வீழ வீழ எழுவது எம்மினம்:சிவி!பணம் கொடுத்து வேறு பொருள் கொடுத்து வாக்குகளைக் கேட்பதிலும் பார்க்க கொள்கைகள் மீது நாட்டம் காட்டி எமது வாக்காளர்கள் எமக்கு ஆதரவு வழங்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் நாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் வலிமைகுன்றிய மக்கட் கூட்டம் என்பது உண்மையே. ஆனால் நாங்கள் தமிழர்கள் என்ற முறையில் பெருமை கொண்டவர்கள். அடுத்த வேளை சாப்பிட வழி இல்லை என்றாலும் எங்கள் மானத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். அண்மைக் காலங்களில், அதுவும் 2009ன் பின் நாங்கள் ஏனோ மாறிவிட்டோம். இனி எல்லாம் முடிந்து விட்டது என்ற எண்ணமா? 

எதுவுமே முடியவில்லை. நியாயமான தீர்வு பெறும் வரையில் மீண்டும் மீண்டும் எமது தமிழ்ச் சமூகம் கிளர்ந்தெழும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் கொள்கைகளில் இருந்து விலகாமல் இருந்திருந்தால் முதலமைச்சர் பதவிக்காலம் முடிந்ததும் நான் நிம்மதியாக வீடு சேர்ந்து என் ஓய்வு வாழ்க்கையைத் தொடர்ந்திருப்பேன். கொள்கை பிறழ்வு எந்தளவுக்கு ஒரு அசம்பாவிதத்தை, அழிவை எம் மக்களுக்குக் கொண்டு வரப் போகின்றது என்பதை உணர்ந்தே நான் என் பயணத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தெந்தக் கொள்கைகளைப் புறக்கணித்ததோ அவற்றை நாம் இப்;பொழுது ஏந்திச் செல்கின்றோம்.

மொத்தத்தில் இன்றைய கூட்டமைப்பு என்று அழைக்கப்பட வேண்டியது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையே. தம்பி பிரபாகரனால் தொடங்கப்பட்ட கூட்டமைப்பானது கொள்கைகளை விட்டு மரணப் படுக்கையில் இப்போது தத்தளித்துக் கொண்டிருக்கின்றதெனவும் தேர்தல் பிரச்சாரத்தின் போது யாழ்ப்பாணத்தில் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments