மாற்று அணி என்பது காலத்தின் தேவையால் சுயமாக உருவாவது - பனங்காட்டான்


இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்தே சுதந்திரக் கட்சி உருவானது. தமிழ் காங்கிரசில் இருந்துதான் தமிழரசுக் கட்சி பிறந்தது. சுதந்திரக் கட்சியிலிருந்து மகிந்தவின் பொதுஜன பெரமுனவும், ஜே.வி.பி.யிலிருந்து விமல் வீரவன்சவின் ஜே.என்.பி.யும் உருவாகின. ராவுப் ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரசிலிருந்தே றிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் உருவானது. இதனை மறந்து விக்கினேஸ்வரனின் தேசியக் கூட்டணியையும், கஜேந்திரகுமாரின் தேசிய முன்னணியையும் மக்கள் தோற்கடிக்க வேண்டுமென கூட்டமைப்பு ஏன் கோருகிறது?

இலங்கைத் தேர்தல் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஒரு வாரம் முடிந்தாகிவிட்டது. 

அடுத்த ஆறு வாரங்களை இதன் மகோற்சவ காலம் எனலாம். ஆகஸ்ட் 5ம் திகதி இடம்பெறும் தேர்தல் இதன் தீர்த்தத் திருவிழா. சிலவேளை இதன் பின்னரும் வேறு சில விழாக்கள் தொடரலாம். 

ஒவ்வொரு தேர்தல் காலத்தின்போதும் அந்தத் தேர்தலை மிக முக்கியமான, வரலாற்றுச் சிறப்பு மிக்க, அத்தியாவசிய முடிவுகளை எட்ட வேண்டிய தேர்தல் என்று கூறி மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்பது அரசியல் கட்சிகளின் வழக்கம். 

இலங்கை அரசியலாளர்கள் இதில் முன்மாதிரியானவர்கள். இதனை எழுத ஆரம்பிக்கும் வேளையில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் பணியாற்றிய பிரபல ஆங்கில பத்திரிகையின் ஆசிரியர் எழுதிய கட்டுரையொன்றின் சில வரிகள் நினைவுக்கு வருகிறது. 

இதனை எழுதியவர் றெஜி மைக்கல் (இவர் ஒரு தமிழர்). 1960களில் வெளிவந்த முன்னைய டெய்லி மிறர் என்ற ஆங்கிலத் தினசரியின் ஸ்தாபக ஆசிரியர் இவர். 

'தேர்தலின்போது இவர்கள் பல வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். அடுத்த தேர்தல்வரை எதனையும் நிறைவேற்ற மாட்டார்கள். மீண்டும் அடுத்த தேர்தலில் மேடையேறி முன்னர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு விளக்கம் கொடுத்து மக்களை நம்ப வைப்பார்கள். திரும்பவும் அதே வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாக மேடைகளில் தெரிவித்து மக்களை நம்ப வைத்து (ஏமாற்றி) வெற்றி பெறுவார்கள். இதுதான் அரசியல்" என்ற அர்த்தப்பட அந்தக் கட்டுரையை றெஜி மைக்கல் எழுதியிருந்தார். 

இது எழுதப்பட்டு அரை நூற்றாண்டு கடந்த பின்னரும் இலங்கை அரசியலைப் பொறுத்தளவில் இதுவே யதார்த்தமானது என்பது இதுவரை நிரூபிக்கப்பட்டே வருகிறது என்று நான் குறிப்பிட வேண்டிய தேவையில்லை. 

தென்னிலங்கையில் மகிந்த ராஜபக்சவும் அவரது தலைமையிலான பொது ஜன பெரமுன அணியும் கண்களை மூடிக் கொண்டு சிங்கள மக்களை விளித்து வாக்குறுதிகளை விசிறித் தள்ளுகின்றனர். சிலசமயம், அவர்களுக்குள்ளே ஒன்றுக்கொன்று முரணான அறிவிப்புகளும் வராமலில்லை. 

முக்கியமாக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள், அவர்களின் தொடர் போராட்டம், அதற்கான தீர்வு என்னும் விடயங்களில் இவர்கள் தமக்குள் முரண்பட்டுக் கொண்டாலும், தமிழர்கள் ஆளப்பட வேண்டிய இரண்டாந்தரப் பிரஜைகள் என்பதில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கவில்லை. 

வடக்கு கிழக்கு என்னும் தமிழர் தாயகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் மகிந்த அணிக்கு நிகராக மேடைகளில் முரண்பட்ட கருத்துகளில் கீறல் விழுந்த ஒலித்தட்டுகளாக காணப்படுகின்றனர். பழைய பாடல்களுக்கு புதிய பல்லவிகளை இசைக்க ஆரம்பித்துள்ளனர். 

கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை என்று கூறி வந்த சம்பந்தன், இப்போது முன்னாள் போராளிகள் விடுதலைப் புலிகளே கூட்டமைப்பை உருவாக்கினர் என்று கூறுகையில் அதனை மறுக்காது அவர்களின் ஆதரவை இரு கரம் நீட்டி வரவேற்பதை என்னென்று சொல்வது?

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மாற்று அணியின் அவசியத்தை முன்னிறுத்தி விடும் அறிக்கைகள் கூட்டமைப்பு விட்ட தவறுகளையும், அவர்களின் கடந்த கால அரசியல் குளறுபடிகளையும் அம்பலப்படுத்தி வருகின்றன. 

கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்து நாடாளுமன்றம் அனுப்பினால் எந்தப் பிரயோசனமும் இல்லையென்றும், சிங்கள அரசாங்கங்களுடன் சேர்ந்து தங்கள் சுயவிருப்புகளையே நிறைவேற்றுவார்கள் என்றும், நம்பி வாக்களிக்கும் மக்களை நட்டாற்றில் கைவிடுவார்களென்றும் மாற்று அணி அறிக்கைகள் கூறி வருகின்றன. 

ஆனால் இவைகளை உதாசீனம் செய்யும் வகையில் கூட்டமைப்பு தனது பரப்புரை இயந்திரத்துக்கு புதிய வகை எண்ணெய் ஊற்ற ஆரம்பித்துள்ளது. 

'எனது அன்புக்குரிய மக்களே" என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பாசம் பொழிய விடுத்த அறிக்கை கடந்த வாரம் வெளியானது. தமிழ் நாட்டு அரசியல் அரங்கில், 'உடன்பிறப்புகளே, இரத்தத்தின் இரத்தங்களே" என்று திராவிடத் தலைவர்கள் கவர்ச்சி காட்டி வெளியிட்ட அறிக்கைகளைப் போன்று சம்பந்தன் முதல்முறையாக 'எனது அன்புக்குரிய மக்களே" என்று விளித்து அறிக்கை வெளியிட்டமையைப் பார்க்கையில், இவ்வருடத் தேர்தல் முடிவில் அவருக்கிருக்கும் அச்சத்தையும் நம்பிக்கையீனத்தையும் அவதானிக்க முடிகிறது. 

மகிந்த அணி ஆட்சியமைக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையெனில் கூட்டமைப்பு ஆதரவு வழங்கத் தயார் என்று ஒரு வெடிகுண்டை சுமந்திரன் இலகுவாக தூக்கி வீசியுள்ளார். தமிழருக்கு அரசியல் தீர்வு தர மகிந்த அணி உடன்பட்டால் இந்த ஆதரவு வழங்கப்படுமெனவும் அவர் அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை மகிந்த தரப்பு ஒரு விடயத்தை பகிரங்கமாகக் கூறி வருகிறது. அது, ஜனாதிபதி தேர்தலைப்போல பொதுத் தேர்தலிலும் தனிச்சிங்கள வாக்குகளால் தங்களால் வெற்றி பெற முடியும் என்பதே அந்த அறிவிப்பு. அதாவது, தமிழ் முஸ்லிம் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என்பதே இதன் கருத்து. 

மகிந்த அணியைச் சேர்ந்த கெகலிய ரம்புக்வெல என்பவர் அண்மையில், அரசியல் ரீதியாக தமிழரின் பிரச்சனையைத் தீர்க்க தாங்கள் தயாரில்லையென்று கூறியதையும் இங்கு கவனிக்க வேண்டும். 

நிலைமை இப்படியிருக்க, தாமாக கீழிறங்கி மகிந்த அணி ஆட்சியமைக்க கூட்டமைப்பு ஆதரவளிக்குமென்று சம்பந்தனும் சுமந்திரனும் கூறி, தமிழ் மக்களின் வாக்குகளை கேட்க வேண்டிய தேவை எதற்காக என்ற கேள்வி எழுகிறது. 

சிங்கள அரசியலாளர்களுக்கு முண்டுகொடுக்க மண்டியிடும் கூட்டமைப்பு, தாயகம் - தேசியம் - தன்னாட்சி என்ற கோட்பாடுகளுடன் தளத்தில் நிற்கும் மாற்று அணிகளை வெட்டி வீழ்த்துமாறு மக்களிடம் எதற்காக வேண்டுகிறது? 

