என்பதோடு தேசிய பட்டியலிலும் இரண்டு கிடைத்து எண்ணிக்கை இருபத்தியிரண்டு ஆனது. 

ஆனால், 2010ல் யாழ்ப்பாணத்தில் ஐந்து, வன்னியில் மூன்று, மட்டக்களப்பில் மூன்று, திருமலையிலும் அம்பாறையிலும் தலா ஒன்று என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்றதால், தேசியப் பட்டியலில் ஒன்று மட்டுமே கிடைக்க மொத்த எண்ணிக்கை பதினான்காகச் சரிந்தது. 

2015 தேர்தலில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை மாவட்டங்களில் முன்னைய தேர்தல்களைப் போன்று வெற்றி பெற்று, வன்னியில் நான்கு ஆசனங்களில் வென்றதால் தேசியப் பட்டியல் இரண்டு ஆகியது. இதனால் மொத்தம் 16 இடங்களைப் பெற முடிந்தது. இந்தத் தேர்தலில் எல்லாமாக 515,963 வாக்குகளைக் கூட்டமைப்பு பெற்றதை கவனத்தில் கொள்ளவேண்டும். 

ஆனால், மட்டக்களப்பில் வியாழேந்திரனும், வன்னியில் சிவசக்தி ஆனந்தனும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதால், கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது கூட்டமைப்பின் மொத்த எண்ணிக்கை 14 ஆக இறங்கியது. 

அடுத்த மாதத் தேர்தலில் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெறுமென்று சம்பந்தன் அடித்துக்கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறுவதால் நிச்சயமாக அந்த வெற்றி கிடைக்குமென்று களநிலைமையைப் புரிந்தவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

தேர்தல் என்றால் தலையிலிருந்து வால்வரை தாங்களே வெற்றி பெறுவோம் என்று கூறுவதும், அதிகூடிய எண்ணிக்கைக்கு ஆசைப்படுவதும் பொரிமாத் தோண்டி கதை போன்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி உருவாக்கிப் போட்டியிடும் சஜித் பிரேமதாசகூட அடுத்த பிரதமர் தாமே என்றும், மகிந்தவை வீட்டுக்கு அனுப்பப் போவதாகவும் முழங்கி வருவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

இதனை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் சஜித் பிரேமதாச வடக்கில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமக்குப் பெரும்பான்மை வாக்களித்த தமிழருக்கு அந்த மண்ணில் நின்றவாறு நன்றி தெரிவித்துள்ள இவர், கொரோனாவால் அங்கு பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா இருபதாயிரம் ரூபாவை வழங்கப் போவதாக தெரிவித்துள்ளார். 

தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்த சஜித், அந்த வாக்குகளைப் பெற்றுத்தந்த கூட்டமைப்பினருக்கு எதிராக அவர்களின் தாயக பூமியில் தனது கட்சி வேட்பாளர்களை போட்டிக்கு நிறுத்தியிருப்பது மட்டுமன்றி, பணத்தைக் காட்டி அவர்களின் வாக்கை அபகரிக்க முனைவது தமிழ் மக்களை மட்டுமன்றி கூட்டமைப்பையும் அவமானப்படுத்துவது. 

அடுத்தடுத்த வாரங்களில் ரணில், மகிந்த என்ற சிங்களத் தலைவர்களும் தமிழர் பூர்வீக நிலங்களுக்குச் சென்று வேறுவேறு சலுகைகளைக் கூறி அவர்கள் வாக்குகளைப் பெற முனைவர் என்பது நிச்சயம். 

மீண்டும் கூட்டமைப்பின் நிலைவரத்தைப் பார்க்க வேண்டியது அவசியம். 22, 14, 16 என்ற எண்ணிக்கையில் கடந்த மூன்று தேர்தல்களில் இவர்கள் ஆசனங்களைப் பெற்ற அரசியல் காலநிலை இப்போது இல்லை. 

2001ல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதில் முக்கியமானதாகவிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அணி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் வெளியேறி தனித்துப் போட்டியிடுகிறது. 

வடமாகாணசபைத் தேர்தலின்போது கூட்டி வரப்பட்டு அரசியலில் அறிமுகம் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், புதிய அணியை உருவாக்கி தேர்தலைச் சந்திக்கிறார். கூட்டமைப்பில் ஆரம்பத்திலிருந்து இடம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ், கூட்டமைப்பில் தொடர்ந்து அங்கம் வகிக்கும் ரெலோவிலிருந்து பிரிந்த சிறீகாந்தா - சிவாஜிலிங்கம் குழுவும் இவரது அணியில் இணைந்து போட்டியிடுகின்றன. 

