தேர்தலுக்கே உரித்தான புலிக்கோசமும் புலிப்பாசமும்! பனங்காட்டான்

தமிழ் மக்களின் ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என்றிருந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகள் மாற்றிவிட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளை எத்திப்பெற புதுயுக்தியை கூட்டமைப்பு கையாள்கிறது. அதுதான், முன்னாள் போராளிகளை அணைப்பதும் அவர்களைப் போற்றுவதுமான திடீர் புலிப்பாசமும் புலிக்கோசமும். ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் இருப்பான் என்பது அரசியலுக்கே சாலப்பொருத்தம்.
 

மார்ச் மாதம் முதல்வாரம் கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தின் பொதுத்தேர்தல் இரண்டு தடவை ஒத்தி வைக்கப்பட்டதன் பின்னர், ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடைபெறுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

196 தொகுதிகள் ஊடாகத் தெரிவாகும் உறுப்பினர்களைத் தவிர மிகுதி 29 பேரும் தேசியப் பட்டியலூடாகத் தெரிவாவர்.

இருபது அரசியற் கட்சிகளும், முப்பதினான்கு சுயஇச்சைக் கட்சிகளுமென மொத்தம் 7452 பேர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

தேர்தலில் வாக்களிக்க 16,263,885 பேர் இடாப்பில் பதிவு பெற்றுள்ளனர். இவர்களுள் சுமார் 70 வீதமானவர்கள் வாக்களிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏழு உறுப்பினர்களைத் தெரிவதற்கான யாழ்ப்பாண மாவட்டத்தில் (கிளிநொச்சி உட்பட)  பத்தொன்பது அரசியற் கட்சிகளும், பதினான்கு சுயஇச்சைக் குழுக்களுமென 330 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 571,848 வாக்காளர் உள்ளனர். 

வன்னி மாவட்டத்தில் (முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்) ஆறு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய பதினேழு அரசியற் கட்சிகள், 28 சுயஇச்சைக் குழுக்களுமென 405 பேர் போட்டியிடுகின்றனர். இங்குள்ள வாக்காளர் தொகை 287,024. 

ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டிய மட்டக்களப்பு மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 409,808. இங்கு பதினாறு அரசியற் கட்சிகள் 22 சுயஇச்சைக் குழுக்கள் சார்பில் 304 பேர் போட்டியிடுகின்றனர். 

திருமலை மாவட்டத்தில் நான்கு பேர் தெரிவு செய்யப்படுவர். 288,868 வாக்காளர்கள் உள்ள இங்கு பதின்மூன்று அரசியற் கட்சிகள் மற்றும் பதினான்கு சுயஇச்சைக் குழுக்கள் சார்பில் 189 பேர் போட்டியிடுகின்றனர். 

திகாமடுல்ல எனும் அம்பாறை மாவட்டத்தில் ஏழு ஆசனங்களுக்காக இருபது அரசியற் கட்சிகள் மற்றும் 34 சுயஇச்சைக் குழுக்கள் சார்பில் 189 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு வாக்காளர் தொகை 513,929. 

ஆகக்கூடியதாக இருபது வரையான தமிழர்களை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யக்கூடியதாக எதிர்பார்க்கப்படும் வடக்கு கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தேர்தல் திருவிழா கொடியேறியுள்ளது. 

அதற்கு நிகராக தெற்கும் மேலெழுந்துள்ளது. கடந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் பெற்ற வெற்றியிலும் பார்க்க அதிகூடிய மெகாவெற்றியைப் பெறும் இலங்குடன் மகிந்தவின் முன்னணி களத்தில் இறங்கியுள்ளது. 

மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறும் இலக்குடன் (150) மகிந்த - கோதபாய சகோதரர்கள் தேர்தல் குதிரையை ஓட்ட ஆரம்பித்துள்ளனர். இது கிடைக்குமானால் பத்தொன்பதாவது திருத்தத்தை ரத்துச் செய்வது அவர்கள் எதிர்பார்ப்பதுபோல இலகுவான காரியம். 

சிங்களத் தரப்பில் மாற்றுத் தலைமையாக இதுவரை இருந்துவந்த ஐக்கிய தேசிய கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ள சூழ்நிலையை சரியாகப் பந்தாட மகிந்த அணி வியூகம் வகுத்துள்ளது. 

