சுமந்திரன் வெட்கம் கெட்டு பொய் சொல்கிறார்:சுரேஸ்!


தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.

ஓரிரு நாட்களுக்கு முன்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் ஒரு சில விடயங்களை கூறி இருக்கின்றார்கள்.

முக்கியமாக மீன்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதிகபட்சமாக ஆசனங்களுடன் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றும் ஒரு மாற்று அணியோ மாற்று தலைமையோ தேவையற்ற விடயங்கள் எனவும் கூறியுள்ளனர்.

இந்த நாட்டில் ஒரு இராணுவ ஆட்சி வர இருக்கிறது ஆகவே எதிர் கட்சிகள் பிளவடைந்து போயுள்ளது அதாவது ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்து போயுள்ளது.

ஆகவே நாங்கள் ஒரு பலமான சக்தியாக வருவதன் மூலம் சில சமயம் மீண்டும் ஒருமுறை நாங்கள் எதிர் கட்சித் தலைமையை பெற்றுக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் . அவ்வாறு பெற்றுக்கொள்வதன் ஊடாக பல விடயங்களை சாதிக்க முடியும் என்ற தோரணையில் சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த நான்கரை வருடங்களாக அல்லது யுத்தத்திற்கு பிற்பாடு தமிழ் மக்கள் ஒரு ஐக்கியத்தின் மேல் நம்பிக்கை கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் பல விடயங்கள் சாதிக்கலாம் என்பதை நம்பிக்கையாக கொண்டு அவர்களை நாடாளுமன்றம் அனுப்பி இருந்தார்கள்.

ஆனால் கடந்த நான்கரை வருட காலத்தில் கூறியது போன்று அல்லது இவர்கள் மக்களுக்கு கொடுத்த ஆணை அல்லது நம்பிக்கை அதன் அடிப்படையில் அவர்கள் ஏதாவது விடையங்களை சாதித்திருக்கிறார்களா என்ற ஒரு கேள்வி நிச்சயமாக இருக்கிறது. 

கடந்த நான்கரை வருட காலத்தில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது மூன்று ஏக்கர், நான்கு ஏக்கர் என்ற அடிப்படையில் ஒரு சில தடவைகள் காணிகள் விடுவிக்கப்பட்டதே தவிர ஆனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னும் முப்படைகளின் வசம்தான் இருக்கின்றது என்பதுதான் உண்மையான விடயம்.

இதே போன்றே அரசியல் கைதிகள் எவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக அரசாங்கம் முன்வந்து அவர்களுக்கு ஏதோ ஒருவிதமான மன்னிப்பை கொடுத்து அவர்களை விடுவித்ததாக இல்லை.

பல பேர் விடுவிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இருந்த அரசியல் கைதிகள் ஒன்றில் பிணையில் வெளி வந்திருக்கிறார்கள், இல்லாவிட்டால் அவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது, இல்லாவிட்டால் அவர்களுக்கு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு விஷயம் தான் நடந்து முடிந்துள்ளது.

இப்போதும் 91 அரசியல் கைதிகளுக்கு மேல் வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது அல்லது அங்கு இருந்துகொண்டு இருக்கின்றார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் சில அரசியல் கைதிகளை விடுவித்து விட்டோம் என்பது ஒரு அப்பட்டமான பொய்.எம.ஏ.சுமந்திரன் மீண்டும் கூச்ச நாச்சம் இல்லாமல் ஒரு பொய் சொல்வதையும், தான் சொல்வது பொய் என்று தெரிந்தால் கூட மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று பொய் பேசுவது என்பதை அவர் மிகத் திறம்பட செய்து வருகின்றார்.

No comments