நாசமாகின்றது வடக்கு சுகாதார துறை:முரளி குற்றச்சாட்டு


வடமாகாண சுகாதார சேவையில் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் செய்துவரும் தலையீடுகளை சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக கொழும்பு ஊடகங்களினை கருவியாக பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இடமாற்றங்களை பற்றிய தனது பகிர்வில்

வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை மலினப்படுத்தும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA )

மருத்துவ சேவை வைத்தியர்களின் நியமனம் ஏனைய அரச சேவை நியமனங்களைப்போல் சேவை மூப்பு மற்றும் கல்வித்தராதரங்களுக்கு ஏற்ப ஸ்தாபனக் கோவை விதிகளுக்கு உட்பட்ட வகையில் இடம் பெறும். நியமனம் பெற்ற ஒரு மருத்துவரின் இடமாற்றம் அவரது சுயவிருப்பின் பேரில் அல்லது ஒழுக்காற்று விதிகளுக்கு அமைய அவர் தவறு இழைத்திருந்தால் அதாவது அவரது குற்றம் திணைக்களத்தின் விசாரணை ஒன்றில் நிரூபணம் ஆகியிருந்தால் அவரை தண்டிப்பதற்காக இடமாற்றம் செய்யப்படுவார்.

ஆனால் அண்மைக்காலமாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA ) தலையீட்டில் இந்த விதிகளுக்கு முரணாக பல மருத்துவர்கள் குறிப்பாக மருத்துவ நிர்வாக சேவையில் நியமனம் பெற்ற மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். வடமாகாணத்தில் இடம் பெறும் விதிகளுக்கு முரணான இந்த இடமாற்றங்கள் மருத்துவ நிர்வாக சேவையை மலினப்படுத்தியுள்ளதுடன் மக்களுக்கான சுகாதார சேவை வழங்கலை மிகவும் பலவீனப்டுத்தியுள்ளது. இதற்கு உதாரணமாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் நியமனத்தை எடுத்துக் கொள்ளலாம்.

 கடந்த 3 வருடங்களுக்குள் 5 பேர் இந்த பதவிக்கு குறுகிய காலத்தில் நியமிக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக உள்ளது. அண்மையில் இடம் பெற்ற நியமனங்களை எடுத்துக் கொண்டால் மருத்துவர் நிலக்சன் ஒக்டோபர் 2019 நியமிக்கப்பட்டார். மார்கழி 2019 நிலக்சன் எந்த வித குற்றசாட்டு விசாரணை எதுவும் இன்றி நீக்கப்பட்டு GMOA இணைப்பாளரின் தலையீட்டால் அவருடைய இடத்துக்கு மருத்துவர் சுகந்தன் நியமிக்கப்பட்டார். அதே வகையில் மருத்துவர் சுகந்தன் எந்த வித குற்றசாட்டு விசாரணை எதுவும் இன்றி நீக்கப்பட்டு அவருடைய இடத்துக்கு மருத்துவர் விநோதன் ஜுன் 4ம் திகதி GMOA இன் அழுத்தத்துக்கு அமைய மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டாலும் வடமாகாண ஆளுநர் இதில் தலையிட்டு இந்த இடமாற்றத்தை நிறுத்தியிருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது ). 