ரணில் அணியும், சஜித் அணியும் தப்பித்தவறி மீண்டும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டால்கூட ஆட்சியைக் கைப்பற்ற முடியாதிருக்கும் சமகால அரசியற் போக்கு மகிந்த தரப்புக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். 

கடந்த காலத் தேர்தல்களின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிமுக்கியமான ஓர் அம்சத்தை; முன்னிறுத்தி தமிழ் மக்களிடம் பெரும்பான்மை வாக்குக் கேட்பது வழக்கம். 

சிங்கள மக்களின் வாக்குகள் எப்போதும் இரண்டாகப் பிளவுபடுவதால் தமிழரின் ஆதரவின்றி எந்தவொரு சிங்களக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாதென்பதால், கூட்டமைப்பு பேரம் பேசும் சக்தியாக பலமுடன் வெற்றி பெற தமிழ் மக்கள் ஏகோபித்து தங்கள் வாக்குகளை கூட்டமைப்புக்கு வழங்க வேண்டுமென்பது இவர்களது கடந்த காலக் கோரிக்கையாக இருந்தது. 

ஆனால், கடந்த வருட ஜனாதிபதித் தேர்தல் இதனைப் பொய்யாக்கி விட்டது. 

தமிழரின் ஆதரவு மட்டுமன்றி முஸ்லிம்களின் ஆதரவுகூட இல்லாது தங்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமென்பதை சிங்கள பௌத்த பேரினவாதம் கோதபாயவின் வெற்றியினூடாக நிரூபித்துக் காட்டியது. இது இலங்கையின் அரசியல் வரலாற்றில் தனிச்சிங்கள ஆட்சியென்ற புதிய சகாப்தத்தை உருவாக்கியது. 

இந்தப் பின்புலத்தில், ஆகஸ்ட் 5ம் திகதிய தேர்தலைச் சந்திப்பது கூட்டமைப்புக்கு புதியதொரு அனுபவம். அதுமட்டுமன்றி தமிழர் தாயகத்தில் மாற்று அணிகள் (மாற்றுத் தலைமையன்று) பலமான போட்டியாளர்களாக இத்தேர்தலில் களம் இறங்குவது கூட்டமைப்புக்கான சவாலாகவும் பார்க்கப்படுகிறது. 

வடமாகாண சபைத் தலைவராக இருந்த சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான புதிய அணி வடக்கைப் பொறுத்தளவில் கூட்டமைப்புக்கு உண்மையாகவே ஒரு தலையிடியாக மாறியுள்ளது. அதேசமயம், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தேசிய முன்னணி களத்தின் பெறுமானமுள்ள இன்னொரு போட்டியாளராக நிற்கின்றது. 

வடக்கில் இவை இரண்டையும் அவதானமாகக் கையாள வேண்டிய விடயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ள கூட்டமைப்புக்கு, அவர்களின் உள்வீட்டுக்குள் உருவாகியுள்ள சுமந்திரன் எதிர்ப்பலையை கையாளுவது ஒரு சவாலாகவே அமைந்துள்ளது. 

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே சமூக ஊடகங்கள் வழியாக சுமந்திரன் மீதான தாக்குதல் கூட்டமைப்பின் ஒரு குழுவினரால் மின்னல் வேகத்தில் நடத்தப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டனவாயினும் தமிழரசுச் கட்சியின் சில முன்னாள் எம்.பி;.க்கள் தொடர்ந்து சுமந்திரனை இலக்கு வைத்து தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். 

தமிழ் மக்கள் பிரச்சனைத் தீர்வு, புதிய அரசியலமைப்பு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பவற்றுக்கு அப்பால் பொதுமக்கள் மத்தியில் கூட்டமைப்பு மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி இன்னொரு அலையாகக் காணப்படுகிறது. 

இதிலிருந்து தற்காலிகமாக விடுபட ஏதாவது புதிய உபாயத்தைக் கையாள வேண்டிய சூழ்நிலைக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது. இப்போதைக்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள ஆயுதம் முன்னாள் போராளிகள். 

