சி.வி கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்!


யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.


அவரின் முன் வைக்கப்பட்ட கேள்விகளும் பதிலும் தொகுப்பு  

கேள்வி–தேர்தல் நடவடிக்கைக்குமக்களிடம் நிதிஉதவிகோரியதை ஏனைய தமிழ் கட்சிகள் விமர்சிக்கின்றனவே?

பதில் – இது அச்சத்தின் அடிப்படையிலான விமர்சனம். எமது மக்களுக்கான அரசியல் போராட்டத்துக்கு மக்களிடம் நிதி உதவி கேட்பதை விமர்சிப்பதற்கு என்ன இருக்கிறது? தேர்தலுக்காக நாம் எவரிடமும் பின் கதவுகளின் ஊடாக பணம் வாங்கி எமது மக்களின் உரிமைகளை அடைமானம் வைக்கவில்லை. அதனால் எம்மிடம் பணம் இல்லை. அதனால்  வெளிப்டையாகவே எமது அரசியலை ஆதரிப்பவர்களிடமும் எம்மை நம்புபவர்களிடமும் உதவி செய்யுமாறு கூறினேனேன். இதில் கூச்சப்படவோ வெட்கப்படவோ எதுவும் இல்லை. 'நக்கினார் நாவிழந்தார்'என்பது ஒரு பழமொழி. இது தான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நடந்தது. இந்த தவறை நான் செய்யப்போவதில்லை. அதனால் தான் எமது மக்களிடம் உதவி கோரினேன். இதன் மூலம் நாம் மக்களுக்கு பொறுப்பு கூற கடமைப்படுகிறோம். இது மிகவும் முக்கியமானது. எந்த ஒரு காரியத்தையும் செய்யும் போதும் எமது மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் தார்மீகபொறுப்பு இதனால் எம்மை வந்து சேர்கிறது. அதே போல,எமது வெற்றியின் பங்காளிகளாக எமது மக்கள்  இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதன் மூலம் அமைகிறது. இது எம்மை கேள்வி கேட்கும் அவர்களின்  உரிமையை மேலும் வலுப்படுத்துகிறது.  மக்கள் நலநன முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சிகள் பொதுமக்களிடம் நிதி உதவி கோருவது பல நாடுகளிலும் நடைபெறும் ஒரு நிகழ்வுதான். உதாரணமாக,கடந்த வருடம் பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தலில் செலவுகளுக்காக ஜெரமிகோர்பின் தலைமையிலான தொழிற்கட்சி ' சிலருக்காக அன்றி,பலருக்காக என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி சாதாரண மக்களை நாடிச் சென்றிருந்தது. ஆகவே,நான் முதலில் கூறியபடி, மக்களிடம் நிதி உதவி கோரியமை தொடர்பில் வெளிவரும் விமர்சனங்கள் எல்லாம் அச்சத்தின் வெளிப்பாடுகளே.  

02. கேள்வி– கூட்டமைப்பில் உள்வீட்டு மோதல் உச்சமடைந்துள்ளது என்பது எதனைக் காண்பிக்கின்றது?

பதில் –குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் ஏட்டாபோட்டியும், சுயநலமும், தீயஎண்ணங்களும்,காழ்ப்புணர்வுகளும்,கபடத்தனங்களும்  ஏற்படும் போதுதான் ஒரு கூட்டுக்குடும்பத்துக்குள் சண்டையும் குழப்பமும் ஏற்படுகின்றது. அதன்பின்னர்,அந்த கூட்டுக்குடும்பம் நீடித்து நிலைத்திருப்பது கடினம்.  இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை அதுதான்.

02. கேள்வி– கூட்டமைப்பினை குறை கூறுவதை விட தங்கள் கட்சியிடம் மக்களிற்கு சொல்ல ஏதுமில்லையென்கிறதே கூட்டமைப்பு?

நாம் வெறுமனே விமர்சனம் செய்யவில்லை. எம்மிடம் மாற்றுவழிகள் இருக்கின்றன. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பிழைவிடும்போது அவற்றை அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதும் மக்களுக்கு எடுத்துச்சொல்வதும் முக்கியமானது .

தமிழ் தேசிய மக்கள் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் தயாரித்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாம் மேற்கொள்ளவிருக்கும் சில நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டுள்ளோம். தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதற்கு காரணம், தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒருசிலர் தாம் நினைத்தபடி முடிவுகளை எடுப்பதும் எந்தவிதமான ஆராய்வுகளும் இன்றி அவற்றை நடைமுறைப்படுத்தி வந்ததும் தான்.

உலகின் ஆதிக்குடிகளில் ஒன்றான எமது  இனத்தின் பிரச்சினை தொடர்பில் எவ்வாறு ஓரிரு நபர்கள் தாம் நினைத்தபடி முடிவுகளை எடுக்கமுடியும் ?   இது எத்தனை ஆபத்தானது ? ஆகவே, கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம். உலகம் பூராகவும் பரந்து வாழும் எமது மக்கள் மத்தியில் பலமேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள். அவர்களை எல்லாம் உள்வாங்கி நாம் செயற்படுவோம். எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உலகளாவிய சிந்தனை கூடம் ஒன்றையும்,மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் சமூகமேம்பாடுகளுக்காக ஆய்வு நிறுவனங்கள், அபிவிருத்தி நிதியங்களையும்  உருவாக்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையிலேயே நாம் செயற்படவேண்டும்.  நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே எமக்கு இனிவிடிவை கொண்டு வரும். யூதர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே அவர்களின் இன்றைய மேன்மை நிலைக்குகாரணம். உலகம் முழுவதும் பணத்துடன் அறிவையும் அவர்கள் மூலதனம் இட்டதுதான் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. நாமும் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும்.
அதேவேளை,எமதுஅரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை பெறுவதற்காக பாராளுமன்ற அரசியலை காத்திரமான முறையில் நாம் மேற்கொள்வோம். ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் எமதுமக்களின் நலன்களை கவனத்தில் கொள்ளாமல் அவற்றுக்குநாம் ஒருபோதும் முண்டுகொடுக்கமாட்டோம். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எமதுமக்களின் நலன்களை முன்வைத்துநாம் பேரப் பேச்சுக்களில் ஈடுபடுவோம். ஜனாதிபதி தேர்தலில் ஆதரவுகோரி வந்தார்கள். சிலநிபந்தனைகளை முன்வைத்தேன். தயங்கினார்கள். அப்படியானால் என்னாலும் முடியாது என்று கூறிவிட்டேன். சென்று விட்டார்கள்.  

ஆகவே, மேற்கூறிய அடிப்படைகளிலேயே எமது மக்களின் உரிமைகளை அடைவதற்கான எமது அணுகுமுறை ஏனைய எல்லா கட்சிகளையும் விடவும் மாறு பட்டுகாணப்டுகின்றது. 

03. கேள்வி–வடகிழக்கில் பெண் விகிதாசாரம் தேர்தல் அரசியலில் பேணப்படுவதில்லையென்ற குற்றச்சாட்டுபற்றி?

பதில் – எமது கூட்டணியில் யாழில் அனந்தியும் மீராவும் போட்டியிடுகின்றனர். வன்னியில் முன்னைய கல்வித் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் போட்டியிடுகின்றார். திருகோணமலையில் கண்மணி அம்மா போட்டியிடுகின்றார். தேர்தலில் போட்டியிட பெண் சகோதரிகள் முன்வரவேண்டும். வந்தால் மாகாணசபைத் தேர்தலில் அவர்களை நிறுத்துவோம். பெண்களுக்கு சம உரிமையும் சம அந்தஸ்தும் சமவாய்ப்பும் அளிப்பதில் நாம் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம்.  மீனாட்சி (மீன்-ஆட்சி) நடத்த நாம் அவர்களை வரவேற்கின்றோம். மீனாட்சிக்கு அவர்கள் முற்றிலும் உகந்தவர்கள் என்பது என் கருத்து.

No comments