ஏற்கெனவே முல்லைத்தீவில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மன்னார் மாவட்டத்தில் மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக கடமையாற்றி வரும் மருத்துவர் விநோதன் மன்னார் மாவட்டத்தில் பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் எவரும் அற்ற நிலையிலும் சட்டவிரோத கடல் தொடர்புகள் ஊடாக வெளிநாடுகளில் இருந்து வந்து செல்வோரால் மன்னாரில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்படும் நிலையில் எதற்காக இந்தப் பதவியை ஏற்றுள்ளார் என்பது அனைவருடைய கேள்வியாக இருக்கிறது . இதற்குரிய பதிலை அவருடைய முகநூல் பதிவில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. அதன்படி மருத்துவர் சுகந்தன் மீது கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பணிப்பாளர்களின் செயல்பாடுகளை இல்லாதொழிக்க முற்பட்டவர் என்ற மோசமான குற்றசாட்டு பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மீட்பராக தான் பதவி ஏற்றுளதாகவும் சிலவாரங்களில் வடமாகாணத்தில் ஏற்கெனவே தனது திறமைகளை நிரூபித்துள்ள மருத்துவ நிர்வாகி ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த திறமையுள்ள நபர் யார் என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படாவிட்டாலும் இந்த பதவி ஏற்பு தொடர்பாக ""சிலோன் டுடே"" பத்திரிகையின் நிருபர் டிலாந்தி ஜெயமானேயின் பக்கசார்பான ஊடக அறிக்கை மூலம் பின்னணியில் இருப்பவர் யார் என்பது வெளியாகி உள்ளது. நிருபர் டிலாந்தி ஜெயமானேயின் அறிக்கையானது இந்த பதவி ஏற்பில் அரசியல்வாதிகளும் அவர்களின் அடியாட்களும் நின்ற புகைப்பட ஆதாரங்களை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மூடி மறைக்க முயன்றுள்ளது,


கொழும்பில் இருக்கும் இந்த டிலாந்தி ஜெயமானேக்கும் முல்லைத்தீவில் நடந்த நியமனத்துக்கும் என்ன தொடர்பு என்று ஆராய்ந்தால் இவர் ஊடக ஒழுக்கநெறியை மீறி சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் தகவல்களை உறுதி செய்யாமல் தொடர்ச்சியாக சிலோன் டுடே பத்திரிகையில் மருத்துவர் காண்டீபன் தங்கராசாவினால் தெரிவிக்கப்படும் தகவல்களை உண்மை என்று கருதி பதிவிடுபவர் என்பதை சிலோன் டுடே பத்திரிகையின் வாசகர்கள் அவதானித்துள்ளார்கள். மேலும் இதன் மூலம் ஜூலை மாதத்தில் மருத்துவ பட்டப்பின்படிப்பு நிலையத்தில் தனது பயிற்சியின் ஒரு கட்டத்தை பூர்த்தி செய்யும் மருத்துவர் காண்டீபன் தங்கராசா சூழ்ச்சிகள் மூலமாக அப் பயிற்சியின் மறு கட்டம் ஆரம்பமாவதற்கு இடையில் உள்ள குறுகிய சில மாதங்களுக்கு முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிப்பாளராக பதவி ஏற்கும் திட்டத்துக்கு மருத்துவர் விநோதன் துணைபோகிறார் என்பதும் அம்பலத்துக்கு வந்துள்ளது. மருத்துவர் காண்டீபன் தங்கராசா கடந்த காலத்தில் மன்னார் மாவட்ட சுகாதார பணிப்பாளராக கடமையாற்றிய மருத்துவர் பீரிஸை எந்த காரணமும் இன்றி பதவிக் கதிரையில் இருந்து தொழிற்சங்க செல்வாக்கை பயன்படுத்தி அகற்றிவிட்டே தான் மன்னார் மாவட்ட சுகாதார பணிப்பாளராக கடமையேற்றுக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவு மாவட்டமே இன்று சுகாதார சேவை வழங்கலில் இலங்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் கடுமையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக இன்னமும் பாதிக்கப் பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையே இலங்கையில் உள்ள அனைத்து மாவட்ட பொது வைத்தியசாலைகளில் மிகக் குறைந்த அளவாக 16 மருத்துவ நிபுணர்களை நியமிப்பதற்கான அனுமதிக்கப்பட்ட ஆளணியினைக் (approved cadre ) கொண்டிருக்கிறது. அதிலும் 8 வைத்திய நிபுணர்களே தற்போது நியமிக்கப்பட்டு கடமையாற்றி வருவதாகவும் அதிலும் ஒருவர் வாரத்தில் 1 நாளே வைத்தியசாலைக்கு சமூகமளிப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு மிகவும் நலிந்த நிலையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலையும் சுகாதாரசேவையும் இருப்பதற்கு காரணம் மருத்துவர் நியமனத்தில் தலையிடும் GMOA இன் செயல்பாடுகளே ஆகும் . மருத்துவர்களை நியமிக்கும் செயல்பாட்டில் யுத்தம் முடிந்து தசாப்தம் கடந்து விட்ட நிலையிலும் உள்ளக பயிற்சியை முடித்துக் கொண்ட மருத்துவர்கள் நியமனத்தில் வடக்கு கிழக்கில் நியமிக்கப்படும் மருத்துவர்கள் 1 வருடம் வேலை செய்தலே இடமாற்றம் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறி GMOA ஏனைய இடங்களில் நியமிக்கப்படும் வைத்தியர்கள் ஆகக் குறைந்தது 2 வருடம் வேலை செய்ய வேண்டும் என்ற விதியை மீறும்வகையில் செயற்பட்டு வருகிறது. இத்தகைய பிராந்திய பாகுபாட்டை பேணும் வைத்தியர்கள் நியமன அட்டவணையை நீக்கவேண்டும் என்று நான் பகிரங்கமாக கோரியதை தொடர்ந்து முன்னாள் சுகாதார அமைச்சர் இந்த அட்டவணையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததும் GMOA என்னை எதிரியாக பாவித்து சேறு பூசி இனவாதி என அழைத்து வருகிறது. இந்த அட்டவணையின் காரணமாகவே முல்லைதீவிலும் ஏனைய தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் நியமனம் பெறும் மருத்துவர்கள் குறைவான காலம் சேவையாற்றியதும் இடமாற்றம் பெற்றுச் செல்வதால் தென்பகுதியுடன் ஒப்பிடும் போது இப்பிரதேசங்களில் கடுமையான மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதைவிட மருத்துவ நிபுணர்கள் நியமனத்தில் GMOA மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. 

