செயலணிகள் நிச்சயமாக தமிழர்களின் இருப்பினை அழிக்கும்! மாவை

Mavai Senathirajah
கோத்தபாயவினால் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு செயலணிகள் குறித்து தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவிக்கையில்:-

கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக நிலம். வரலாற்றுப் பிரதேசம் இதனை நன்கு தெரிந்து கொண்ட சிங்கள பெருந்தேசியத்தலைவர்கள் காலங்காலமாக கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழர்களை வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

திருச்செல்வம் அமைச்சராக இருந்தபோது கோணேஸ்வரர் பூமியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்தார். அச்சமயத்தில் சேருவிலவைச் சேர்ந்த தேரர் எதிர்ப்பதால் அனுமதி அளிக்க முடியாது என்று டட்லி சேனநாயக்க குறிப்பிட்டு நிராகரித்தார். 

இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தேரர்களின் மதவாத சிந்தகைளுக்குள் ஆட்சியாளர்கள் கட்டுண்டு தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளார்கள். 

அதுபோன்று தான் கோத்தாபய ராஜபக்ஷவும் தனது ஆட்சியையும் சர்வாதிகாரப்போக்கையும் முன்னெடுப்பதற்காக தேரர்களின் ஆதரவை பெறும் வகையில் அவர்களின் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு தாரளமாக இடமளித்துள்ளார் என்பது வெளிப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இந்த செயலணிகள் நிச்சயமாக தமிழர்களின் இருப்பினை அழிப்பதையே இலக்காக கொண்டு செயற்படபோகின்றன. அதேபோன்று அந்த செயற்பாட்டிற்கு இராணுவத்தினைக் கொண்டு அடக்குமுறையும் அச்சுறுத்தலும் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் நோக்கமும் இருக்கின்றமையும் தெளிவாகின்றது.

மேலும், எமது மக்களின் இனப்பிரச்சினை பற்றி இந்த ஆட்சியாளர்களுடன் நாம் பேசுவதற்கு முனைப்புக் கொண்டிருந்தபோதும் கோத்தாபயவின் இத்தகைய செயற்பாடுகள் இனப்பிரச்சினைக்கு தீர்வு தரமாட்டேன் என்பதை மட்டுமல்ல தமிழர்களின் இருப்பிற்கே இடமளிக்க மாட்டேன் என்பதை சொல்லாமல்செல்லிவிட்டார்.

எவ்வாறாயினும் தமிழ் மக்களின் உரிமைகளையும் அவர்களின் பூர்விகத்தினையும் இழப்பதற்கு நாம் இடமளிக்கமுடியாது. அரசாங்கத்தின் இராணுவ மயமாக்கல் அதன் ஊடாக சிங்கள பௌத்தவாத்தினை விதைத்தல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எதிராக நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.

No comments