பொதுநூலக எரிப்பு நினைவேந்தல் யாழில்?


தமிழர்களின் அறிவுப்பெட்டமாக திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகமானது எரித்து நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு மாலை 6 மணியளவில் எரியுண்ட பொதுநூலகத்திற்கு முன்பதாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே 20 ஆம் நூற்றாண்டின் 'தமிழ் கலாச்சார இனப்படுகொலை' என்று கூறப்படும் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39 ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு பொது நூலகம் எரிக்கப்படட போது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில் பதில் முதல்வர் தலைமையில் நூலக வளாகத்தில் இன்று அஞ்சலி செய்யப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதேபோன்று நூலகம் எரிக்கப்படட நினைவு நாள் நிகழ்வு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலும் நூலக நுழைவாயிலில் இடம்பெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழர் சுயாட்சி கழகம் என்ற குழுவின் தலைவி அனந்தி சசிதரன், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

No comments