2016 ம் ஆண்டு முல்லைதீவில் மகப்பேற்று நிபுணர் நியமிக்கப்படாத நிலையில் தாய்மார் அம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவிக்கும் அபாயம் நிலவிய சூழ்நிலையிலும் இலங்கையிலேயே அதிகளவு கர்ப்பிணி தாய் இறப்புவீதம் இருந்தபோதும் கூட முல்லைத்தீவு மகப்பேற்று நிபுணர் வெற்றிடத்தை விட தென்பகுதியில் உள்ள சிறிய ஆதார வைத்தியசாலைகளில் 2 மகப்பேற்று நிபுணர்கள் முதலில் நியமிக்கப்பட வேண்டும் என்று GMOA அழுத்தத்தை பிரயோகித்து வந்தது. GMOA இன் யாப்பில் இல்லாத ஆனால் வல்லமை மிக்க GMOA இன் வடமாகாண இணைப்பாளர் என்று தன்னை அடையாளம் காட்டிவரும் மருத்துவர் காண்டீபன் தங்கராஜா முல்லைத்தீவின் இந்த இழிநிலையை அறிந்து இருந்தும் தனது எஜமான விசுவாசத்துக்காக மௌனம் சாதித்து வந்தார். இவரா முல்லைதீவில் பதவி ஏற்றதும் மாவட்டத்தை அபிவிருத்தி செய்யப் போகிறார் ? தமிழ் மக்களும் மருத்துவர்களும் பதவியை பெறுவதற்காக இவர் செய்யும் சூழ்ச்சிகளுக்கு பலிக்கடாவாகாமல் விழிப்புணர்வுடன் இருப்பதற்காக இந்தப் பதிவை பிரசுரிக்குமாறு அனைத்து ஊடகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்

No comments