தமிழர்களின் தேசத்தில் அவர்களின் இருப்பினை மாற்றுவதே நிகழ்ச்சி நிரல் - கஜேந்திரகுமார்

Kajendrakumar

கோத்தபாய உருவாக்கிய செயலணிகள் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுகையில்:-

கொரேனா நெருக்கடிக்குள் இரண்டு செயலணிகள் அமைக்கப்பட்டிருப்பதை குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்த செயலணிகள் மூலம் தமிழர் தேசத்தில் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் சக்திகளை நசுக்குவதற்கான ஒரு பாசிசவாதபோக்கின் வெளிப்பாடாகவே நோக்கவேண்டியுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டப்படுத்துவதென்ற பெயரில் தமிழர் தாயகத்தில் பொலிஸார் மற்றும் படையினர் எவ்வாறு சோதனைச் சாவடிகளையும் உண்மைக்குப்புறம்பான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி அடிப்படை உரிமைகளை கூட மதிக்காது செயற்பட்டனர் என்பதனை அனைவரும் நன்கறிவார்கள்.

பாராளுமன்றத்தினை கூட்டாது, ஜனாதிபதி தனக்குள்ள நிறைவேற்று அதிகரத்தினை பயன்படுத்தி ஒருதலைப்பட்சமான தீர்மானங்களுடனான நிருவாகமொன்றே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்தச்சூழலில் அமைக்கப்பட்டுள்ள  ஜனாதிபதி செயலணிகள் நிச்சமாக கிழக்கு மாகாணத்தினை முழுமையாக சிங்கள மயமாக்குவதோடு ரூபவ்பௌத்த மதத்தின் பெயரால் கையகப்படுத்தும் நடவடிக்கைகளையே முன்னெடுக்கப்போகின்றது. தமிழர்களின் தேசத்தில் அவர்களின் இருப்பினை மாற்றுவதே பேரினவாத சக்திகளின் நிகழ்ச்சிநிரலாக இருக்கின்றது. இதற்கான சில நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விளையவுள்ளன.

இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோது தமிழர்கள் தமது தேசத்தினையும் இருப்பினையும் பாதுகாப்பதற்காக போராட விளைகின்றபோது அல்லது எதிர்ப்புக்களை தெரிவிக்க விளைகின்றபோது அதனைக் கட்டப்படுத்துவதற்காகவே இரண்டாவது செயலணி அமைக்கப்பட்டுள்ளது. அச்செயலணியானது தேசிய பாதுகாப்பு என்றபெயரில் தமிழனத்தினை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் என்பது தெளிவாகின்றது.

ஆகவே நாட்டினை இராணுவ சர்வாதிகார நிருவாகத்தினுள் வைத்துக்கொண்டு தமிழினத்தின் இருப்பை அழித்தொழிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை தெளிவாகின்றது. இதில் தமிழ் பேசும் மற்றொரு சமுகமான முஸ்லிம்களும் நிச்சயமாக பாதிப்படையப்போகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே ஒரு தேசத்தில் ஒருமொழிபேசும் சமூகமாக இருக்கும் முஸ்லிம்களும் இந்த விடயத்தில் விளித்துக்கொள்ள வேண்டும். அவர்களும் தமிழ் மக்களுடன் தமது இருப்பினையும் பர்துகாப்பதற்கான ஒன்றிணைய வேண்டும். இந்த சந்தர்ப்பத்தினை தவற விடுகின்றபோது இரு சமூகங்களினது இருப்புமே கேள்விக்குறியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

No comments