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக கூட்டமைப்பே இருக்கிறது என்றும், மாற்று அணிகளை மக்கள் தோற்கடித்து ஒரே அணியாக கூட்டமைப்பையே வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும் கூட்டமைப்பின் இரட்டையர்கள் செல்லும் இடமெங்கும் கூறி வருகின்றனர். 

இவர்களுக்கு இலங்கையின் அரசியல் வரலாற்றை நினைவுபடுத்த சில விடயங்களை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. 

சிங்கள மக்கள் மத்தியில் பல மாற்று அணிகள் உள்ளன. இவைகள் காலத்துக்குக் காலம் வேறு அணிகளிலிருந்து பிரிந்தே புதிய அணிகளாக தோற்றம் பெற்றன. அதுமட்டுமன்றி தற்போது மகிந்தவின் பொதுஜன பெரமுன, ரணிலின் ஐக்கிய தேசிய முன்னணி, சஜித் பிரேமதாசவின் மக்கள் சக்தி என்பவைகூட கொள்கை அடிப்படையில் மாற்று அணிகளையும் இணைத்தே தேர்தலில் போட்டியிடுகின்றன. 

இதனால் மாற்று அணிகள் தங்கள் தனித்துவத்தை இழக்கவில்லை. தங்கள் தலைமைத்துவத்தையும் இழக்கவில்லை. 

கடந்த எழுபது ஆண்டு காலத்தில் இலங்கையில் கட்சிகளும் அணிகளும் எவ்வாறு உருவாகின என்ற வரலாற்றை கூட்டமைப்பு சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும். 

இலங்கையின் முதலாவது சிங்கள அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியிலிருந்துதான் பண்டாரநாயக்கவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிறந்தது. ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்றே எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். 

என்.எம்.பெரேராவின் சமசமாஜக் கட்சியிலிருந்து பிரிந்து வாசுதேவ நாணயக்கார நவசமசமாஜக் கட்சியை ஆரம்பித்தார். ஜே.வி.பி. இலிருந்து பிரிந்துதான் விமல் வீரவன்ச ஜே.என்.பி. என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். ராவுப் ஹக்கீமின் இலங்கை முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறித்தான் றிசாத் பதியுதீன் மக்கள் காங்கிரசை ஆரம்பித்தார். 

கடந்த வருடத்தில் சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுன என்ற புதிய அணியை ஆரம்பித்தார். 

இங்கு முக்கியமாக அவதானிக்க வேண்டிய ஒன்றுண்டு. ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பிரிந்து உருவான புதிய அணிகள் இதுவரை அழிந்து போகவில்லை. மக்களால் தோற்கடிக்கப்படவும் இல்லை. அனைத்து அணிகளும் தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றே வருகின்றன. அவர்களை மக்களே தெரிவு செய்து அங்கீகாரம் வழங்கியுள்ளனர். 

நிலைமை இப்படியிருக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதற்காக விக்கினேஸ்வரனின் கூட்டணியையும், கஜேந்திரகுமாரின் முன்னணியையும் மக்கள் தோற்கடித்து, தங்களை மட்டும் ஒற்றைத் தலைமையாக வெற்றிபெற வைக்க வேண்டுமென கேட்கிறார்கள். 

தேர்தலில் நீதிபதிகள் வேட்பாளர்கள் அல்ல. வாக்காளர்களே வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்கள். தங்கள் கொள்கையை ஆத்மசுத்தியாக வெளிப்படுத்தி வாக்குக் கேட்க வேண்டிய கூட்டமைப்பு தரமிறங்கி மாற்றுத் தலைமைகளை தோற்கடிக்க வேண்டுமென வேண்டுவது எந்த வகையிலும் நியாயமாகாது. 

கூட்டமைப்பிடம் ஆரோக்கியமான பதில் வேண்டி முன்வைக்க வேண்டிய ஒரு கேள்வி இங்குண்டு: 

வடக்கில் மகிந்தவின் தலைமையிலான அணியிலும் ரணிலின் தலைமையிலான அணியிலும் (இரண்டுமே சிங்களத் தலைமைகள்) போட்டியிடும் டக்ளஸ் தேவானந்தவையும், விஜயகலா மகேஸ்வரனையும் தோற்கடிக்க வேண்டுமென கேட்காது, மாற்று அணியென்று மாயை காட்டி விக்கினேஸ்வரனையும் கஜேந்திரகுமாரையும் மட்டும் எதற்காக இலக்கு வைக்கிறார்கள்? 

டக்ளசும், விஜயகலாவும் வென்றாலும் பரவாயில்லை, விக்கினேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் வெற்றிபெறக்கூடாது என்பதுதான் கூட்டமைப்பின் இந்த வருட தேர்தல் விஞ்ஞாபனமா?

No comments