இவர்களை தங்கள் பக்கம் இழுப்பது, இவர்களுக்காகக் குரல் கொடுப்பது, இவர்கள் தங்களோடுதான் உள்ளனர் என்றவாறு காட்டுவது என்பவற்றில் கூட்டமைப்பினர் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனர். 

இதுவரை தொடங்கிய சகல முன்னெடுப்புகளிலும் பிசுபிசுத்துப் போன நிலையிலுள்ள தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் அனைவரையும் ஒன்றிணைந்து தங்களுடன் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் ஓரளவுக்கு தங்கள் வாக்கு வங்கியை தக்க வைக்கலாமென்பது இவரது கணிப்பு. 
சில வாரங்களுக்கு முன்னர் சிங்கள தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தாம் ஏற்றுக் கொள்ளவில்லையென்று கூறி, இதனை எங்கும் எப்போதும் துணிந்து கூறுவேன் என்று மார்பு தட்டிய சுமந்திரன் இப்போது தேர்தல் காய்ச்சலால் போலும் சடுதியாக குததுக்கரணம் அடித்துள்ளார். 

தமிழினத்தின் விடிவுக்காகப் போராடிய முன்னாள் போராளிகளின் பங்களிப்பு தீர்வு நோக்கிய இன்றைய தங்களின் போராட்டத்துக்கு அத்தியாவசியமானது என்றும், அவர்களை தமிழரசுக் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இந்த வாரம் கூறியுள்ளார். 

இங்கு இவர் கையாண்டுள்ள வார்த்தைப் பிரயோகம் கவனிக்கப்பட வேண்டியது. தேர்தல் முடிந்த பின்னர், இன்னொரு சந்தர்ப்பத்தில் இதனைக் குறிப்பிடும்போது அவர்களை விடுதலைப் புலிப் போராளிகள் என்று குறிப்பிடவில்லையென்றும் முன்னாள் போராளிகள் என்றே குறிப்பிட்டேன் என்று விளக்குவதற்கான முன்னெச்சரிக்கையாக சுமந்திரனின் வார்த்தைப் பிரயோகத்தைப் பார்க்க முடிகிறது. 

தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையில் சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் போராளிகளைச் சேர்த்துக் கொள்ள தீர்மானம் வந்தபோது தாம் ஒருவர் மட்டுமே அதனை ஆதரித்ததாக சுமந்திரன் தெரிவித்திருந்தார். 

இதனை முற்றாக மறுக்கும் காணொளி ஒன்றை தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள பிரபல சட்டவாளர் தவராசா வெளியிட்டுள்ளார். 

கொழும்புக் கிளையில் அன்று முன்னாள் போராளிகளை இணைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டவேளை அதற்கு ஆதரவு வழங்காத ஒரே ஒரு நபர் சுமந்திரன் தான் என்பதை இவர் வெளிப்படுத்தியுள்ளார். 

தேர்தல் நெருங்கும் வேளையில் முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பான, ஆதரமற்ற, அரசியல் நோக்கம் கொண்ட, தனது சுயநலத்துக்காக அப்பட்டமான பொய்யை சுமந்திரன் கூறியுள்ளதாக சட்டவாளர் தவராசாவின் வாய்மூலம் வெளிப்படுத்துகிறது. 

அண்மைக் காலங்களில் சுமந்திரனின் பல அறிக்கைகளும் கூற்றுகளும் முன்னுக்குப் பின் முரணாகவும் உண்மைக்குப் புறம்பானதாகவும் அமைந்துள்ளன. கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி;.களில் ஒருவர்கூட சுமந்திரனுக்கு ஆதரவாக இயங்க முடியாத நிலை காணப்படுகிறது. 

தமிழ் மக்களின் ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது என்றிருந்த நிலைமையை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகள் மாற்றிவிட்டன. இதனால் தமிழ் மக்களின் வாக்குகளை எத்திப்பெற புதுயுக்தியை கூட்டமைப்பு கையாள்கிறது. 

அதுதான், முன்னாள் போராளிகளை அணைப்பதும் அவர்களைப் போற்றுவதுமான திடீர் புலிப்பாசமும் புலிக்கோசமும். ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் இருப்பான் என்பது அரசியலுக்கே சாலப்பொருத்தம். 

No comments