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான ஒன்று - கூட்டமைப்பின் வேட்பாளர்கள் - சிறப்பாக முன்னாள் எம்.பி.க்கள் தங்களுக்குள் வெவ்வேறு அணியாகப் பிரிந்து நின்று தமக்குள் போட்டியிடுகின்றனர். இதற்கான காரணம் விருப்பு வாக்குகளாகும். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே தங்கள் வசமிருக்கும் ஐந்து ஆசனங்களையும் தொடர்ந்து தக்கவைக்க முடியாத நிலையை இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு ஏற்படுத்தியிருப்பதாக ஊடகத்தகவல்கள் பறைசாற்றுகின்றன. 

மூன்று விருப்பு வாக்குகளைப் பெற இவர்கள் தங்களுக்குள் கன்னை கட்டி நிற்பதால் கழுத்தறுப்புகளும் தாராளமாக இடம்பெறுகிறது. 

முன்னொரு தேர்தலில், 'மக்களே! வீட்டுக்கு வெளியே வந்து வாக்களியுங்கள்;" என்று கூறிய விக்கினேஸ்வரனை, கஜேந்திரகுமாரின் சைக்கிள் சின்னத்தை ஆதரிப்பதாகக்கூறி முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்க முனைந்தது கூட்டமைப்பு. இத்தேர்தலில் அவரே வீட்டுக்கு வெளியே வந்து வீட்டை எதிர்த்து தனி அணியில் போட்டியிடுகிறார். 

இதனால் ஆத்திரமடைந்த சம்பந்தன், விக்கினேஸ்வரனை நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். அவர் இப்போது எம்மை எதிர்த்துப் போட்டியிடுகிறார். கூட்டமைப்பை விமர்சிப்பதை விடுத்து தமிழ் மக்களுக்கு இவரால் என்ன செய்ய முடியுமென்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். 

கூட்டமைப்பின் அப்போதைய நான்கு தலைமைகளும் ஒன்றாகச் சேர்ந்து நேரில் விடுத்த அழைப்பின் பேரிலேயே விக்கினேஸ்வரன் வடமாகாணசபைத் தேர்தலுக்கு இணங்கினாரென்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டுவதும், நான்தான் என்ற ஆணவத்துடன் கருத்தை வெளியிடுவது தமிழீழ அரசியலில் தவிர்க்கப்பட வேண்டுமென்பதும் இங்கு தவறாது சுட்டிக்காட்ட வேண்டிய  கடமையாகிறது. 

ஏழாண்டுகளுக்கு முன்னர் விக்கினேஸ்வரனை அரசியலுக்கு அழைத்தபோது அவரால் தமிழ் மக்களுக்கு என்ன செய்ய முடியுமென தெரியாமலா அழைத்தீர்கள் என்ற ஒரு கேள்வியை சம்பந்தனிடம் இப்போது முன்வைத்தால் அதற்கு அவருடைய பதில் என்னவாக இருக்கும்? 

அன்று நல்லவராகவும், வல்லவராகவும் இருந்த விக்கினேஸ்வரன் இன்று கூட்டமைப்பின் கொள்கை மீறல்களைச் சுட்டி தேர்தலில் போட்டியிட்டால், அவர் அரசியலுக்கு லாயக்கற்றவர் - அவரால் தமிழருக்கு எதுவும் செய்ய முடியாது என்பதுதான் கூட்டமைப்பின் கணிப்பா? இதனைத் தீர்மானிக்க வேண்டியது வாக்காளர்களே தவிர எதிரணியினர் அல்ல. 

வீட்டைச் சுத்தம் செய்யும் நேரம் வந்துவிட்டதென தமிழரசின் மகளிர் அணிப் பிரமுகர் ஒருவர் அண்மையில் பகிரங்கமாகத் தெரிவித்த கருத்து இவர்களின் தலைமைக்குச் சமர்ப்பணம். 

கூட்டமைப்பு வேண்டுமானால் தங்களுக்கு ஆதரவு தரலாம். ஆனால் அவர்களின் உதவிதான் பெரும்பான்மைக்குத் தேவைப்படும் என்ற நிலைமை இம்முறை இருக்காது என்று மகிந்த கூறினாலும், நாங்கள் உங்களுக்கு ஆதரவு தர தயாரென்று கூட்டமைப்பு முழந்தாளிட்டு கைகளை நீட்டி நிற்கிறது. 

சிங்களத் தரப்பு புறங்கையை நீட்டும்போது கூட்டமைப்பு உள்ளங்கையை நீட்டி எதனையும் பெறமுடியாது. மாறாக, முன்னர் ஒன்றாகவிருந்த உள்ளங்கைகளை அணைத்து உண்மையான  - பரந்த கூட்டமைப்பாக போட்டியிடின் புறங்கை நீட்டுபவர்களிடம் மண்டியிட வேண்டிய தேவையில்லை. 

தமிழர் தரப்பின் மூன்று அணிகளும் ஒன்றுபட்டால் சம்பந்தன் கேட்கும் இருபது கிடைக்காவிட்டாலும், பதினைந்தாவது கிடைக்காதா?




No comments