நினைவேந்தலை எட்டிக்கூட பார்த்திராதவர் சுமந்திரன்?


விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூருகின்ற எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிராத சுமந்திரன், திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம் தேர்தல் நெருங்குகின்றது – தமிழ் மக்களை ஏமாற்ற நாங்கள் வந்துவிட்டோம் என்ற கருத்தையே சொல்லி நிற்கின்றது.

தமிழ் மக்களின் இருப்பு உறுதி செய்யப்பட்டு, இன அழிப்புக்கான நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரங்கில் இருந்து நீக்கப்பட வேண்டும்.”இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு கொடுப்பது மற்றும் கோட்டாபய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அவர்களுக்கு தமது கட்சியில் இடம் கொடுப்போம் என்றும், போராளிகள் தியாகங்கள் செய்தவர்கள் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

அவருடைய இந்தக் கருத்துகள் ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லுகின்றது. தேர்தல் நெருங்கிவிட்டது. ஆகவே, நாங்கள் ஏமாற்றுவதற்காக வந்துவிட்டோம் என்பதாகும்.

முன்னாள் போராளிகள் தியாகிகள் என்று சுமந்திரன் கூறுவது வேடிக்கையான விடயம். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தையோ அல்லது அவர்களின் அரசியல் போராட்டத்தையோ தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் வேலையில்லாத காரணத்தினால் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள் என்று விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய அவர்தான், இன்று போராளிகளை அரசியலில் இணைத்துக் கொள்ளப் போகின்றேன் என்று கூறுகின்றார்.

இவ்வாறு பேசிய சுமந்திரன் இன்று போராளிகள் தொடர்பில் வெளியிடும் கருத்து தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான முனைப்பே தவிர வேறு ஒன்றும் இல்லை.

விடுதலைப் போராட்டத்தில் மரணித்த விடுதலை போராளிகளை நினைவுகூறகின்ற எந்த ஒரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிராத சுமந்திரன், திடீரென முன்னாள் போராளிகள் மீது பாசம் பொங்கி வழிந்ததன் காரணம் தேர்தல் நெருங்கிவிட்டது என்ற விடயம் மட்டும்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை.

சுமந்திரன் போன்ற ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இவர்களை அரசியல் அரங்கிலிருந்து மக்கள் அகற்ற வேண்டும்.

தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசு ஏற்றுக் கொண்டால் தாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவோம் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்மைப்போடு, மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றிணைந்திருந்த நிலையில், சர்வதேசம் மற்றும் நாடாளுமன்றத்தில் அந்த அரசுக்கு எதிராக எழுந்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து முழுமையான ஆதரவை வழங்கியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

இருப்பினும், அரசியல் தீர்வையும், அடிப்படைப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் போன்ற எந்த ஒரு விடயத்தையும் அவர்களால் செய்து முடிக்க இயலவில்லை.

இவ்வாறான நிலையில் மீண்டும் கோத்தாவின் அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என்று சொல்வது, ஏற்கனவே கோட்டாபய அரசின் காலில் விழுந்து, இரகசிய உடன்படிக்கையை செய்துவிட்டார்கள் என்பதையெ தெளிவாகக் காட்டுகின்றது.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை மண்ணுக்குள் புதைக்கும் நடவடிக்கைகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடாக இருக்கப் போகின்றது. எனவே எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டியது கட்டாயம்.

தமிழர்களின் அரசியலும், வாழ்வியலும் தொடர்ந்து நிலைக்க வேண்டுமாக இருந்தால், தமிழ் இனஅழிப்புக்கு நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் இந்த வரைபடத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீக்கப்பட வேண்டும்” என்றார்.

No comments