நல்லாட்சியால் முடியவில்லை:நான் வருகின்றேன்-அங்கயன்!


யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் சர்ச்சைக்குரிய பல காணிகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அமைச்சர் எஸ். எம். சந்திரசேனவுடன் விசேட சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளாராம்.


1) கிளிநொச்சி ஆனைவிழுந்தான் வயற் காணி

2) கிளிநொச்சி ஜெயபுரம் தேவன்குளம் வயற் காணி

3) வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம், நாகர்கோவில் காணிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தபட்டமை

4) சரசாலை குருவிக்காடு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் இடப்பட்ட எல்லைக்கல்

குறித்த சந்திப்பின் ஊடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் உள்ள சர்ச்சைக்குரிய காணிகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. 

யாழ்ப்பாண மாவட்டத்தின் சுண்டிக்குளம், நாகர்கோவில் பகுதியில் 2015 மற்றும் 2016ம் ஆண்டு காலப்பகுதயில் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதிகளாக வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியாகியிருந்தன. இதனால் குறித்த பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் வணக்கஸ்தலம், தொழில் நிலையங்கள், இறங்குதுறைகள் குறித்த பிரதேசங்களிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. இரண்டு கிராமசேவையாளர் பிரிவுகள் முழுமையாகவும் மற்றுமொரு கிராம சேவையாளர் பிரிவின் ஒரு பகுதியும் குறித்த பகுதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளமையால் குறித்த பிரச்சினை நீண்டகாலமாக தொடர்ந்து வருகின்றது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனைவிழுந்தான் மற்றும் ஜெயபுரம் வடக்கு பகுதியில் 528 குடும்பங்களிற்கான வயல் நிலங்கள் விடுவிப்பது தொடர்பிலும் 35 வருடங்களிற்கு மேலாக தொடர்ந்து வந்துள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பிலும் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதுடன், எழுத்து மூலமாக சகல ஆவணங்களும் கையளிக்கப்பட்டது. குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மக்கள் தொடர்ந்து யுத்தம் காரணமாக செய்கை நிலங்களை பராமரிக்க முடியாது போனது. இந்த நிலையில் குறித்த பகுதிகள் வனவள பாதுகாப்பு திணைக்களம் தம்வசப்படுத்தியது.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆனைவிழுந்தான் பகுதியில் செய் காணிகளை துப்பரவு செய்து கொண்டிருந்த போது வனவள திணைக்கள அதிகாரிகளால் பிரதேச மக்களை கைது செய்ய முற்பட அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்ததை அடுத்து குறித்த காணி விடயம் உள்ளடங்கலாக மேலும் பல காணி சர்ச்சை விடையங்களை உள்ளடக்கி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று அமைச்சருடன் குறித்த சந்திப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த விடயம் தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில், கடந்த ஆட்சி காலத்தில் இவ்வாறான மக்களின் நீண்டகால பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் குறித்த விடையங்கள் தொடர்பில் மக்கள் தற்போது எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் மக்களின் நீண்டகால பிரச்சினைகளிற்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் இன்று அமைச்சருடன் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தேன். குறித்த சந்திப்பில் இக் காணி சர்ச்சைகளினால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன். அவர் குறித்த விடையங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

விரைவில் குறித்த பிரச்சினைகளிற்கு தீர்வு எட்டப்பட்டு மக்கள் தமது சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழ்வதற்கும், வாழ்வாதார தொழில்களை தடையின்றி மேற்கொண்டு வாழ்கையில் முன்னேறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். குறித்த விடையம் தொடர்பில் மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று எம் மக்களிற்கு நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார என அவர் விடுத்துள்ள  செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments