தமிழாய்வு நிறுவனத்துக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்?

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிடோரின் ட்விட்டர் பக்கங்களோடு, நடிகர் ரஜினிகாந்த்தின் பக்கத்தையும் இணைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குனரை நியமித்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் கடிதம் எழுதினார்.

இதில் ரஜினிகாந்தை குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் என்ன வந்தது? என்று மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? மத்திய அரசு தனது கீழுள்ள துறையின் பதவிகளுக்கு நியமனம் செய்கிறபோது ரஜினிகாந்துக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நெருக்கடியென்ன? அவர் என்ன மத்திய அமைச்சரா? மாநில அமைச்சரா? மக்கள் பிரதிநிதியா? ஐ.ஏ.எஸ். அதிகாரியா? அவருக்கு எதற்கு நியமனச் செய்தியைக் கூற வேண்டும்? அரசின் எவ்விதப் பதவியிலும் இல்லாத அவருக்கு எதற்கு அளப்பரிய முதன்மைத்துவம்? யார் கொடுத்த நெருக்கடி? ரஜினிகாந்த் என்பவர் ஒரு நடிகர் அவ்வளவுதானே! அதனைத் தாண்டி, மக்களோடு அவருக்கு என்ன தொடர்பு இருக்கிறது? ரஜினிகாந்தை திருப்திப்படுத்தத்தான் சந்திரசேகரனை இயக்குநராக நியமனம் செய்தார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் இன்னல்கள் நேரிட்ட எத்தனையோ பேராபத்துமிக்கச் சூழல்களிலெல்லாம் வாய்திறக்காது மௌனியாய் இருந்த ரஜினிகாந்த் இவ்விவகாரத்தில் கடிதத்தின் மூலம் நன்றி பாராட்டியிருப்பதன் அரசியலென்ன? அவரை மகிழ்விக்கத்தான் இந்நியமனம் நடைபெற்றதா என்ற சந்தேகத்தினை எழுப்பியுள்ள அவர், வெளிப்படைத்தன்மைத் துளியுமின்றி, தனிநபர்களை மகிழ்விக்கப் பரிந்துரைத்த நபரைப் பதவியில் அமர்த்தி அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட மத்திய அரசின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்.

மேலும், “அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் நிஷாங்க் அவர்கள் நடிகர் ரஜினிகாந்துடனான தனது அலுவல் ரீதியான தொடர்புகளுக்குத் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பதவியை நியமிப்பதில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தலையீடு இருப்பது அப்பட்டமாகத் தெரிவதால் அதில் உண்மை இருப்பின், தான் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிராக நடந்து கொண்ட மத்திய அமைச்சர் உடனடியாகத் தனது பதவி விலக வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments