கொறானா வைரசோடு சிட்னியில் புகுந்த கருணாக்களா?

தற்போதைய கொறானா வைரஸ் இடர்கால நிலையில் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் அனைத்து நாடுகளில் இருந்தும் தாயகம் நோக்கிய அவசர உதவியாக எமது மக்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கிவருகின்றார்கள்.
இந்த வகையில் அனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடாகவும் அதன் துணை அமைப்புகள் ஊடாகவும் பல உதவிகளை தாயகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டு வருவ தை அனைவரும் கூர்ந்து கவனிக்கின்றார்கள்.
சிறிலங்கா அரசால் கைவிடப்பட்ட நிலையில் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதற்கான ஏற்பாடுகளை செய்யாத நிலையில் எமது மக்களின் இந்த உதவிகள் பாரிய வரவேற்பை பெற்றிருந்தது.
ஆனால் இத்தகைய உதவிகளை வழங்கிவரும் கட்டமைப்பை எப்படியாவது சிதைத்து விடவேண்டும் என துடிக்கும் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவகையில் சிலரின் நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றது.
குறிப்பாக ஒஸ்ரேலியா நாட்டில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டை சீர்குலைப்பதற்கு சிலர் ஈடுபட்டுவருவது விசனத்திற்குள்ளாக்கியுள்ளது.
எத்தனையோ சிரமங்களிற்கு மத்தியில் இந்த உதவியை செய்திருக்கின்றோம் என திருப்திகொள்ளும் நேரத்தில் அந்த உதவிகள் அனைத்துமே பொதுத்தளத்தில் பகிரங்கமாக படங்களுடன் பகிரப்பட்டுள்ள வேளையில் குதர்க்கமான குற்றசாட்டுக்களை முன்வைப்பது எதற்காக?
தற்போது வெவ்வேறு நபர்களுடன் தொடர்புகொண்டு கருணா முன்னர் சொன்ன அதே விதமான விசமத்தான குற்றசாட்டுக்களை இவர்கள் சொல்லிவருவதுதான் இன்னும் அதிர்ச்சி.
அதற்குள் தலைவரின் பிள்ளைகள் என்றும் மாவீரர்களை நெஞ்சங்களில் சுமப்பதாக சொல்லிக்கொண்டும் இந்த ஏமாற்றுத்தனம் எதற்காக?
தமிழ்த்தேசிய வானொலி என்றும் அதன் பின்னர் தமிழ்க்குரல் வானொலி என்றும் ஒரு வானொலியை உருவாக்கியும் தமிழ்க்குரலின் பிள்ளைகள் என்றும் இன்னொரு குழுமத்தையும் உருவாக்கி நியு சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் விக்ரோரியா மாநிலத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் பொய்யான செய்திகளை பரப்பி வருவது அதிர்ச்சியளிக்கின்றது.
இதன் பின்னால் நடந்துகொண்டிருக்கும் பொய்யான கட்டுக்கதைகளை ஏன் பரப்பவேண்டும்? இவர்கள் அரூபகரங்களின் கைகளில் விழுந்துவிட்டார்களா? தாங்களாகவே விழுந்தார்களா அல்லது வேறு ஆட்களால் கையாளப்படுகின்றார்களா என்பதே இப்போதைய கேள்வி.
அதுவும் விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்து அழித்த கருணாவின் நேர்காணலை “நான் துரோகி அல்ல” என்ற தலைப்பில்; காணொளியாக தமிழ்க்குரல் ஊடாக பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.
சில நாட்களுக்கு முன்னரும் “கருணா அம்மானின் 35 அடி பதாகை” என இன்னொரு செய்தியையும் அதே இணையதளம் பிரசுரித்திருக்கின்றது.
இந்த தமிழ்க்குரல் பற்றியும் தமிழ்ப்பற்றாளர்கள் சிலர் அதற்குள் உள்வாங்கப்பட்டு ஏமாற்றப்படுகின்றார்கள் என்றும் கடந்த காலத்தில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தோம்.
அவர்கள் இப்போது சொல்லும் குற்றசாட்டு என்ன?
சம்பந்தர், சுமந்திரன், சுரேஸ் பிரேமசந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோர் எமது விடுதலைப் போராட்டத்தை பற்றி தவறாக கதைத்தாலும் அதனை கடந்துபோகுமாறும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் எவரேனும் தவறுதலாக கதைத்தாலும் பகிரங்க கண்டன அறிக்கை விடவேண்டும் எனக் கேட்டிருக்கின்றார்கள்.
தாயகத்தில் ஏதாவது உதவிகளை செய்வதாக இருந்தால் தங்கள் உறவினர்கள் ஊடாக செய்யலாம் அல்லது விக்கினேஸ்வரன் ஊடாக செய்யலாம் அல்லது வேறு தனி நபர்கள் நிறுவனங்கள் ஊடாக செய்யலாம். அப்படி செய்யப்படும்போது அந்த உதவி வழங்குபவர்களில் எவராவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டாளராக இருக்கக்கூடாது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முதன்மை செயற்பாட்டாளர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கலாம் அல்லது விக்கினேஸ்வரனை ஆதரிக்கலாம். ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்ககூடாது.
அப்படியானால் இவர்களின் மறைமுக நோக்கம் என்ன?
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்பது கட்சி அரசியலை கடந்து அனைவருக்கும் பொதுவான செயற்பாட்டு தளத்தில்  தமிழர்களின் விடுதலைக்காக தொடர்ந்து செயற்படும். அதற்காக உண்மையான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களை இனங்கண்டு ஆதரவு அளிக்கவேண்டியதும் அவசியமானது. இத்தகைய அணுகுமுறையில் தொடர்ந்தும் செயற்படுவதே பொருத்தமானது என்பதே அனைவரதும் கருத்தாக இருக்கின்றது.
அதற்கேற்றவாறு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்களின் அனைத்துக் கிளைகளும் கூட்டுப்பொறுப்போடு செயற்பட்டு வருகின்றது.
இம்முறை தாயகத்தில் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களுக்கான ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய குழப்பங்களை வெவ்வேறு தளங்களில் ஏற்படுத்திவருவது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இத்தகையவர்களின் உண்மையான பின்னணியையும், அவர்களின் நம்பகத்தன்மை குறித்தும் ஆராய்ந்து பொய்மைகளை கடந்து சத்தியத்திற்கான பயணத்தில் தொடர்ந்தும் பயணிப்பதே பொருத்தமானது.
ஏனைய நாடுகளில் நடைபெற்றுவரும் இத்தகைய ஊடுருவல்கள் பற்றியும் விரிவான விடயங்களை அடுத்த பந்தியில் பகிர்ந்துகொள்வோம்.

No comments